ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 16

‘‘நூற்றி எட்டு என்கிற எண்ணை ஔவையோடு தொடர்புபடுத்தி அந்த நண்பர் பேச ஆரம்பித்தார். முன்னதாக நூற்றி எட்டுக்குள் மறைந்திருக்கும் சிறப்பை தெரிந்துகொள்ளச் சொன்னார்... ‘ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்களை ஒன்று சேர்த்தால் 48 வரும். கிரகங்கள் ராசிகளாகி நட்சத்திரங்கள் மூலமாகவே மனிதர்களை ஆட்சி செய்கின்றன.

அப்படி மனிதர்களை ஆட்சி செய்யும் கால வட்டம் அறுபது ஆண்டுகள் எனும் ஒரு சுற்றளவைக் கொண்டது. இதனாலேயே அறுபது வரும்போது மணி விழா கொண்டாடும் ஒரு வழக்கம் தோன்றியது. இந்த அறுபதுடன் அந்த நாற்பத்தி எட்டை கூட்டிட, 108 வரும்.இந்த 108க்குள் வருஷம், கிரகம், ராசி, நட்சத்திரம் அவ்வளவும் அடக்கம். மகா கணபதி மேல் பக்தி கொண்டு தன் இளம்பருவத்தை தத்தம் செய்து முதுமையை வேண்டிப் பெற்று 108 ஆண்டுகள் வாழ்ந்த ஔவை, பின் மகா கணபதியாலேயே கைலாயத்தை அடைந்த அருள் மூதாட்டி. இந்த வருடம், கிரகம், ராசி, நட்சத்திரங்களால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை.

எனவே 108 என்கிற எண் தனக்குள் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களோடு, பூஜ்ஜியத்தையும் கொண்டு அதன் பெருகிய அம்சங்களுக்குள் ராசி, நட்சத்திரம், கோள், மாதம் என்கிற சகலத்தையும் கொண்டுள்ளது. எனவே, ஒருவர் 108 முறை ஒரு நாமத்தைச் சொல்லும்போது, அதன் பெருகிய அம்சங்கள் அவ்வளவுக்கும் அந்த நாமம் செல்கிறது. எனவேதான் துதிகளை 108 எனும் எண்ணிக்கைக்குள் அடக்கினர்’ என்றார்.

இந்த பதிலுக்குள் இருக்கும் விஷயங்களைக் கடந்து, இந்த 108க்குள் சில ரகசியச் சிறப்புகள் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இன்று அபரிமிதமான மனித சக்தி காரணமாக பெரிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து பல புதிய வழிமுறைகள் தோன்றியுள்ளன. அந்த நாளில் இந்த வழிமுறைகளும் விஞ்ஞானமும் இல்லாத நிலையில், ஒரு தனி மனிதன் தனது ரகசியங்களை எப்படிப் பாதுகாத்திருப்பான்? குறியீடுகளுக்குள்ளும், எண்களுக்குள்ளும், சில சொற்களுக்குள்ளும்தான் ஒளிக்க முடிந்தது. உதாரணமாக ‘தமிழ் தமிழ் என்றிட அமிழ்தம் தோன்றும்’ என்னும் வாக்கியத்தைக் கூறலாம்.

எப்படி?’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...வள்ளுவரின் புன்னகையைப் புரிந்துகொள்ள முடியாமல் வர்ஷன் திணறினான். ப்ரியாவோ தனக்குள் முயன்று பார்த்தாள். கணபதி சுப்ரமணியன் கூட அதற்கு பொருள் என்னவாக இருக்கும் என்றே தவிக்க ஆரம்பித்தார். அனந்த கிருஷ்ணனோ, தன் நண்பன் கிருஷ்ணமூர்த்தியின் மரணப் போராட்டத்தை எண்ணிக் கலங்கிப் போய் விட்டிருந்தார்.

‘‘அய்யா, இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்... நான் கேட்டதுல என்ன தப்பு?’’ என்று வர்ஷன் திரும்பக் கேட்டான்.‘‘எல்லா சிரிப்புக்கும் அர்த்தம் சொல்ல முடியாது தம்பி. இந்த ரகசியம்ங்கறது ரொம்பப் பெரிய விஷயம். உலகத்துல எல்லாரையும் ஆட்டிப் படைக்கறதே காலம்தான். அந்தக் காலமே காலப் பலகணிக்குள்ள வசப்பட்டுக் கிடக்கு... அப்ப பலகணி எவ்வளவு பெருசு?’’‘‘ஒப்புக்கறேன்... அதனால அதை விலைக்கு விக்கக்கூடாதா?’’‘‘வித்தா என்ன வரும்?’’‘‘பணம்!’’‘‘பணம் எதுக்கு?’’‘‘வாழறதுக்குத்தான்...’’‘‘அப்ப பணம் இருக்கறவங்கதான் வாழ முடியுமா?’’

‘‘இப்படிக் கேட்டா எப்படி... பணம் இருந்தா கஷ்டமில்லாம சௌகரியமா வாழலாம் இல்லையா?’’‘‘தப்பான பணத்தால சந்தோஷமா எல்லாம் வாழ முடியாது தம்பி!’’‘‘பணம்ங்கறது ஒண்ணுதாங்க... அதுல தப்பான பணம், சரியான பணம்னு எல்லாம் ரெண்டு கிடையாதுங்க!’’
‘‘அப்ப பணத்தைப் பதுக்கினா அதை கறுப்புப் பணம்னு ஏன் சொல்றே?’’

‘‘அது அடையாளத்துக்கு! மற்றபடி அந்தப் பணம் அதோட மதிப்பை இழக்கறதேயில்லை...’’‘‘அந்த தாள் இழக்காதுதான்... ஆனா, அதை வச்சிருக்கறவன் எல்லாத்தையும் இழக்க ஆரம்பிச்சிடுவான்!’’‘‘தலைகீழா சொல்றீங்களேய்யா... இந்த நாட்டுல கறுப்புப் பணம் வச்சிருக்கறவங்கதான் ரொம்ப நல்லா இருக்காங்க... சமயத்துல இந்த நாட்டோட தலையெழுத்தையே அவங்கதான் எழுதறாங்க!’’

‘‘தம்பி... மேலோட்டமா நீ உன் பார்வைக்குப் படுறத வச்சு சொல்றே! வாழ்க்கைங்கறது மனம் சார்ந்தது. பயமில்லாம, பதற்றமில்லாம, ரகசிய பாரங்கள் எதுவும் இல்லாம, ஏகாந்தமா இலவம் பஞ்சு மாதிரி மனசு இருக்கணும். ஒவ்வொரு நொடியும் இயற்கையை ரசிச்சுப் பாக்கற ஒரு கவிஞனைப் போல அனுபவிச்சு வாழறதுதான் உண்மையான வாழ்வு. புதையல் பூதம் போல, எப்பவும் பணம், அதோட பாதுகாப்புன்னு வாழறதுக்குப் பேர் வாழ்க்கை கிடையாது!’’

‘‘அய்யா... அப்படி எல்லாம் இல்லை. தப்பா பணம் சேர்த்தவங்க நல்லாவே அனுபவிச்சுதான் வாழறாங்க. நீங்கதான் அந்தக் காலத்து மனுஷனா ஏதேதோ பேசறீங்க...’’‘‘இல்ல தம்பி... சரியான வழியில வராத பணம், ஒரு வழி பண்ணிடும். எனக்கு அப்படி ஒரு பணம் வேண்டாம். என் பிள்ளைகளுக்கு நான் காசு, பணத்தைத் தராட்டியும் பாவத்தை தராம இருக்கலாம், இல்லையா?’’

‘‘அப்ப இந்த பலகணியை வச்சு யார் சம்பாதிச்சாலும் கஷ்டம்தானா?’’‘‘அதுல என்ன சந்தேகம்?’’- வள்ளுவரின் பதில் வர்ஷன் முதுகில் சவுக்கால் அடித்தது போல் இருந்தது. அதை ப்ரியாவும் கூர்மையாக கவனித்தாள். கணபதி சுப்ரமணியன் இடையில் புகுந்தார்.‘‘மிஸ்டர் வள்ளுவர்! இதைக் கொண்டு நீங்க சம்பாதிக்க விரும்பலைங்கறதுக்குக் காரணம் தெரியுது. அதே சமயம், ‘இதுகிட்ட நெருங்கறவங்க செத்துடுவாங்க’ன்னு ஒரு விஷயம் இருக்கும்போது, இது நம்மை விட்டு ஒழிஞ்சா போதும்னு நினைக்காம என்னைத் தேடி வந்து என்கிட்ட இதைக் கொடுத்திருக்கீங்களே... நான் உயிர் வாழ வேண்டாமா? நான் செத்துட்டா இது என்கிட்ட வந்துதான் என்ன புண்ணியம்?’’

‘‘அய்யா... இது ஒரு அதிசயம். சாதாரண அதிசயம் கூட இல்லை. அதிசயங்களுக்கெல்லாம் அதிசயம். இது ஒரு கணக்கு. அந்தக் கணக்குல, நூறு நூறு வருஷம் வாழற அமைப்பு கொண்டவங்க இது கிட்டயே வர முடியாது. இதுகிட்ட யாராவது வராங்கன்னா, அவங்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது. இதுதான் உங்க கேள்விக்கு என்னுடைய சுருக்கமான, தெளிவான விடை.

நீங்க நீண்ட நாள் வாழ விரும்பினா இதைத் தேடாதீங்க. இந்தப் பெட்டியைக் கொண்டு போய் ஆத்துலயோ... இல்ல, சமுத்திரத்துலயோ போட்டுடுங்க. இல்ல, சாவு உறுதியாயிட்ட ஒரு புற்றுநோயாளியை வச்சு தேடிக் கண்டுபிடிச்சு, கால ரகசியங்களை தெரிஞ்சிக்குங்க.

நீங்க எப்படி நடந்துக்கிட்டாலும் அது உங்க விருப்பம்தான். ஒண்ணு மட்டும் நிச்சயம்... இது கிடைச்சுட்டா குறைஞ்சது 100 வருஷத்துக்கு தமிழ்நாட்டோட நிலையையும், இந்தியாவோட நிலைப்பாட்டையும், உலகத்தோட நிலைப்பாட்டையும் அணு சுத்தமா தெரிஞ்சிக்கலாம். அதனால பெரிய நல்லது நடக்கணும்னு விதி இருந்தா அந்தப் பலகணி மூலமா ரகசிய உண்மைகள் தெரிய வந்தே தீரும்!’’ என்ற வள்ளுவரை அனைவரும் மலங்க மலங்கப் பார்த்தனர்.

‘‘இனி உங்ககிட்ட எந்தக் கேள்விகளும் இல்லைன்னு நினைக்கறேன்...’’ என்று தொடர்ந்தவரை அடுத்து என்ன கேட்பது எதைக் கேட்பது என்று தெரியாமல் அனைவரும் வெறித்தனர். ‘‘நான் மௌனமாயிட்டா அப்புறம் ஒரு வார்த்தை பேச மாட்டேன்’’ - வள்ளுவர் கண்டிப்போடு சொல்லவும் ஒரு இனம் புரியாத குழப்பம்...‘‘நல்லது...

என் உயிர் உங்க வீட்ல பிரியணுமான்னும் யோசிச்சிக்குங்க. பரவாயில்லைன்னா என் இறப்புக்குப் பிறகு என் குடும்பத்தவர்கிட்ட என் உடம்பை ஒப்படைச்சுடுங்க. அவங்க இப்ப திண்டுக்கல் பக்கமா சிறுமலைல இருக்காங்க. நான் அவங்ககிட்ட பேசப் போறேன். இங்க வரச் சொல்லப் போறேன். உங்களுக்கு எந்த சிரமும் வைக்காம என்னைத் தூக்கிக்கிட்டுப் போயிடுவாங்க’’ - வள்ளுவர் பேச்சோடு பேச்சாக தன் செல்போனை தனது தொள தொள காமராஜர் சட்டையின் பாக்கெட்டில் இருந்து எடுத்தார்.

‘‘இருங்க. நீங்க இப்ப எதுவும் பேச வேண்டாம்!’’ என்று வேகமாய் ப்ரியா இடையிட்டாள். அதைக் கேட்க வள்ளுவரிடம் சிரிப்பு.
‘‘இந்த சிரிப்புக்கு எனக்கு அர்த்தம் தெரியும். நீங்க நிச்சயம் சாக மாட்டீங்க. உங்களுக்கு எதுவும் ஆகாது!’’‘‘அம்மாடி... நீ தாராளமா நம்பு. ஆனா, அதுக்காக நான் சும்மா இருக்க முடியாது. உனக்கு நான் இவ்வளவு தூரம் ஒத்துழைப்பு தந்துட்டிருக்கறதே அதிகம்...’’ - வள்ளுவர் செல்போனை ஆன் செய்தவராக ஒதுங்கிச் சென்றார்.

கணபதி சுப்ரமணியனும் ப்ரியாவும் ஒருவரை ஒருவர் வெறித்துக்கொள்ள, சற்று ஒதுங்கியிருந்த அனந்தகிருஷ்ணன் திரும்பி வந்தார்.
‘‘ப்ரியா! கிருஷ்ணமூர்த்தி செத்துட்டான். இப்பதான் எஸ்.எம்.எஸ். வந்தது...’’ என்று அதைக் காண்பித்தார். வர்ஷன் முகம் குப்பென்று வியர்த்தது.
‘‘ப்ரியா... அப்பா... இவரை இப்பவே அனுப்பிடுங்க. நம்ப வீட்ல வச்சு இவர் உயிர் போக வேண்டாம்!’’ என்று அனந்த
கிருஷ்ணன் தன் நம்பிக்கையை வேகமாய் வெளிப்படுத்தினார்.

‘‘அப்பா, கொஞ்சம் சும்மா இருங்க...’’‘‘போதும்... இந்தப் பெட்டியையும் இவர்கிட்டயே கொடுத்து அனுப்பி வையுங்க. இதுவரை நீங்க தேடிக் கண்டு
பிடிச்சது போதும். இதைத் தேடிப் போய் நீங்களும் சாக வேண்டாம்!’’‘‘அப்பா... உங்க நண்பர் ஒரு கேன்சர் பேஷன்ட். அதனால இறந்துட்டார். இவரைப் பாருங்க... இவர் சாகப் போறவர்னு யாராவது நம்புவாங்களா?’’

‘‘ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. தூக்கத்துல செத்தவங்க ஆயிரம் பேர். விமானத்துல இருந்து விழுந்தும் சாகாதவங்களும் ஆயிரம் பேர். மரணம் எப்ப வேணா, எப்படி வேணா வரும்!’’‘‘நீ சொல்றத நானும் ஒத்துக்கறேன் அனந்தா... அதே சமயம் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டா என்னால இந்தப் பலகணி விஷயத்தை சாதாரணமா எல்லாம் நினைச்சு ஒதுக்கிட முடியாது!’’

‘‘நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும். நாளைக்கு நடக்கப் போறத சொல்ற இந்த காலப்பலகணி உண்மையோ... இல்ல, பொய்யோ... எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும். அதைக் கண்டுபிடிச்சு நடக்கப் போறத தெரிஞ்சிக்கிட்டு நாம என்ன பண்ணப் போறோம்! எந்த ஒரு சம்பவத்தையும் நம்மால தடுத்து நிறுத்த முடியாது எனும்போது நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..?’’

‘‘அனந்தா! நீ சொல்றபடி பார்த்தா, நான் கண்டுபிடிச்ச தாழிப் பானை, மண்ட ஓடுகளால மட்டும் என்னடா புண்ணியம்? ஆனா, இதெல்லாம் காலப்போக்கை காட்டற விஷயங்கள். மனித நாகரிக வளர்ச்சியை இதை எல்லாம் வச்சுத்தான் தெரிஞ்சுக்க முடியும்...’’கணபதி சுப்ரமணியம் அனந்தகிருஷ்ணனுக்கு பதில் கூறும் சமயம் வள்ளுவர் திரும்பி வந்தார். கடிகாரத்தையும் பார்த்தார்.

எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். ‘‘நான் சப்தம் போடுறத நிறுத்தப் போறேன்... உங்க எல்லோருக்கும் என் வாழ்த்துகள். நாளைக்கு மதியமே என் குடும்பத்துல எல்லாரும் வந்துடுவாங்க. ஆனா, இங்க வரமாட்டாங்க. என் இறப்புக்குப் பிறகு என் வீட்டுக்குக் கொண்டு போய் என் உடம்பை ஒப்படைச்சிடுங்க. என் உயிர் பிரியறத வச்சு நான் சொன்ன விஷயங்கள் எவ்வளவு உண்மையானது, உறுதியானதுன்னு நீங்க முடிவுக்கு வரலாம். திரும்ப சொல்றேன்... உங்க எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!’’

ஒரு யோகி போல, கைகளை உயர்த்தி ஆசீர்வாதம் செய்துவிட்டு, அவருக்கான படுக்கை விரிப்பில் போய் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டார்.
அவர் இனி பேச மாட்டார் என்ற நிலையில் அங்கே இருந்து என்ன செய்வது?

வர்ஷன் ‘நான் புறப்படுகிறேன்’ என்பது போல ப்ரியாவைப் பார்த்தான். ப்ரியாவும் சரி என்றாள். அவனோடு வாசல் வரை சென்றாள். அனந்த கிருஷ்ணனுக்கு தான் சொன்னதை கணபதி சுப்ரமணியன் கேட்காதது வருத்தத்தை மூட்டி விட்டிருந்தது. முகச்சுளிப்போடு விலகி அவர் அறை நோக்கிச் செல்லவும், பத்மாசினி அனந்தனை நெருங்கியவளாக, ‘‘இந்த வீட்ல என்னதாங்க நடக்குது..?’’ என்று ஆரம்பித்தாள்.
வாசலில் வர்ஷன் தன் பைக்கை நெருங்கி ஏறி அமர்ந்திருந்தான்.

‘‘ப்ரியா... உன் வீட்டுக்கு வரும்போது இருந்த வர்ஷன் வேற! இப்ப உன்கிட்ட பேசறவர்ஷன் வேற! லைஃபை நினைச்சா எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கு...’’ என்றான். ப்ரியா பதில் ஏதும் கூறவில்லை.‘‘ரைட்... நாளைக்கு வள்ளுவர்... வள்ளுவர்...’’  என்று அடுத்த வார்த்தைகள் பிடிபடாமல் தந்தி அடித்தான்.

‘‘அவர் இறந்தபிறகு போன் பண்ணுங்கிறியா?’’ - பளிச்சென்று கேட்டாள். அவன் தலை அசைந்தது.‘‘பாக்கலாம்...’’ என்றாள் அரை மனதாக.‘‘உனக்கு இன்னுமா நம்பிக்கை வரலை?’’‘‘அது எப்படி வரும்... உயிர் போற வரை என் நம்பிக்கை நீடிக்கும். அப்படி நீடிச்சாதான் அது நம்பிக்கை. இல்லேன்னா அது வெறும் எண்ணம்!’’ - ப்ரியா அழுத்தமாகவே கூறினாள்.

அவன் பட்டனை அழுத்தவும் பல்சரிடம் இயக்க சப்தம்... சிறிது தூரம் சென்றவன் ஒரு ஓரமாக ஒதுங்கி தன் செல்போனை எடுத்தான். யாரிடமோ தொடர்பு கொண்டான். ‘‘சாரி... என்னால முடியாது! உங்க பணத்தை ரிவர்ஸ் பண்ணிடறேன். நான் உயிரோட வாழ விரும்பறேன்...’’ என்றான்.

‘‘இந்த உலகத்துல எல்லாரையும் ஆட்டிப்  படைக்கறதே காலம்தான். அந்தக் காலமே காலப் பலகணிக்குள்ள வசப்பட்டுக்  கிடக்கு... அப்ப பலகணி எவ்வளவு பெருசு?’’

ஹேர்... ஹோமியோ!

டாக்டர் கிளார்க் என்ற மருத்துவ விஞ்ஞானி ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் ‘ஆர்னிகா மொன்டானா’ என்ற மருந்தைப் பூசினாலே அது முடியை வளர வைக்கிறது எனக் கூறினார். எனவேதான் பல்வேறு கம்பெனிகள் இ்தை முதன்மையாகக் கொண்டு ஹேர் ஆயில்களையும் ஷாம்புக்களையும் தயாரித்து வியாபாரம் செய்கின்றன.

ஆனால் வெளிப்பூச்சு என்பது தற்காலிக நிவாரணமே. பொடுகு, தோல்நோய்கள், உடல் ஊக்கி கோளாறுகள், மற்ற நோய்கள் போன்றவை வேரறுக்கப்பட்டால்தான் முடி வளர வைக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கும்!

குறிப்பாக, ஆண்களின் இளம் வழுக்கையைப் பொறுத்தவரை உடலின் உள்காரணத்தைப் பூர்த்தி செய்யாமல் வெளிப்பூச்சு எந்த விதத்திலும் பலனளிக்காது. மெனாக்ஸிடில் (minoxidil) போன்ற லோஷன்கள் வேர்க்கால்களைத் தூண்டி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் அதற்கு அடிபணிந்து முடி வளருவது போல இருக்கும். பிறகு சிதைந்துவிடும். இந்த வகை வழுக்கைக்கு உடல்ரீதியான சிகிச்சை மட்டுமே பலனளிக்கும். அடிப்படைக் காரணமான ஹார்மோன்களின் இயக்கத்தை சீராக்க வேண்டும்!

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்