சானியா இப்போது நம்பர் 1



“எத்தனையோ வெளிநாடுகளுக்குப் போய்விட்டு நாடு திரும்பியிருக்கிறேன். ஆனால், இம்முறை நம்பர் 1 அந்தஸ்தோடு தாய்மண்ணை மிதிக்கிறேன். இது பெருமிதமான தருணம்’’
- கடந்த புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது சானியா மிர்சா நெகிழ்ச்சியோடு சொன்னது இது. இரட்டையர் டென்னிஸில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கும்  முதல் இந்தியப் பெண் சானியா.

பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் இப்போது ஆடி  வருகிறார் சானியா. அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கிறது இந்த ஜோடி. கடந்த வாரம் அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற்ற ஃபேமிலி சர்க்கிள் கப் போட்டியில்  கோப்பையை வென்றபோது நம்பர் 1 இடத்தைக் கைப்பற்றினார் சானியா. ‘உலகத்தின் உச்சத்தில் இருப்பதுபோல இந்த நிமிடத்தில் உணர்கிறேன்’ என உற்சாகத்தோடு  சொன்னார் அவர்.

‘‘என் அக்காவுக்கு இது சிறுவயது கனவு. நம்பர் 1 இடத்தை அடைவது கடினம் என்பது தெரியும். அதற்கான பாதையும் பயணமும் சுலபமல்ல என்பதும் அவளுக்குத் தெரியும்.  ஆனால் இது ஒன்றும் சாதிக்க முடியாத விஷயம் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அந்த உத்வேகம்தான் அவள் ஜெயிக்கக் காரணம்’’ என்கிறார் சானியாவின் தங்கை  அனம் மிர்சா.

சானியா அளவுக்கு சர்ச்சைகளால் சூழப்பட்ட வீராங்கனை இந்தியாவில் கிடையாது; டென்னிஸிலும் கிடையாது. முதல் திருமண ஏற்பாடுகள் நின்று, பாகிஸ்தான் கிரிக்கெட்  வீரர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்ததும் அவரது தேசபக்தி மீதே கேள்வி எழுப்பப்பட்டது. மாலிக்கோடு துபாயில் வாழும் அவர், இந்திய வீராங்கனையாகவே இன்னமும்  போட்டிகளில் ஆடுகிறார். ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்காக விளையாடினார்.

சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தின் தூதராக அவர் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சைகள் எழுந்தன. டென்னிஸ் என்பது நிறைய அர்ப்பணிப்பைக் கேட்கும் விளையாட்டு. தினம்  6 மணி நேரப் பயிற்சி, 2 மணி நேர உடற்பயிற்சி செய்யாமல் விளையாட முடியாது. நாடு விட்டு நாடு பறந்தப்டி இருக்க வேண்டும்.

எந்த ஊரில் எது பகல், எது இரவு என்பதே  மறந்துபோகும். கோப்பையோடு அவர்கள் சிரிப்பது தெரியும் அளவுக்கு, விமர்சிக்கும் பலருக்கும் அதன் பின்னே இருக்கும் வலி தெரியாது. ஆனாலும் சானியா புன்சிரிப்போடு  சொல்வது... ‘‘இன்னும் பல பெண்களை டென்னிஸ் விளையாடச் செய்ய இந்த நம்பர் 1 அடையாளம் தூண்டுதலாக இருக்கும்!’’

- அகஸ்டஸ்