வேற வழியில்ல... நல்லவனா இருந்தே ஆகணும்!



எங்கேயோ பார்த்த முகம்

ஜான்விஜய்

கலகலப்பு’ படத்தில் வில்லன் போலீஸ், `எனக்குள் ஒருவ’னில் கனவு மாத்திரை வியாபாரி, `திருடன் போலீஸி’ல் காமெடி ரவுடி என ஜான்விஜய்க்கு அப்ளாஸ் வாங்கிக் கொடுத்த கேரக்டர்கள் நிறைய!போரூர் கோபாலகிருஷ்ணா தியேட்டரில் ஒரு ஷூட்டிங். அங்கே துவங்கி, வேளச்சேரி வீடு வரை பின்தொடர்ந்து, அரை நாளாய் நீடித்தது நம் சந்திப்பு.

‘‘இவன் பேர் வேம்பு.. ரெண்டு வயசு ஆகுது. இவனோட அம்மா பேர் தமயந்தி. அதுக்கு 8 வயசு!’’ - தனது கோல்டன் ரெட்ரீவர் செல்லங்களை நமக்கும் அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுகிறார் ஜான்விஜய்...‘‘எங்க அம்மாவுக்கு நாகர்கோவில். அப்பாவுக்கு திருநெல்வேலி. ஆனா, நான் சென்னைவாசிதான். என்னோட 4 வயசுலயே அப்பா இறந்துட்டாங்க. என்னை மட்டுமில்ல... எங்க சித்தி குழந்தைகளையும் கூட படிக்க வச்சவங்க எங்க அம்மாதான். சென்னை எம்.சி.சியில சேர்ந்தேன். ஃபர்ஸ்ட் இயர்லயே ராகிங் பண்ணி மாட்டிக்கிட்டு, காலேஜை விட்டு வெளியே வந்துட்டேன்.

 அப்புறம், லயோலால விஸ்காம். அப்போ அந்தப் படிப்பை யாருக்கும் தெரியாது. இதுல போயி விழுந்துட்டானேனு அம்மாவுக்கு கவலை! லயோலால `ஓரம்போ’ டைரக்‌டர்ஸ் புஷ்கர் - காயத்ரி என்னோட செட். விஷால், விஜய் ஆண்டனி, அனுவர்த்தன்னு பெரிய குரூப்பே பழக்கமாச்சு.

நான் படிக்கறப்பவே பார்ட் டைம் வேலை பார்த்தவன். என் ஃபீஸை நானேதான் சம்பாதிச்சுக் கட்டுவேன். படிச்சு முடிச்சதும் ‘ஆப் டி.வி’ங்கற புரொடக்‌ஷன் ஹவுஸ்ல வேலைக்கு எடுத்துக்கிட்டாங்க. தூர்தர்ஷன்ல சில புரோக்ராம்ஸ் பண்ணோம். சன் டி.வியில் `இளமை புதுமை’ புரோக்ராம் எல்லாம் நாங்க செய்ததுதான்.

அப்படியே நிறைய தயாரிப்புகள்ல கிரியேட்டிவ் டைரக்டரா  வொர்க் பண்ணியாச்சு. அடுத்த கட்டமா காஸ்மிக் ஸ்டூடியோன்னு தனி நிறுவனம் ஆரம்பிச்சேன். தமிழ்ல முதல் ரியாலிட்டி ஷோ கான்செப்ட் நான் கொண்டுவந்ததுதான். அடுத்ததா, ரேடியோ ஒன்ல கிரியேட்டிவ் ஹெட்டா சேர்ந்தேன். சினிமா செலிப்ரிட்டிஸ் எல்லாரையும் அழைச்சிட்டு வந்து அப்போ நான் பண்ணின கிரியேட்டிவ் புரோக்ராம்ஸ் எல்லாமே ஹிட்.

அந்த டைம்லதான் என்னோட கிளாஸ்மேட்ஸ் புஷ்கர்-காயத்ரி `ஓரம்போ’ படம் ஆரம்பிச்சாங்க. என் லுக்குக்கு வில்லன் ரோல்தான் செட் ஆகும்னு என்னை வில்லனாக்கிட்டாங்க. அதே சமயத்துல நான் சரத்குமார் சாரோட `தலைமகன்’ல நடிச்சிருந்தேன். அது முதல்ல ரிலீஸ் ஆச்சு. மலையாளத்தில் லால் சாரோட நடிக்கிற அளவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் என்னைக் கொண்டு போச்சு.

இசைஞானி இளையராஜாவை அங்கிள்னுதான் கூப்பிடுவேன். அவரோட ‘திருவாசகம்’ புராஜெக்ட்ல புரொடக்‌ஷன் டிசைன்ஸ்ல வொர்க் பண்ணியிருக்கேன். ஒரு ஆட்டோக்காரரை பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போனது மாதிரி எனக்கு ஹைப் கொடுத்தது மணிரத்னம் சாரோட  `ராவணன்’தான்.

`மௌனகுரு’வில் நான் பண்ணின அந்த வில்லன் கேரக்டர் ஆடியன்ஸ் மத்தியில் நல்லா ரீச் ஆச்சு. இப்போ அதை இந்தியில முருகதாஸ் சார் ரீமேக் பண்ணிட்டு இருக்கார். என் கேரக்டரை அங்கே அனுராக் காஷ்யப் பண்றார்னு கேள்விப்பட்டேன்.  `திருடன் போலீஸ்’ பார்த்துட்டு காமெடியும் எனக்கு செட் ஆகுதுனு நிறைய பேர் சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. எனக்கு போலீஸ் கெட்டப்தான் செட்டாகும்னு எல்லாரும் நினைப்பாங்க. இதுல காமெடி திருடனா நடிச்சது எனக்கே புதுசு.

எனக்கு லவ் மேரேஜ். ரேடியோ ஒன்ல வேலை பார்த்தப்ப, ஆபீஸ் பக்கத்துலயே ஒரு சேனல். மாதவி அங்க நிகழ்ச்சி தயாரிப்பில் இருந்தாங்க. அப்ப ஆரம்பிச்ச நட்பு, காதலாச்சு. லவ்வுக்கு அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டு, சந்தோஷமா மாதவிக்கு கால் பண்றேன்... `தொகுதியில் இருக்கோம்’ங்கறாங்க. `பொலிடீஷியனோட பொண்ணா’ன்னு அப்பதான் ஷாக் ஆனேன். என்னோட மாமனார் டி.கே.எஸ். இளங்கோவன். அவங்க வீட்டுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. `யாரோட தயவும் இல்லாமல் முன்னேறி வந்திருக்கே. நிச்சயம் நீ என் மகளையும் நல்லா வச்சிருப்பே’ன்னு சொல்லி, கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க.

எங்க வீட்டு குட்டி இளவரசர் பெயர் பரிதி இஷா. பரிதினா சூரியன், இஷான்னா ஜீஸஸைக் குறிக்கும். சமையல்ல நான் எக்ஸ்பர்ட். என்னை விட கிச்சன் குயின் என் மனைவி. ரொம்ப நல்லா சமைப்பாங்க. கேக் பிரமாதமா ரெடி பண்ணுவாங்க. ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் கேக் தயாரிச்சு, சினிமா ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் கொடுத்து அனுப்புறது வழக்கம்.

இதுவரை அம்பது படங்கள் நடிச்சிருப்பேன். போலீஸ், ரவுடி, வில்லன்னு இருந்த நான் காமெடியனா ஆனது  எப்படினு எனக்கே தெரியலை. ரொம்பக் கொடூர வில்லனா நடிச்சு பேரெடுக்கணும். அதான் என் லட்சியம்.  அதுக்காக, வில்லனாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கலை. ஒரு எம்.ஆர்.ராதா மாதிரி... பாலையா மாதிரி...

வில்லன், காமெடியன்னு ரெண்டிலும் கலக்கணும். தமிழ் சினிமாவில் வில்லனுக்கான இடம் இன்னும் காலியாகவே இருக்குங்கறது என் ஃபீலிங். அதனாலதான் அதை முதல் ஆப்ஷனா வச்சிக்கறேன். சினிமாவுல வில்லனா நடிச்சா மக்கள் என்னை வில்லனாத்தான் பார்ப்பாங்க. அதனால, வேற வழியில்ல... நிஜத்துல நல்லவனா இருந்தே ஆகணும்!’’

எனக்கு போலீஸ் கெட்டப்தான் செட்டாகும்னு எல்லாரும் நினைப்பாங்க. காமெடி திருடனா நடிச்சது எனக்கே புதுசு!

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்