நீ பார்க்குற சைட்டை நான்தான் முடிவு பண்ணணும்!



நசுங்குமா நெட் நியூட்ராலிட்டி?

நீங்கள் பணமே கட்ட வேண்டாம்... ஆனாலும் உங்கள் போனில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்’ என அறிவிப்பு வெளியானது முதல் ஆச்சரியம்... ‘போங்கய்யா நீங்களும் உங்க ஃப்ரீ ப்ளானும்’ என பொதுமக்களே அதைப் போட்டுப் பொளந்து, பின்வாங்க வைத்தது இரண்டாம் ஆச்சரியம்... இரண்டும் நடந்திருக்கிறது  நம்மூரில்! அட, நெசமாவே நாமெல்லாம் அறிவாளியாகிட்டோமோ..?

இந்தியாவின் மிகப்பெரும் மொபைல் சேவை நெட்வொர்க்கான ஏர்டெல், அடிக்கடி இப்படி வடிவேலு கணக்காய் சட்டை கிழிய அடி வாங்குவது சகஜமாகி விட்டது. போன  வருட இறுதியில்தான் அவர்கள் வைபர், வாட்ஸப் போன்ற இணையவழி போன் சேவைக்கு தனியாக பில் போட நினைத்து, கடும் எதிர்ப்பு களால் பின்வாங்கினார்கள்.
அவர்களேதான் இப்போதும்... ‘குறிப்பிட்ட ஆப்கள் மூலம் பொதுமக்கள் இணையத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம். அதற்கான பில்லை அந்த ஆப்களை உருவாக்கிய  நிறுவனத்திடமே வாங்கிக்கொள்வோம்’ என அறிவித்தது ஏர்டெல். இதற்கு ‘ஏர்டெல் ஜீரோ’ எனக் கவர்ச்சி கரமாகப் பெயரும் வைத்தது.

‘‘பணம் கொடுப்பவர்களின் ஆப்பை இலவசமாகக் கொடுப்பீர்கள் என்றால், பணம் தர முடியாதவர்களின் ஆப்களுக்கு ஆப்புதானா?’’ எனக் கேட்டார்கள் சோஷியல் மீடியா  சிங்கக் குட்டிகள். ‘‘இது நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது’’ என கோஷம் வலுத்தது. இந்த ப்ளான்படி முதலில் தனது ஆப்பை இலவசமாகக் களமிறக்க முன்வந்த ஃப்ளிப்கார்ட்  தளம், பெருவாரியான மக்களால் புறக்கணிக்கப்பட்டது. அதன் ஆப்கள் அன் இன்ஸ்டால் செய்யப்பட்டன. ‘நான் வரல இந்த ஆட்டத்துக்கு’ என அவர்கள் பேக் அடித்தார்கள்.  பங்கு மார்க்கெட்டில் ஏர்டெல்லின் மதிப்பு 2.5 சதவீதம் குறைந்தது. அவ்வளவுதான்... இப்போதைக்கு அந்த மேட்டர் ஆஃப்!

எல்லாம் சரி, இந்த ப்ளானில் என்ன தப்பு? ‘நெட் நியூட்ராலிட்டி’ என்றால் என்ன? அது பாதிக்கப்பட்டால் நமக்கென்ன? - இதெல்லாம் சாமானியனுக்கு இருக்கும் சந்தேகங்கள்.
அதை முதலில் பார்ப்போம்...இணைய இணைப்பு என்பது, மின்சார இணைப்பு மாதிரி. மின்சார கனெக்‌ஷனுக்காக நாம் பணம் கட்டலாமே தவிர, அதன் மூலம் டி.வியை  இயக்கவும் ஃப்ரிட்ஜை இயக்கவும் தனித்தனியாக பணம் செலுத்தக் கூடாது அல்லவா? ‘ஃப்ரிட்ஜ் வேகமாக செயல்பட மேலும் அதிக பணம் கட்டு’ என்ற நிர்ப்பந்தமும் இருக்கக்  கூடாதுதானே? அதே மாதிரிதான் இதுவும். இணைய இணைப்புக்கு மட்டும்தான் பணம். அதில் நாம் எந்த வலைப்பக்கத்தைப் பார்க்கிறோம், என்ன செய்கிறோம் என்பதில்  எல்லாம் யாரும் தலையிடக் கூடாது. சுருக்கமாகச் சொன்னால், ‘என் இணையம் என் உரிமை’... இதுதான் நெட் நியூட்ராலிட்டி!

உலகப் புகழ் கூகுள் தளமாக இருந்தாலும் சரி, பக்கத்து விட்டு கோபால் சாரின் ப்ளாக்காக இருந்தாலும் சரி... அது ஒரே வேகத்தில் நமக்கு ஓப்பன் ஆக வேண்டும்.  கூகுள்காரர்கள் அதிக காசு கொடுக்கிறார்கள் என்பதற்காக அந்தத் தளம் மட்டும் வேகமாக வந்து விழும்படி செய்தால், பாமர வாடிக்கையாளன் அந்தத் தளமே கதியென்று  கிடப்பான். அது அவன் தலையில் கட்டப்படும். இதிலிருந்து தப்பித்து எல்லா இணையதளமும் ஒன்று என நிறுவுவது நெட் நியூட்ராலிட்டியின் சிறப்பு.

‘ஏர்டெல் ஜீரோ’ எனும் இந்த குறிப்பிட்ட ப்ளான், முற்றிலும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது என்கிறார்கள் இணைய வழி போராட்டக்காரர்கள். இந்திய தொலைத்தொடர்பு  ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அமைப்பும் இதையே வழிமொழிந்திருக்கிறது. இது தொடர்பாக ஏர்டெல்லிடம் இமெயில் விளக்கமும் கேட்டிருக்கிறது. ஆனால், ஏர்டெல்  தரப்பு இதற்கு சொல்லும் பதில், ‘சேச்சே... சும்மா பேசிட்டிருந்தேன் மாமா’ ரகம்.

‘‘இதற்கும் நெட் நியூட்ராலிட்டிக்கும் சம்மந்தமே இல்லை. இதுநாள் வரை ஃபேஸ்புக்குக்கு மட்டும், வாட்ஸப்புக்கு மட்டும் எனப் பல இன்டர்நெட் பேக்குகளை நாங்கள்  வைத்திருந்தோம். அதாவது, குறிப்பிட்ட ஒரு தளத்துக்கு மட்டுமான இணைய இணைப்பு. இதற்கான தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்திக் கொண்டிருந்தார்கள். அந்தத்  தொகையை சம்மந்தப்பட்ட தளத்தைச் சேர்ந்தவர்களே தரத் தயார் எனும்போது, வாடிக்கையாளர்களுக்கு அதை இலவசமாகக் கொடுக்கலாமே என முன் வந்தோம். இது  எல்லாருக்கும் பயன்படக் கூடிய திட்டம்!’’ எனச் சொல்லியிருக்கிறார் ஏர்டெல்லின் சி.இ.ஓ கோபால் விட்டல்.

ஏற்கனவே ஏர்டெல்லின் எம்.டி சுனில் பாரதி மிட்டல், ‘‘குழி தோண்டியும் டவர் வைத்தும் இணைய இணைப்பை நாங்கள் வழங்குகிறோம். ஆனால், கூகுள், ஃபேஸ்புக் போன்ற  நிறுவனங்கள் அதன் வழியே சுலபமாய் பணம் பார்த்து விடுகின்றன!’’ என ஆதங்கப்பட்டிருந்ததை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக, இணையதளங்களிடம் இருந்து எதையாவது கறக்கத் துடிக்கின்றன இணைய இணைப்பு நிறுவனங்கள். அந்த வகையில் இது முதல் முயற்சி அல்ல. ஆந்திராவில் இணைய  இணைப்பு வழங்கும் ப்ளூ வைஃபி எனும் நிறுவனம், டொரன்ட் மூலம் படம் டவுன்லோடு செய்வதற்கென தனியாகக் கட்டணம் வசூலித்து பரபரப்பு கிளப்பியது. எதிர்ப்புகளை  வாங்கிக் கட்டிய பின்தான் அதைக் கைவிட்டது. சமீபத்தில் ரிலையன்ஸ் மற்றும் ஃபேஸ்புக் இணைந்து, ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’ எனும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.  ரிலையன்ஸ் சிம் வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆப் இலவசமாய் இயங்கும்.

இது இன்னும் பயன்பாட்டில்தான் உள்ளது. கூகுள் மிக விரைவில் ஏர்டெல்லோடு இணைந்து கூகுள் ப்ளஸ், ஜிமெயில் போன்றவற்றை இலவசமாக்கத் திட்டமிட்டிருக்கிறது.  இவர்கள் எல்லாம் காசைக் கொடுத்து நம் போனுக்குள் வந்து உட்கார்ந்து விட்டால், நாளை புதிதாய் எந்த இணையதளமும் வளர்ந்து வர முடியாமல் போகும். ‘நாலு நண்பர்கள்  ஆரம்பித்தார்கள்... நாலு லட்சம் கோடி சம்பாதித்தார்கள்’ எனும் ஃபேஸ்புக் கதையெல்லாம் இனி நடக்க வாய்ப்பே இல்லை.

‘‘இதையெல்லாம் சிந்தித்து இலவசங்கள் வேண்டாம் என்று தவிர்க்க, எதிர்க்க நம் மக்கள் முன்வர வேண்டும். அதற்கு இப்போதிருப்பதை விட அதிகளவு தொழில்நுட்ப  விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை!’’ என்கிறார்கள் இணைய நிபுணர்கள்.தவிர்க்க வேண்டியது இணைய இலவசங்களை மட்டும்தானா?

ஆலோசனை சொல்லுங்க!

Loading...

இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி பற்றி முறையான சட்ட திட்டங்கள் இதுவரை கிடையாது. அப்படி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது டராய். இதற்காக  அவ்வமைப்பு பொதுமக்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்கத் துவங்கியிருக்கிறது. ஜஸ்ட் 20 கேள்விகள்... ஆனால் அவை விவரிக்கப்பட்டிருப்பது மொத்தம் 118 பக்கங்களில்.  அதைப் பொறுமையாகப் படித்து ஏப்ரல் 24க்குள் விடை தர வேண்டுமாம். கேள்விகளுக்கு, http://www.trai.gov.in/WriteReaddata/ConsultationPaper/Document/OTT-CP-27032015.pdf
பதில்களை அனுப்ப, advqos@trai.gov.in

- கோகுலவாச நவநீதன்