செலக்‌ஷன்



பார்த்த உள்ளூர் பொண்ணெல்லாம் மாடர்னா இல்லைன்னு சொல்லிட்டே... இப்ப வெளியூர் பொண்ணப் பார்த்துட்டு வந்திருக்கோம். இவ மட்டும் என்ன? சாதாரணமா  புடவை கட்டிட்டுத்தானே வந்தா... இவளையும் பிடிக்கலைன்னு சொல்லப் போறியா?’’ - மகனிடம் கேட்டாள் அனிதா.
``இல்லம்மா...

இந்தப் பொண்ணை  எனக்குப் பிடிச்சிருக்கு... பேசி முடிச்சிடுங்க!’’ என்றான் விக்னேஷ்.``என்னடா சொல்றே..?’’ - கண்களை அகல வியந்தாள் அனிதா.``இவ எப்பவும் புடவை  கட்டுறவ இல்லைம்மா... சுடிதார்... ஜீன்ஸ்... டாப்ஸ்... இப்படி மாடர்னா டிரஸ் பண்றவதான்... நமக்காக இப்படி சம்பிரதாயமா புடவை கட்டிக்கிட்டு வந்து நின்னிருக்கா!’’
``எப்படிச் சொல்றே...? இவள முன்னமே உனக்குத் தெரியுமா?’’ - அனிதாவின் குரலில் ஆச்சரியம்!``சுத்தமா தெரியாது...’’

``பின்னே..?’’``அம்மா... சேலை கட்டி நிக்கிறப்போ அந்தப் பொண்ணு கைய கவனிச்சீங்களா? நொடிக்கொரு தரம் கொசுவத்தை `டக் இன்’பண்றதும்... அடிக்கடி கீழே குனிஞ்சு  குனிஞ்சு புடவை நழுவுதான்னு பார்க்கிறதும்... முந்தானையை முன்னூறு முறை சீர் செய்யறதும்... அவ கை கொஞ்ச நேரமாவது சும்மா இருந்துச்சா? இல்லையே..! அவளுக்கு  அன்னைக்குத்தாம்மா யாரோ புடவையைக் கட்டி விட்டிருக்காங்க!’’ - விக்னேஷ் புட்டுப் புட்டு வைத்தான்.`இந்தக் காலத்துப் பிள்ளைகள்தான் என்னமா வாட்ச் பண்றாங்க!’ என  மலைத்து நின்றாள் அனிதா!

கே.எம்.சம்சுதீன்