அழியாத கோலங்கள்



சினிமாத்துறை பற்றிப் புரியாதவர்களுக்கு... அதிலும் என் போன்ற சராசரிகளுக்கு மட்டும்... உளவாளி என்று சொல்வார்களே? அது போல் என்னிடம் இருந்து ஒரு Inside Information...‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பார்கள். ஒருவன் திறமையை மற்றொருவன் ஒப்புக்கொள்ளாதிருப்பதுதான் சினிமாவில் சரியான முறை. இன்றைய சாருஹாஸனை கணக்கில் எடுக்காதீர்கள்!

கால் ஒடிந்து, வலுவிழந்து... அடுத்த போட்டியில் பங்குகொள்ளும் தகுதியை இழந்து... ஐபிஎல் ஒளிபரப்பில் வீல் வீல் என்று சத்தமிட்டே தற்புகழ்ச்சி பரப்பும் நவ்ஜோத் சிங் சித்து போன்றவன். பங்களாக்களில் பத்து தேய்க்கும் தொழிலாளி அளவுகூட பாத்திரங்களுடன் ஒன்றிடத் தெரியாத ஒரு குணச்சித்திரம்... நூறு மீட்டர் ஓட்ட நட்சத்திர நடிகர்களுடன் எப்படிப் போட்டி போட முடியும்?

கல்லூரியில் படித்த அரைகுறை டிரிக்னாமெட்ரியையும் கால்குலஸையும் ஒரு புளியோதரையைக் கலப்பது போல் கலந்து, அதைக் கொண்டு தேசிய விருது பெறுவது எப்படி என்று யோசித்து, தமிழ்ப் பாதை அதற்கு பயன்படாது என்பது புரிந்து, ‘உள்ளூர் மாடு விலை போகாது’ என்ற பழமொழி அறிந்ததும் கிரேக்க, லத்தீன் மொழிகளில் முனைவர் பட்டம் பெறுவதுபோல், கன்னட மொழிப் படத்தில்... கடைசி பெஞ்சு மாணவன் போல் விருது பெற்றவன்.

இதில், கமல் சகோதரன்... சுஹாசினியின் தந்தை என்ற உறவுகளைப் பயன்படுத்தி பல இயக்குநர்களிடம் பல சினிமா நடிப்பு பைத்தியங்களுக்கு சின்னச் சின்ன பாத்திரங்களுக்கு சிபாரிசு செய்து எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிக்கொள்வேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, டி.ராஜேந்தர் வரிசையில் நான் சிபாரிசுக்குப் பலரை அழைத்துச் சென்ற இயக்குநர்களில் எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஒருவர்.

அவர் எங்கெங்கெல்லாம் உதவி இயக்குநராக உழன்று முன்னுக்கு வந்தார் என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை கே.பாலசந்தர் குழுவுடன் இவர் மலேசியா, சிங்கப்பூர் போனார். நான் வழியனுப்பச் சென்றபோது இவரை சந்தித்தேன். பின்னால், இவருடைய ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படம் வெற்றி அடைந்ததும் இவர் ஒரு வெற்றி இயக்குநரானதும் பல சின்னச்சின்ன வேஷங்களுக்கு பல இளைஞர்களுக்கு சிபாரிசுக்குப் போனதிலும், இவர் என்னையும் சில படங்களில் நடிக்க அழைத்ததிலும் நாங்கள் நண்பர்களானோம். இவரிடம் உதவியாளராக செயல்பட்டவர்கள் பலர் பின்னால் பிரபல இயக்குநர்கள் ஆனார்கள். பிரபல இயக்குநர் ஷங்கர், ராஜேஷ் ஆகியோர் உதாரணங்கள்.

அவருடைய வாரிசு விஜய் இன்றைய இளைய தளபதியாக வளர்ந்து வலம் வருவதற்கு இவர்தானே காரணமாக இருக்க முடியும்! சாருஹாசன் திரைப்படத்திற்குள் நுழைவதற்கு வேண்டுமானால் தம்பி கமலஹாசனை காரணம் காட்டலாம். இத்தனை இளைஞர்களை இயக்குநராக பிரபலங்களாக்கியவர், நடிப்புத் துறைக்கு தன் மகனை மட்டும் தயார் செய்தது அவருடைய கெட்டிக்காரத்தனமாகத்தான் இருக்க வேண்டும்.

நான் அவர் இயக்கிய ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு படத்தில் இன்றைய பிரபல இயக்குநர் ஷங்கர் துணை இயக்குநர். நடித்ததாகவும் ஞாபகம். அன்றொரு நாள் நானும் வித்யாவும் டப்பிங் தியேட்டரில் சந்தித்தபோது, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஷங்கரும் மேற்பார்வை செய்தார்கள்.

நான் வழக்கம் போல் ஒரு கடி ஜோக்கை ஆரம்பித்தேன்... ‘‘டப்பிங் தியேட்டரில் சத்தம் தவறுகளின்றி ஒழுங்காகப் பதிவு செய்ய எந்த மாதிரி ‘லென்ஸ்’ உபயோகப்படுத்த வேண்டும்?’’‘‘என்ன சார் உளருறீங்க? போட்டோகிராபிக்கு போயிட்டீங்களே!’’ என்றார் இயக்குநர் எஸ்.ஏ.சி.நான் சொன்னேன்... ‘‘நமக்கு வேண்டியது ‘சைலன்ஸ்’ ’’ என்றேன்.எல்லோரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள், ‘‘அறுவை..!’’ என்று.இயக்குநர் எஸ்.ஏ.சி, ‘‘சாரு அண்ணனை நான் நடிக்கறதுக்காகக் கூப்பிடுறதில்லை... இப்படி ஏதாவது சொல்லி நம்ம டென்ஷனை ரிலீஸ் பண்ணிருவார்!’’ என்றார்.

சினிமா இயக்குநர்களுக்கு ஒரு முக்கியமான திறமை தேவை. அது, திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பது.நடிகர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லவர் மறைந்த திரு கே.பாலசந்தர் அவர்கள். ஒரு கமல், ஒரு ரஜினி என அவர் ஒருவரால்தான் இரு வல்லவர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. உலக அளவில் ஆஸ்கர் விருது பெறக்கூடிய ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டுபிடிக்க ஒரு மணிரத்னம் தேவைப்பட்டது.சிறந்த இயக்குநர்களாக வளரக்கூடிய உதவி இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை இயக்குநர் திரு எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மட்டும்தான் இருக்குமோ?

இத்தனை இளைஞர்களை இயக்குநராக பிரபலங்களாக்கியவர், நடிப்புத் துறைக்கு தன் மகனை மட்டும் தயார் செய்தது அவருடைய கெட்டிக்காரத்தனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஹேர்...ஹோமியோ!

இளநரைக்கு பரம்பரை ஒரு காரணம். காசநோய், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் கோளாறுகள், வைரஸ் மற்றும் காளான் தொற்று, ஊட்டச்சத்துக் குறைவு, மன உளைச்சல், தூக்கமின்மை என ஏராளமான காரணங்கள் உண்டு. காரணம் புரிந்து சிகிச்சை தந்தால், இதை சரி செய்வது சுலபம். உணவில் கறிவேப்பிலை, கேரட், பீட்ரூட், பனை வெல்லம், எள், கேழ்வரகு, பேரீச்சை, ஆப்பிள், வாழை என சேர்த்துக் கொள்ளலாம். ஹோமியோபதியில் இதற்கு ‘வெஸ்பேடின்’ என்ற மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உடல்வாகு அடிப்படையில் வேறு சில மருந்துகளும் சிறந்த பலன் தரும்.

முடிக்கு தேங்காய் எண்ணெய்தான் சாலச் சிறந்தது. ஆலிவ் ஆயில், வெஜிடபிள் ஆயில் சில இடங்களில் உபயோகிக்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெய் ஏற்றது. எண்ணெய்கள் ஆரோக்கியமான முடியை மேலும் வளர்க்க உதவும். ஆனால் வழுக்கையை குணப்படுத்தாது. ஹோமியோபதி மருத்துவத்தில் ஆர்னிகா மிகவும் பிரலபமானது. ஸ்பெயின், துருக்கி நாடுகளில் விளைகிறது.

அதோடு கேந்தாரிஸ், ஜபரோந்தி கலந்த மருந்துகள் முடி வளர்ச்சிக்கு உகந்தவை என மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. (முடிவளமும் சருமப் பொலிவும் - டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம். விலை: ரூ.150/-, எண்.6, லாயிட்ஸ் II லேன், ஹேமமாலினி மண்டபம் எதிரில், அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. பேச: 044-28113300.)

(நீளும்...)

சாருஹாசன்
ஓவியங்கள்: மனோகர்