அரை உப்பு



காலை ஆறு மணி... கண்ணன் டீ ஸ்டால்...சரக்கு மாஸ்டர் சங்கரன் டேஸ்ட் பார்க்கக் கொடுத்த முதல் வடையை வாயில் போட்டார் முதலாளி கண்ணப்பன். ஏதோ சொல்ல  வந்தவர், கடையில் பெருகியிருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு சங்கரா... சீக்கிரம் முதல் செட் மாவைப் போட்டு எடு!’’ என்றார்.அடுத்த இருபது நிமிடத்தில் நூற்றுக்கணக்கான மெதுவடைகள் தயாராகி, எட்டு மணிக்குள் விற்றுத் தீர்ந்தன.

எதேச்சையாக மீந்துபோன ஒரு வடையை தனது டீயுடன் சுவைத்த சங்கரன் பதற்றத்துடன் ஓடி வந்தார் முதலாளியிடம்.‘‘அய்யா... வடையிலே இன்னிக்கு அரை உப்பா  போச்சுது. மன்னிச்சுக்குங்க.!’’‘‘பதறாதே சங்கரா... மொதல் வடையிலயே இதை நான் கண்டுபுடிச்சிட்டேன். ஆனா, காலையில வந்த கூட்டமெல்லாம் ஐம்பது வயசைக்  கடந்தவங்க.

வாக்கிங் முடிச்சு வந்தவங்க. அவங்களுக்கு அரை உப்பு இருந்தா நல்லதுதான். ஆனா, அடுத்த செட் மாவுல உப்பை சரியா போட்டுரு. இல்லாட்டி ஸ்கூல் பசங்க,  காலேஜ் பசங்ககிட்ட நாம திட்டு வாங்க முடியாது... ஆமா!’’ என்றார் கண்ணப்பன். அந்தக் கடையின் வெற்றி ரகசியம் மாஸ்டருக்கு இப்போது புரிந்தது..

 எஸ்.எஸ்.ராஜேஷ்