கைம்மண் அளவு



ரசிகமணி என நேயத்துடன் விளிக்கப்படும், டி.கே.சி என்று அறியப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் இன்றிருந்தால் வயது 134. அவரது அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக  இருந்தவர் ல.ச எனப்பட்ட வித்வான் ல.சண்முகசுந்தரம். இவ்வாண்டு மார்ச் 24ம் நாள் இரவில், தமது 94வது வயதில் காலமானார்.

பழுத்த பழம். தமிழ் அவரை அங்ஙனம்  கனியச் செய்திருந்தது. செய்யுளை உரைநடை போல் வாசித்த புலவர் பெருங்கூட்டத்தில், அவர் பாட்டு போல படிப்பார். அவர் சொல்லும் விதத்தில், இருமுறை கேட்டால்  மனப்பாடமாகிவிடும்.‘வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலைகண் பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவிபெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே’என்பார் பிற்கால ஒளவையார்.

‘இரண்டு தரம் கேட்ட அளவிலேயே வெண்பாவைக் கற்றுக் கொள்ளாதவனையும், வெள்ளை ஓலையில் எழுதப்பட்டிருப்பதைக் கண் பார்த்து நிற்கையில் கையால்  எழுதாதவனையும், பெண் பாவி பெற்றாளே பெற்றாள், பிறர் நகைக்கப் பெற்றாளே’ என்பது பொருள். இதனால் தெரிய வருவது, ‘சொல்லும் விதத்தில் சொன்னால், எந்தப்  பாடலும் இருமுறை கேட்டாலே மனப்பாடம் ஆகிவிடும்’ என்பது. ஆக, பாட்டு சொல்லும் விதம் முக்கியமானது. இன்றைய புலவர் பலரும் அறியார் அதை.

நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாட்டில், ல.ச கோவைக்கு வந்தபோதெல்லாம் சந்தித்து, ‘ரசனை’ மாத இதழ் அலுவலகத்தில் ஒரு சிறு குழுவாக அமர்ந்து உரையாடி  இருக்கிறோம். மிக இனிமையான, சுவாரசியமான, ஆழ்ந்த புலமையுள்ள மனிதர். பாட்டுச் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழாசிரியர் பலரும் இன்று கல்லுக்  கடலையாகப் பாட்டை நெய்யூற்றி வறுக்கும்போது, கனிந்த வருக்கைப் பலாச்சுளையாக சேதப்படாமல் எடுத்துத் தருபவர் வித்வான் ல.சண்முக சுந்தரம். பாரதி அறநிலை  ரவீந்திரன், ‘ஆஹா... ஆஹா...’ என்று இசைக் கச்சேரி உணர்வை வெளிப்படுத்துவார்.

ரசிகமணி பிறந்த நாள் விழாக்கள் மூன்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். கடைசியாகப் போனபோது சிக்குன் குனியா பாதிப்புடன் பாதியில் திரும்பினேன். தென்காசியில்  ரசிகமணியின் வீடான ‘பஞ்சவடி’யில், ரசிகமணியின் பேரர்களான தீப.நடராசன், தீப.குற்றாலிங்கம் சாந்நித்யத்திலும் வித்வான் ல.ச.வுடன் உரையாடி இருக்கிறோம். அவரது சம  வயதினரான கரிசல் எழுத்தாள மேதை கி.ராஜநாராயணனும் ஒருமுறை உடனிருந்தார்.

தமிழுக்கு என்றோர் உள்ளுறை இனிப்பு உண்டு. நெல்லிக்காயின் இனிப்பு அது. எம்மொழிக்கும் இருக்கலாம்தான். எனினும் எம் மொழி பற்றித்தானே யாம் பேசவியலும்? தமிழ்ச்  சொற்கள் புணரும் விதமே இசைவின் இனிமையைப் பெருக்குவதாக இருக்கும். இன்றுள்ள வன்புணர்ச்சியாளர்கள் அந்த இயல்பு சுகம் உணர மாட்டாதவர். எல்லோரும்  ரசிகமணி வீட்டுப் பிசிறில்லாத வட்டத் தோசையையும் எள்ளு மொளகாப் பொடியையும் செக்கு நல்லெண்ணெயையும் சிலாகித்துக் கொண்டிருக்கும்போது, வித்வான் ல.ச.,  ரசிகமணி பாட்டுச் சொல்லும் விதம் பற்றி உரையாடுவார்.

அவர் பாட்டுச் சொல்லும் பாணியே வித்தியாசமாக இருந்தது. கையெடுக்காமல், கனிந்த மாம்பழத்தின் தோல் சீவுவதைப் போல, சுருள் சுருளாகச் சொற்கள் சந்தி பிரித்து வந்து  விழும். கம்பன் கவியை ‘செவி நுகர் கனிகள்’ என்பார். சொல்வார் சொன்னால், எந்த நல்ல கவிதையும் செவி நுகர் கனிதாம். வித்வான் ல.சண்முகசுந்தரம் அவர்களை  நினைவுகூர்வதற்காக, அவர் சொன்ன பாடல்கள் பலவற்றினுள் ஒன்று இங்கே...

ஒப்பிலாமணிப் புலவர் பாடியது. இவரது ஜனனம், தேசம், காலம் போன்ற வர்த்தமானங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழூர் அறிஞர், பேராசிரியர், முனைவர்  ச.வே.சுப்பிரமணியன் அண்மையில் பதிப்பித்த தனிப்பாடல் களஞ்சியத்துள் 7159 பாடல்கள் உண்டு. அவற்றுள் 1067வது பாடல். ஒப்பிலாமணிப் புலவர் பெயரின் கீழ்  தரப்பட்டவை 27 பாடல்களே.

இளம் பெண்ணொருத்தி, கணவனை அல்லது காதலனைப் பிரிந்து தனித்திருக்கிறாள், இரவெல்லாம். போருக்குச் சென்றானோ, பொருள் தேடப் பிரிந்தானோ, கல்விக்காகப்  போனானோ, தூதுவனாய் நடந்தானோ, வேறு அரசுப் பணி நிமித்தம் அகன்றானோ? பொழுது விடியுமானால் பல்வேறுபட்ட வேலைகளில் பொழுது போவது தெரியாது  அவளுக்கு! வாசல் தெளித்தலில் தொடங்கி, மாடு கறத்தல், தண்ணீர் இறைத்தல், கன்று காலி மேய்த்தல், சமைத்தல், தோட்டக்காட்டு வேலை என்று ஆயிரம் இருக்கும்! உறவுகள்,  தோழிகள், அக்கம் பக்கத்தவர் என உரையாடல் நடக்கும்.

எனவே பகலில் தனிமைத்துயர் அடைய மாட்டாள். ஆனால் துயரம், நீண்ட இரவுகள் தாம். இரவு நீண்டு நடக்கிறதே அன்றி, விடியலுக்கு உண்டான அறிகுறிகள் காணோம்.  கோழி கூவக் காணோம். புள்ளினம் சிலம்பக் காணோம். ஒழுங்கு மரியாதையாகக் கீழ்த்திசையில் உதிக்கும் சூரியன் எங்கே போய் ஒழிந்தான்? இந்த இரவு இப்பாடு  படுத்துகிறதே! பரிதியின் தேரோட்டியும் குதிரைகளும் போய்த் தொலைந்ததெங்கே?‘அரவம் கரந்ததோ? அச்சு மரம் இற்றுப்புரவி கயிறு உருவிப் போச்சோ? - இரவிதான்
செத்தானோ? இல்லையோ, தீவினையோ? பாங்கி எனக்குஎத்தால் விடியும் இரா?’

இது பாடல். தலைவி, தோழியை நோக்கி வருந்தி வினவுவதான பாவம். பாங்கி என்றால் தோழி. அரவம் எனில் பாம்பு. புரவி எனில் குதிரை. இரவி எனில் சூரியன்.
‘தோழி! இந்த இரவு எனக்கு எப்படி விடியப் போகிறது? சூரிய கிரகணம் போல, ராகு கேது எனும் பெரும் பாம்புகள் சூரியனை மறைத்துக் கொண்ட
னவா? ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் சூரியனின் தேர் அச்சு இற்று, குதிரைகள் கயிறு உருவிப் பாய்ந்து போய் விட்டனவா? இரவிதான் செத்து விட்டானா?  இல்லை வேறு ஏதும் தீவினையோ? எப்போது விடியும் இந்த இழவெடுத்த இரவு?’

இந்தப் பாடலைப் பெரியவர் ல.ச சொல்லிச் சிலமுறை கேட்டிருக்கிறேன். அவர் சொல்லும் பாடலின் தொனியை, பாவத்தை என்னால் எழுதிக் காட்ட இயலாது. ஷெனாயில்  இசைத்துக் காட்டவும் தெரியாது. ஓரளவுக்குச் சொல்லி வேண்டுமானால் காட்டலாம்.இது 1932ம் ஆண்டுப் பதிப்பான ‘தனிப்பாடல் திரட்டி’ல் கண்டவாறு இங்கே  தரப்பட்டுள்ளது. சென்னை - இட்டா பார்த்தசாரதி நாயுடு குமாரன் இ.கோவிந்தராஜுலு நாயுடு பதிப்பித்தது. காஞ்சிபுரம், மகாவித்வான் ராமசாமி நாயுடு உரை எழுதியது.  தமிழ்ப் பேராசிரியரும் சட்ட விரிவுரையாளருமான கா.சுப்பிரமணிய பிள்ளை 1939ல் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டும் பாடலை மேற்கண்டவாறே சொல்கிறது.

ஆனால், வித்வான் ல.ச பாடலைச் சொல்லும்போது, பாடபேதம் ஒன்று காட்டுவார். ‘இரவிதான் செத்தானோ? இல்லையோ தீவினையோ? பாங்கி எனக்கு எத்தால் விடியும்  இரா?’ என்பதை, ‘இரவிதான் செத்தானோ, வேறு வழிச் சென்றானோ? பேதை எனக்கு எத்தால் விடியும் இரா?’ என்று சொல்வார். அது இன்னும் கூடுதல் பொருளும் பாவமும்  பகருவதாக இருந்தது எமக்கு. அதுதான் ரசிகமணியின் பள்ளிக்கூடம் என்பது!

‘அரவம் கரந்ததோ? அச்சு மரம் இற்றுப் புரவி கயிறுருவிப் போச்சோ?’ என்று சொல்லிச் சற்று நிறுத்தி விட்டுச் சொல்வார் ல.ச, ‘‘ஆகா... அடாடா... என்னமா வருது பாத்தேளா
பாட்டு?’’ - அவரது தோய்வு, லயிப்பு நம்மையும் தீப்போலப் பற்றிக்கொள்ளும். ரசிகமணியை விட நாற்பதாண்டுகள் இளையவர். ரசிகமணி அமரரானது, அவரது 72வது வயதில்.  அந்தக் காலத்தில் வித்வான் பரீட்சை கொடுத்துத் தேற வேண்டுமானால், உண்மையிலேயே ஒருவர் வித்வானாக இருக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மகாவித்வான் தண்டபாணி தேசிகர் போன்றோரை நினைத்துப் பார்க்கலாம். ல.ச கோவை வந்ததோர்  சந்தர்ப்பத்தில் பாரதி அறநிலை ரவீந்திரனும் மரபின் மைந்தன் முத்தையாவும், ரசிகமணி பாணியில் பாட்டுச் சொல்லக் கேட்டு பதிவு செய்தார்கள், கிட்டத்தட்ட இரண்டு மணி  நேரம்.

நாவூறக் கேட்டிருக்கிறேன். ல.ச இப்படிப் பாட்டுச் சொல்வார் எனில் ரசிகமணி எப்படிச் சொல்லி இருப்பார்? ரசிகமணி பரம்பரையில் வந்த ஒரு படைப்பிலக்கியவாதி  கி.ராஜநாராயணன். தொடர் சங்கிலியின் மற்றொரு கண்ணி. ‘கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என்று போற்றப்பட்ட ஆளுமை. 94 வயதான அவரைப் பார்க்கவென்றே  கோவை விஜயா பதிப்பக அண்ணாச்சி வேலாயுதமும் நானும் போன மாதம் பாண்டிச்சேரி போனோம். மீசை வைத்த சிவபெருமான் போல, மீசை வைத்த கி.ராவை அன்று  பார்த்தோம். அரை நாள் பேசிக்கொண்டிருந்த அன்றும் ரசிகமணி பற்றிய செய்தியொன்று சொன்னார் கி.ரா. இங்கே அதைப் பகிர்ந்துகொள்வது என்பது இலக்கிய  அரசியலாகிவிடும்.

வித்வான் ல.சண்முகசுந்தரத்திடம் பாடல் கேட்டு வீட்டுக்கு வந்தால் ஒப்பிலாமணிப் புலவரைத் தேடத் தோன்றும். தோன்றியது எனக்கு. கண்ட இன்னொரு பாடல்:
‘ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்தகோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழிதிரண்டதோ? கங்குல் தினகரனும் தேரும்உருண்டவோ பாதாளத்துள்?’
இந்தப் பாடலும் மேற்சொன்ன பாடலின் பாவம்தான். ‘கடலின் அலையோசை அடங்காதோ? நான் வளர்த்த சேவற்கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதோ? அதுவும்  கூவ மாட்டாமல் கிடக்கிறதே! ஊழிக்காலம் திரண்டு விட்டதா இந்த இரவில்? சூரியனும் அவன் தேரும் பாதை பிறழ்ந்து, தவறிப் பாதாளத்தில் உருண்டு
போச்சோ?’

ஒப்பிலாமணிப் புலவரின் வெண்பாவை அடியொற்றிச் சென்றால், நாம் சென்றடைவது திருக்குறளின் ‘படர் மெலிந்து இரங்கல்’ அதிகாரம். பாடல் எண் 1168.
‘மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து, இராஎன்அல்லது இல்லாத் துணை’‘இந்த உலகத்து உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து காக்கும் இரவுக்கு என்னை அல்லாது வேறு யார்  துணை?’ இந்தப் பாடல் நுட்பமாக ஒரு உணர்வைச் சொல்கிறது... ‘எல்லோரும் உறங்குகிறார்கள், இரவு தனித்து இருக்கிறது. இரவுக்குத் துணையாக நான் மட்டுமே  விழித்திருக்கிறேன்’ என்பது. மிக நுணுக்கமாக தனிமைத் துயரும் பிரிவின் வேதனையும் உணர்த்தும் பாடல்.

போன தலைமுறை எழுத்தாளர் ஒருவர், அவர் காலத்தவரால் இமாலயத்துக்கு இணையாகக் கொண்டாடப்பட்டவர், சொன்னார் ஒரு நேர்காணலில், ‘திருக்குறள் நீதி நூல், அது  இலக்கியம் ஆகாது’ என்று. திருக்குறள் முழுமையாகக் கற்றிருக்க மாட்டார் போலும். கல்லாமல் கருத்துச் சொல்கிறவர் மீது நமக்கு இரக்கமே ஏற்படுகிறது.

சொன்ன குறளொன்று  போதாதா?ஒப்பிலாமணிப் புலவரைத் தொடர்ந்து திருவள்ளுவருக்கு வந்தால், அவர் நம்மைக் கைப்பிடித்து இட்டுச் செல்வது குறுந்தொகைக்கு. குறுந்தொகையின் ஆறாம் பாடல்;  நெய்தல் திணையில் பதுமனார் பாடியது. அவரை அடுத்து, பெரும்பதுமனார் என்று ஒருவரும் பரூஉ மோவாய்ப் பதுமனார் என்று வேறு ஒருவரும் இருந்திருக்கிறார்கள்.  பத்துப்பாட்டு - எட்டுத்தொகை நூல்களினுள் பதுமனார் பெயரில் கிடைக்கும் பாடல்  இது ஒன்றே!

பதுமனார் பாடல் இதோ...
‘நள்ளென்று அன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே!’

‘இருள் செறிந்து கிடக்கிறது இரவு. மக்கள் எல்லோரும் பேச்சடங்கினர். வெறுப்பின்றி, பரந்த இவ்வுலகமும் உறங்குகிறது. நான் ஒருத்தி மட்டுமே உறங்காமல் கிடக்கிறேன்’. என்ன  தன்னிரக்கம் பாருங்கள்!வித்வான் ல.சண்முகசுந்தரம் சொன்ன ஒரு பாடலின் பாவம் தொடர்ந்து பயணித்தால் அது நம்மை சங்க இலக்கியம் வரை இட்டுச் செல்கிறது. நினைவு  கூர்ந்தால் தற்கால சினிமாப் பாடலுக்கும். அது, பாடல் சொல்லும் திறன், உத்தி, அனுபவம், ரசனை. மேலும் அது கண்டறியா ரசிகமணியின் மேதைமை பாலும் இட்டுச்  செல்லும். அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள், பழக நேர்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ராஜாஜி, கல்கி, எம்.எஸ், ஜஸ்டிஸ் மகராஜன், ம.பொ.சி, ல.ச, கி.ரா என நீண்டதோர்  பட்டியல் அது. பெருமகனார் மட்டுமென்று இல்லை, பாமரர்களும் அவரை அனுபவித்திருக்கிறார்கள்.

வித்வான் ல.சண்முகசுந்தரம் எழுதி, 1970ல் வெளியான, இன்று வரை மறுபதிப்பு இல்லாத, ‘தமிழும் தாவரமும்’ என்ற நல்ல நூல் ஒன்று உண்டு. 220 பக்க அந்த நூலின் ஒளி நகல்  என்னிடம். அபூர்வமான புத்தகம்.அழிந்து வரும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் பற்றி எல்லாம் சுற்றுச்சூழலியலாளர் கவலைப்படுகின்றனர். எனக்கும் அது பற்றிக் கவலை  உண்டு. அது போல, தமிழில் மெய்யான புலமையும் தேர்ச்சியும் கொண்ட இனமும் அழிந்து வருகிறதே என்று கவலைப்படுகிறேன். மூலிகைத் தாவரங்கள் அழிந்து நச்சுக்  களைகள் வளர்ந்து மண்டிக் கிடக்கும் தோட்டமாகிப் போயிற்று எம் மொழி. வள்ளுவரை மேற்கோள் காட்டினால், ‘இளையதாக முள் மரம் கொல்க’.

‘எல்லோரும் உறங்குகிறார்கள். இரவு தனித்து இருக்கிறது. இரவுக்குத் துணையாக நான் மட்டுமே விழித்திருக்கிறேன்...’

தங்கத் துளிகள்

ஆபரணத் தங்கம் சுத்தமானதுதானா என்பதை வெறுமனே தேய்த்துப் பார்த்தெல்லாம் கண்டு
பிடிப்பது ரொம்பக் கடினம். இதற்கெனவே தற்போது xrf எனப்படும் விசேஷ இயந்திரங்கள் உள்ளன. தங்கத்துக்கு தரச் சான்று தரும் அமைப்புகள் பலவும் இந்த  இயந்திரங்களைத்தான் பயன்படுத்துகின்றன. இவை நகைகளின் மீது கதிர் ஒளிகளைப் பாய்ச்சி, நகையில் எவ்வளவு தங்கம் உள்ளது எனச் சொல்லி விடும்.

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்

ஓவியர்: மருது