பிரதமர் தந்த முதல் கார்!



நம் நாடி நரம்பெங்கும் பின்னிப் பிணைந்துவிட்ட கார் என்றால் ‘மாருதி 800’தான். போன வருடம் ஜனவரி மாதமே இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாடலின் முதல் கார் எங்கே? அதுதான் இப்போது ஹாட் மேட்டர்!

 1983, டிசம்பர் 14ம் தேதி... குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பல் சிங் என்பவரிடம் மாருதி 800ன் முதல் கார் விற்கப்பட்டது. அப்போது அதன் விலை 47,500 ரூபாய். ஹர்பல் டெல்லிவாசி. இந்தியன் ஏர்லைன்ஸில் பணிபுரிந்தவர். அன்றைய பிரதமர் இந்திரா கையால், சாவியை வாங்கினார்.27 ஆண்டுகளாக இந்தக் காரை அவர் ஒரு குழந்ைத போல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார் என அந்த ஏரியாவே பேசுகிறது.

2010ல் ஹர்பல் இறந்து போக, அநாதையாகக் கிடந்திருக்கிறது ‘முதல் 800’! ஹர்பலின் மகள்கள் இருவரும் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பதால், இதைப் பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.  இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் வலம் வர, சேகரிப்பாளர்கள் இதற்காக லட்சங்களும் கையுமாக போட்டி போடுகிறார்கள். ஆனால், இந்தக் கார் மியூசியத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஹர்பல் குடும்பத்தினரின் விருப்பம். இதற்கு மாருதி நிறுவனமும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

- பேராச்சி கண்ணன்