சமூக அடுக்கின் கடைசிப் படிக்கட்டுகள்



வதைபடும் புதிரை வண்ணார்கள்

இந்தியா என்பது ‘வர்ணங்களால்’ வரையப்பட்ட சித்திரம். தேசத்தின் வேர்கள், கிளைகளென அத்தனை அங்கங்களிலும் அந்த வர்ணங்கள் ஊடுருவி சிவந்ததொரு நிறத்தை நம்  தேசத்துக்கு தந்திருக்கின்றன. புறக்கணித்தல், ஒதுக்குதல், விலக்கப்படுதல் என பல்வேறு சூத்திரங்களின் கலவையில் உருவான வர்ணம் அது. பல நூறு ஆண்டுகள் ஆகியும் அதன்  தன்மை குலையாத அளவுக்கு சக்திவாய்ந்த வர்ணமாக அது இருக்கிறது. 

சமூகக் கட்டுமானத்தில் படிநிலை அடுக்குகளை உருவாக்கி, அதன் உச்சத்தில் அமர்ந்து ஆள்வதுதான் இந்த வர்ணத்தின் சூட்சுமம். காலங்காலமாக படிகளைத் தாண்டாத  சமூகங்கள், தங்களுக்கு மேல் அண்ணாந்து பார்க்காமல், தங்களுக்குக் கீழே இருக்கும் சமூகங்களை நசுக்கி இன்புறப் பழகி விட்டன. அதன் நீட்சி, அடித்தட்டுப் படியில்  நிர்ப்பந்திக்கப்பட்ட தலித் சமூகங்களையும் விடவில்லை என்பதே சோகச் செய்தி. புதிரை வண்ணார்கள் அப்படி வதைபடும் சமூகத்தினர்தான்!

அரசிதழ் அடையாளப்படுத்துகிற அத்தனை ஜாதிகளுக்கும் கீழாக இருப்பது துரும்பர் எனப்படும் புதிரை வண்ணார் சமூகம். தலித் சமூகத்துக்கு துணி வெளுப்பதும், அவர்களின்  மரணச் சடங்குகளில் முன்நின்று நடைபாவாடை விரிப்பதும், தலித் மக்களுக்கு சவரம் செய்வதும், அம்மக்களின் வீடுகளில் மிஞ்சும் உணவைப் பெற்று உயிர் வளர்ப்பதுமே  இவர்களின் வாழ்க்கை. தொட்டால் மட்டுமல்ல...

 பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகம். அரசு, ஆய்வாளர்கள் என எவரின் ஏடுகளிலும் இடம்பெறாத இம்மக்களின் வாழ்க்கையையும், துயரங்களையும்  பதிவுசெய்து ‘எச்சம் மிச்சம்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கி அதிர வைத்திருக்கிறார், புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனருமான ஆண்டோ. இவர், ‘புலி  யாருக்கு’, ‘தும்பலில் இன்று குடியரசு தினம்’ உள்ளிட்ட ஆவணப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர். துரும்பர் விடுதலை இயக்கம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

புதிரை வண்ணார்கள், சமூக அடுக்கின் கடைசிப் படிக்கட்டுகள். பிற சமூக மக்களுக்கு சலவை செய்து தந்து, சடங்குகளில் பங்காற்றுகிற வண்ணார் சமூகத்துக்கும், புதிரை  வண்ணார்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள் தலித் மக்களுக்கு மட்டுமே சேவையாற்றுவார்கள். ஜாதி இந்துக்கள், இவர்களைப் பார்ப்பதைக் கூட தவிர்க்கிறார்கள்.  1932 வரை, பகலில் இவர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை நடக்க நேர்ந்தால், ஒரு தென்னை ஓலையை தரையில் தேய்த்து வருகையை உணர்த்தியபடி நடக்க  வேண்டும். இந்தக் கொடுமைகளை எல்லாம் வாக்கு மூலங்களாகக் கேட்கும்போது நெஞ்சம் அதிர்கிறது.

“புதிரை வண்ணார்கள், தலித் மக்களுக்கு குடிஊழிய முறையில் வேலை செய்கிறார்கள். சுடுகாட்டை ஒட்டி அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக மிகச்சிறிய வீடுகளில்  வாழ்கிறார்கள். அன்றாடம் வன்கொடுமைகளையும், பாலியல் அத்துமீறல்களையும் சந்திக்கிற இம்மக்களுக்குக் குரல் இல்லை. நீதி இல்லை. நல்ல உடை போடக்கூடாது, தலை  சீவக்கூடாது, விடியும் நேரத்தில் வெளியில் வரக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

இவர்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் 26 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேரும், கடலூர்  மாவட்டத்தில் 60 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேருக்கு மட்டும்தான் ‘புதிரை வண்ணார்கள்’ என்று குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால் துரும்பர் விடுதலை இயக்கம் எடுத்த கணக்கெடுப்புப்படி இந்த 3 மாவட்டங்களில் மட்டும் 29,438 பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்காக கடந்த  தி.மு.க அரசால் தொடங்கப்பட்ட நலவாரியம் செயல்படாமல் கிடக்கிறது...” என்கிறார் ஆண்டோ.

அழுக்குப் படிந்த உடையோடு, தலையில் துணி மூட்டையைச் சுமந்துகொண்டு தென்னை ஓலையை இழுத்து சத்தம் எழுப்பியபடிச் செல்லும் பெண்ணிடம் இருந்து விரிகிறது  படம். நைட்டி அணிந்து, தலைவாரி துணி எடுக்கச் சென்றதற்காக தலித் பெண்கள் சேர்ந்து, ‘வண்ணாத்திக்கு என்னாத்துக்குடி பசப்பல்’ என்று கேட்டு அடித்ததாக கலங்கும்  விழிகளோடு சொல்கிறார் பழையனூர் சாந்தி. ‘‘புதிரை வண்ணார் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதும், பிரச்னை பெரிதானால் கட்டப் பஞ்சாயத்தில் சிறு
தொகையை அபராதமாக விதித்து குற்றவாளிகளைத் தப்ப வைப்பதும் சாதாரணமாக நடக்கிறது...” என்கிறார் புதிரை வண்ணார்கள் நிலை குறித்து களப்பணி செய்துள்ள  சகோதரி அல்போன்சா.

“எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். ஒருநாளு எம்புள்ளைய, ‘எச்சச்சோறு திங்கிற பயலே’ன்னு திட்டினதைப் பொறுக்கமுடியலே. இனிமே இந்த அடிமை வேலை வேணாம்னு  முடிவு செஞ்சுட்டேன். பம்பை அடிக்கப்போவேன். வாத்து மேப்பேன். ஆட்டத்துக்குக் கூட போறதுண்டு...” என்று பெருமையாகச் சொல்கிறார் துரும்பர் நகர் துலுக்கானம்.

தூக்குப்போட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்களை சுத்தம் செய்வது, பெண்கள் பூப்பெய்தும்போது மிஞ்சுகிற துணிகளைத் துவைப்பது, கர்ப்பிணிகள்  இறந்துவிட்டால் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுப்பது போன்ற வேலைகளையும் இச்சமூகப் பெண்களே செய்ய வேண்டும்.

ஆரணி அருகே வடவெட்டி கிராமத்தில் ஒரு தலித் இளைஞன் மேற்கொண்ட பாலியல் தாக்குதலில் சிறுமூளை சிதைந்து குழந்தையைப் போல மாறிவிட்டாள் சுமதி. பல  ஆண்டுகளாக நடக்கும் அந்த வழக்கையே மறந்துவிட்டது அந்தப்பெண்ணின் குடும்பம். விழுப்புரம் மாவட்டம் எசாலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி எழிலரசி,

வயதுக்கு வந்த  பெண்ணின் ரத்தம் காயாத துணிகளை துவைத்துத் தருமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதை அழுகையினூடாக சொல்லும்போது நமக்கு இதயம் நடுங்குகிறது. ளையங்கோட்டை  ஊராட்சி ஒன்றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் அ.கு.மணி, ‘‘நேர்ல பாக்கும்போது ‘வாங்க சார்’னு சொல்வாங்க. பின்னாடி, ‘வண்ணான் போறான்  பாரு’ம்பாங்க... இதெல்லாம் பழகிப்போச்சு...” என்று அலுத்துக் கொள்கிறார்.

நாதஸ்வரக் கலைஞரான ஏர்வாடி பன்னீர்செல்வம், “ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில எல்லாம் பரிசும் பாராட்டும் கொடுத்து புகழ்றாங்க. நாங்குனேரி தாலுக்காவில மட்டும்  புதிரை வண்ணான் வாசிக்கக்கூடாதுன்னு விரட்டுறாங்க...” என்று வருந்துகிறார். தலித் சமூகப் பெண்ணைக் காதலித்து மணம் முடித்ததால் தானும், தன் குடும்பமும் பட்ட  சிரமத்தையும், வாங்கிய அடிகளையும் பற்றிப் பேசுகிறார் வடவெட்டி சக்தி. 

தலித், கிறிஸ்தவ களப்பணியாளர்களும் புதிரை வண்ணார்களின் துயர வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சிவகாமி ஐ.ஏ.எஸ்,  தலித் சுப்பையா போன்றோர் குமுறலோடு தங்கள் கருத்தைப் பதிவு செய்கிறார்கள். கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாலும், அங்கேயும் உள்சபைகள், புதிரை வண்ணார்களை  தனிமைப்படுத்துவது பற்றியும் பதிவு செய்கிறது இந்தப்படம்.

“புதிரை வண்ணார்களைக் கொத்தடிமைக் கொடுமையில் இருந்து மீட்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்திடம் மனுக் கொடுத்தோம். மறுநாளே விளக்கம்  கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். ஆனால் மாநில அரசு இன்றுவரை சிறு ஆய்வுகூட நடத்தவில்லை” என்கிறார்கள் துரும்பர் விடுதலை இயக்கத்தினர்.

பாரம்பரியத் தொழில் விடுத்து, இசைக்கலைஞனாக மாறிவிட்ட வடவெட்டி மெய்யழகனின் உக்கிரமான விடுதலை கானத்தோடு படம் நிறைவுறுகிறது. கல்வியிலும்,  அங்கீகாரத்திலும் பின்னடைந்து கிடக்கும் குரலற்ற ஒரு சமூகத்தின் சமகால அவல வரலாற்றை ரத்தமும், சதையுமாகப் பதிவு செய்திருக்கிறது ‘எச்சம் மிச்சம்’. இந்த சாட்சியத்தின்  முன் நாகரிக சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்!நல்ல உடை போடக்கூடாது, தலை சீவக்கூடாது, விடியும் நேரத்தில் வெளியில் வரக்கூடாது என்றுஏகப்பட்ட  கட்டுப்பாடுகள்.

- வெ.நீலகண்டன்