இது ஃப்ரிஸ்பி ப்ரீமியர் லீக்!



‘‘ஐ.பி.எல்லில் ரோஹித்தும் ரெய்னாவும் அடிப்பதெல்லாம் என்னங்க டைவ்... எங்க ஃப்ரிஸ்பி ஆட்டத்தை வந்து பாருங்க. பத்தடி தூரத்துக்கு உருண்டு புரண்டு கேட்ச் பிடிப்போம்!’’ - பெருமையாகப் பேசுகிறார் ராம்குமார். இந்தப் புதுமை விளையாட்டை சென்னையில் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர் இவர்.‘‘அது என்ன ஃப்ரிஸ்பி விளையாட்டு?’’ - இதைக் கேட்க சரியான ஆள் ராம்குமார்தான்!

‘‘டிஸ்க் த்ரோயிங்தாங்க. ரெண்டு டீமா பிரிஞ்சி கிட்டத்தட்ட ஃபுட் பால் மாதிரி ஆடற ஆட்டம் இது. பாலுக்கு பதில் 175 கிராம் இருக்குற ஒரு டிஸ்க். 100 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் இருக்குற பெரிய இடம் இந்த விளையாட்டுக்குத் தேவை. அதோட, ரெண்டு முனைகள்லயும் 18 மீட்டர் கொண்ட எண்ட் ஸோன் இருக்கும்.

ஒரு ஸோன்ல இருந்து இந்த டிஸ்க்கை வீசி பாஸ் பண்ணிக்கிட்டே வருவாங்க. எதிர் டீம்ல இருக்குறவங்க அதை எப்படியாவது கைப்பற்றி, அவங்க டீம் ஆட்கள்கிட்டயே பாஸ் பண்ணி எதிர் ஸோன்ல கொண்டு போய் சேர்க்கணும். சேர்த்தா ஒரு பாயின்ட். இப்படி யாரு முதல்ல 16 பாயின்ட் எடுக்குறாங்களோ அவங்க வின்னர்.

அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய, ஆசிய நாடுகள்லயும் இந்த விளையாட்டை பல ஆண்டுகளா விளையாடிட்டு வர்றாங்க. பெரிய டோர்னமென்ட் எல்லாம் நடத்துறாங்க. இந்தியாவுல - அதுவும் சென்னை மாதிரி சிட்டியில - இந்த விளையாட்டுக்கு இட வசதிகள் குறைவு. அங்கெல்லாம் இதை புல் தரையிலதான் ஆடுறாங்க.

இங்கே நூறுக்கு நாற்பது மீட்டர் புல் தரைக்கு எங்கே போறது? அதனாலதான் பீச்ல ஆடுறோம். பெரும்பாலும் கூட்டம் குறைவா இருக்குற பெசன்ட் நகர் பீச்!’’ என்கிற ராம்குமார், இதே பெசன்ட் நகரில் பின் தங்கிய பகுதி இளைஞர்களைக் கொண்டு ‘ஃப்ளைவைல்டு’ எனும் டீமை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவெங்கும் பயணித்து விளையாட்டுப் போட்டிகளில் பல பாராட்டுகளைப் பெற்றும் வந்திருக்கிறார்.

‘‘சுமார் நாலு வருஷத்துக்கு முன்னாடி பெசன்ட் நகர் பீச்ல சிலர் இந்த விளையாட்டை விளையாடிக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். நான் அப்போ காலேஜ் படிச்சிட்டிருந்தேன். வீடு கோட்டூர்புரம். வேடிக்கை பார்த்த நேரத்துலயே இந்த விளையாட்டு மேல ஆர்வம் வந்துடுச்சு. ஆனா, அவங்ககிட்ட போய் பேசவே தயக்கம். ஏன்னா, எல்லாருமே பணக்கார வீட்டுப் பசங்க.

அப்புறம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு, எங்க கோட்டூர்புரம் பசங்க சில பேரை சேர்த்துக்கிட்டு அதே பெசன்ட் நகர் பீச்ல விளையாட ஆரம்பிச்சேன். பிறகு வேலை, கல்யாணம்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பிரிஞ்சிட்டாங்க. நான் மட்டும் வெட்டியா சுத்திக்கிட்டிருந்தேன். இந்த விளையாட்டை எங்க விளையாடினாலும் மக்கள் கூட்டமா நின்னு பார்ப்பாங்க.

கை தட்டி ரசிப்பாங்க. டீம் இல்லாம தனியாளா நின்னப்ப கூட, பெசன்ட் நகர் பக்கம் போனாலே அவங்க எனக்கு ‘ஃப்ரிஸ்பி ப்ளேயர்’னு தனி மரியாதை கொடுத்தாங்க. சும்மா சுத்தற நமக்கே இந்த விளையாட்டு இவ்வளவு மரியாதை வாங்கித் தருதுன்னா... இது மேலே வர நினைக்கற பசங்களுக்கு ரொம்ப தேவையாச்சேனு அப்ப தோணிச்சு. உடனே பெசன்ட் நகர்ல இருக்குற ஊரூர் குப்பத்துல சில இளைஞர்களை செலக்ட் பண்ணி டிரெய்னிங் கொடுத்தேன். அப்படித்தான் இந்த டீம் உருவாச்சு. இந்தியா முழுக்க எக்கச்சக்க டோர்னமென்ட் விளையாடியாச்சு.

சவுத் ஆப்ரிக்கா கிரிக்கெட் டீம் மாதிரி ஃபைனல்ல ஜெயிக்க முடியாம எப்பவும் ரெண்டாம் இடம்தான் கிடைக்கும். ஆனாலும், பொருளாதாரப் பின்னடைவு, கல்வியின்மை, குடும்ப சூழ்நிலைகள்னு பின்தங்கின இளைஞர்கள் இவ்வளவு தூரம் வர்றாங்களேன்னு போற இடத்தில் எல்லாம் பாராட்டுதான். சீக்கிரமே துபாய்ல நடக்குற டோர்னமென்ட்லயும் கலந்துக்கப் போறோம். அதில் நிச்சயம் ஃபைனல் அடிக்கணும்!’’
இந்த விளையாட்டில் பரிசே இல்லையாம். அதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி என்கிறார்கள்.

‘‘ஆமாங்க. பெரிய கப்பு, ஷீல்டெல்லாம் கொடுத்து ஆட்டத்துல வெறியைத் தூண்டுறதில்ல. ஆடும்போது ஒரு உத்வேகம் இருக்கும். அவ்வளவுதான். ஆட்டத்துக்கு நடுவுல ஒருத்தரை ஒருத்தர் மோதிக்கிட்டா கூட அதுக்கு பஞ்சாயத்து பண்ண நடுவர் எல்லாம் இந்த விளையாட்டுல கிடையாது. நாமளே ஒருத்தரை ஒருத்தர் தட்டிக் கொடுத்துட்டுப் போகவேண்டியதுதான். அதே மாதிரி ஆண்களும் பெண்களும் சேர்ந்து விளையாடுற ஒரே ஆட்டமும் இந்த ஃப்ரிஸ்பிதான். எங்க டீம்லயே கூட எங்க கூட சில படிச்ச இளைஞர்களும் பொண்ணுங்களும் இருக்காங்க.

எல்லா தரப்பு மக்களையும் ஒண்ணு சேர்க்குற விளையாட்டு இது. பொறாமையோ ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிற வெறியோ இதுல வந்ததே இல்ல. ஆனாலும், பார்க்கிறவங்க ரத்தம் உறையிற அளவுக்கு பரபரப்பு கேரன்ட்டி. இந்த விளையாட்டுக்கு உலகம் முழுக்க மதிப்பு கூடிக்கிட்டே போகுது. இங்கேயும் ஒரு காலத்தில் கிரிக்கெட் மாதிரி இது ரீச் ஆகும். அப்போ இதில் கலக்கி எடுக்குற குப்பத்து இளைஞர்கள் வாழ்க்கை மாறும். அந்த வகையில இது வெறும் விளையாட்டு இல்ல சார்!’’ - டச்சோடு முடிக்கிறார் ராம்குமார்.கருத்தை டைவ் அடிச்சு கேட்ச் பிடிச்சீங்களா?

அது என்ன ஃப்ரிஸ்பி?

சில சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள்... ஒரு பிளாஸ்டிக் தட்டை தூரமாக வீசியெறிந்தால், பழக்கப்பட்ட நாய் ஒன்று வேகமாகப் போய் அதை அந்தரத்தில் கவ்விப் பிடித்து வந்து, எறிந்தவரிடமே கொடுக்கும். வட்டமாக, காற்றில் பறக்க ஏதுவாக வளைந்த முதுகடன் இருக்கும் இந்தத் தட்டுதான் ஃப்ரிஸ்பி டிஸ்க்.

ஃப்ரெட் மோரிசன் என்ற அமெரிக்கர் கண்டுபிடித்த விளையாட்டு இது. அவரது அம்மா செய்து வைத்திருந்த பான் கேக் சற்றே முரட்டுத்தனமாக இருக்க, அதை அவரும் அவரது காதலியும் கலிபோர்னியா பீச்சில் பந்து மாதிரி தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடினார்கள். ‘ஏதோ புது விளையாட்டு அயிட்டம்’ என நினைத்து பலரும் அதை விலைக்குக் கேட்க, மோரிசனின் பிசினஸ் மூளை அதை விளையாட்டு ஆக்கியது.

மோரிசன் உருவாக்கிய டிஸ்க், இதுவரை உலகம் முழுக்க 20 கோடி விற்றிருக்கிறது. காஸ்ட்லியான உபகரணங்கள், கடுமையான பயிற்சி எதுவுமின்றி ஆடலாம் என்பதால் இது இன்ஸ்டன்ட் பாப்புலர் ஆகிவிட்டது.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்