குட்டிச்சுவர் சிந்தனைகள்



* உணர்வுகள் உருகி, உள்ளம் மருகி நேசித்த முன்னாள் காதலியை இனி எந்த நாளிலாவது காணும்போது, ‘கொஞ்சம் பொறுத்திருந்தா உன்னை எப்படிக் கொண்டாடியிருப்பேன்  தெரியுமா?’ என சொல்லுமளவு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.

  25 வயது வரை நாம் சொல்வதை நம் குழந்தைகளும், அதற்கு மேல் குழந்தைகள் சொல்வதை நாமும் கேட்டு வாழுமளவு பொறுப்பான குழந்தைகள் கொண்ட வாழ்க்கை  அமைய வேண்டும்.
* இனிமையாக இளமைக் காலம் அமைய, அதை மகிழ்ச்சியாக அசை போட நல்ல நாலு நண்பர்கள் கொண்ட எதிர்காலம் அமைதல் வேண்டும்.
* நல்ல மனிதர்கள் நாலு பேரை நமக்கும், நம்மை நாலு நல்ல மனிதர்களுக்கும் தெரிந்திருக்கும் வாழ்க்கை வேண்டும்.
* பெற்றோர்களுக்கு நோய் தாக்காத முதுமையும், பெற்ற குழந்தைகளுக்கு மனம் நோகாத இளமையும் அமைந்த வாழ்க்கை வேண்டும்.
* உதவிக்காக நம்மை புகழும் உறவுகளும், உதவி கிடைக்கவில்லையென நம்மை இகழும் உறவுகளும் இல்லாத வாழ்வு வேண்டும்.
* கணவன் முன் மண்டியிடாத சுயமரியாதையும், குழந்தைகள் முன் சண்டையிடாத சுயசிந்தனையும் உள்ள மனைவியோடு வாழ்க்கை வேண்டும்.
* குடும்பத்துக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குபவனும், தன் பிறந்த குடும்பத்தை மதிப்பவனுமான கணவன் அமைந்த வாழ்க்கை வேண்டும்.
* எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எத்தனை பேருக்கு சம்பளம் தருகிறோம் என்ற வகையில் தொழில் அமைந்த வாழ்வு வேண்டும்.
* நெருங்கிய உறவுகளைச் சுற்றிய கனவுகளும், அவர்கள் தந்த உற்சாக நினைவுகளும் நிறைந்த மனசு கொண்ட வாழ்வு வேண்டும்.
* அரசாங்க ஓய்வூதிய வயசுக்குப் பிறகு மண்ணுக்கு டாட்டா காட்டும்போது, வீட்டுக்கும் நாட்டுக்கும் கொஞ்சம் சொத்து விட்டுப் போகும் வகையில் வாழ்க்கை முடிய  வேண்டும்.

வெயில் காலம் வந்தாலே கண்ணீர் வரவழைக்கிற பிரச்னை, தண்ணீர் பிரச்னை. இந்தக் கோடை காலத்துல  தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம்னு சின்னச் சின்ன  யோசனைகள். நம்ம வீட்டுல தண்ணி அதிகமா  செலவாகுற  விஷயங்கள்னா அது குளிக்கிறது, பாத்திரம் துலக்குறது, துணி துவைக்கிறது, அப்புறம் வீடு கழுவறதுதான். எதுக்கு  குளிக்கவும் பாத்திரம் துலக்கவும் தனித்தனியா தண்ணீர்? சமையல் செஞ்சு அழுக்கான பாத்திரங்கள நம்ம உடம்புல கட்டிக்கிட்டு குளிச்சா பாதி தண்ணிய மிச்சம் பண்ணலாம்.  குளிச்சதுக்கு குளிச்ச மாதிரியும் ஆச்சு, குளியல் சோப்பால பாத்திரத்த  கழுவுன மாதிரியும் ஆச்சு.

பல வீடுகளில் என்னா பண்றோம்னா, தினம் குளிக்கிறோம்; வாரம் ஒரு தடவை வீடு கழுவறோம்.   எதுக்கு இப்படி வெட்டி வேலைங்கிறேன்? குளிக்கிறதுன்னு முடிவாகிப்  போச்சு... அப்புறம் அந்த கருமத்தை ஏன் பாத்ரூம்ல செஞ்சுக்கிட்டு? மொத நாள் வீட்டு ஹால்ல, ரெண்டாவது நாள் சமையல் ரூம்ல, அப்படியே டைனிங் ரூம், பெட் ரூம்னு  மாத்தி மாத்தி குளிச்சா, குளிச்ச மாதிரியுமாச்சு; வீட்ட  கழுவி விட்ட மாதிரியுமாச்சு.

அட ஏம்பா, பல்லு விளக்கிட்டு பைப்ப திறந்துவிட்டு வாய கொப்புளிச்சு தண்ணிய வேஸ்ட் பண்ற? பேசாம, ஒரு தம்ளர் தண்ணில பேஸ்ட்ட  கரைச்சு விட்டு, வாய்  கொப்புளிச்சுட்டு போ! எதுக்கு தனியா ரசம் வச்சு தண்ணிய வேஸ்ட் பண்ணணும்னு கேட்கிறேன்? சாம்பார மட்டும் செஞ்சு, காயையும் பருப்பையும் துணிய வச்சு வடிகட்டி,  அதையே சாம்பாராவும் ரசமாவும் பயன்படுத்துன்னு சொல்றேன்.

  நாட்டுல பல ஆண்கள் தண்ணிய  பயன்படுத்துறது டாஸ்மாக்லதான் என ஐ.நா. சபையின் அறிக்கை ஒண்ணு சொல்லுது. நான் என்ன சொல்றேன், ஏன் சரக்கோட தண்ணிய  மிக்ஸ் பண்ணி தண்ணிய வேஸ்ட் பண்ணுறீங்க? தண்ணிய கம்மியா ஊத்தி வழக்கமா தண்ணி சேர்க்கிற அளவுக்கு சரக்க மிக்ஸ் பண்ணுங்க, வசதியுள்ளவங்க பீர் கூட மிக்ஸ்  பண்ணுங்க!

உலகத்தின் பார்வையெல்லாம்  இந்தியாவின் பக்கம் இருக்குன்னு சொன்னாலும், நம்ம பிரதமரின் பார்வை என்னமோ இந்தியாவை விட கேமரா இருக்கும் பக்கம்தான்  இருக்கும்னு சொல்றாங்க. அது உள்நாட்டு பத்திரிகைங்க கேமராவா இருந்தாக் கூட பரவாயில்ல... பூரா வெளிநாடு டூர் போறப்ப எடுத்துட்டுப் போற கேமராவா இருக்கிறதுதான்  சங்கடமும் சங்கோஜமும்.

கல்யாண வீட்டுல ஒவ்வொரு போட்டோ ஃப்ரேம்லயும் எப்படியாவது வந்துடணும்னு ஓடி ஓடி போஸ் கொடுக்குற சின்னக் குழந்தைங்கதான் ஞாபகத்துக்கு வர்றாங்க  பிரதமரைப் பார்க்கிறப்ப! சரி, இது சோஷியல் மேட்டர், பார்த்துக்கலாம்னு விட்டா, பிரதமர் ஊர் ஊரா டூர் போறத  மேளம் கொட்டி தாளம் தட்டி கூடி கும்மியடிக்கிறாங்க  சோஷியல் மீடியாக்காரங்க. ‘பிரதமர் அடுத்த சுற்றுப்பயணத்தை ப்ளான் பண்ணவும், அடுத்த ட்ரிப்புக்கு  துணிய எடுத்துட்டுப் போகவும்தான் இந்தியா வர்றாரு’ன்னு  ஃபேஸ்புக்ல ஒருத்தன் லந்த பந்தா உருட்டுறான்.

‘போற போக்கப் பார்த்தா, பாரதப் பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமா இந்தியா  வந்தாருனு நியூஸ் வரும்’னு நம்ம  பசங்க ட்விட்டர்ல கலாய்க்கிறாங்க. இந்திய கிரிக்கெட்  அணி கூட  ஒவ்வொரு வருஷமும் இத்தனை நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்காது. பிரதமர் அதுக்கும் மேல அதுக்கும் மேலன்னு ‘ஐ’ பட விக்ரம் மாதிரி  கலக்கியெடுக்கிறாரு. எப்படியும்  இந்த ஆட்சி முடியறதுக்குள்ள ஆசியா, ஆப்ரிக்கா, அன்டார்க்டிகா,  செவ்வாய் கிரகம், விண்வெளி மற்றும் நிலாவுக்குக் கூட சுற்றுப்பயணத்த  முடிச்சுடுவாருன்னு நினைக்கிறேன்.

 எது எப்படியோ,  பிரதமரால ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு. இப்பவெல்லாம் எந்த  வீட்டுலயும்  வேலைக்குப் போகாம சும்மா ஊர் சுத்துற பசங்கள திட்டுறதே  இல்லையாம்... திடீர்னு வருங்காலத்துல அந்தப் பையன் கூட பிரதமராகிட சான்ஸ் இருக்கே!     l

ஆல்தோட்ட பூபதி