காஞ்சனா 2



தமிழில் காமெடி பேய்ப்படங்களின் சீஸனைத் துவக்கி வைத்த ராகவா லாரன்ஸின் படம், ‘சன் பிக்சர்ஸ்’ வழங்கும் ‘காஞ்சனா 2’. தன்னைக் கொன்றவர்களை பேய் வடிவத்தில் திரும்ப வந்து கலங்கடிப்பதுதான் கதை.

இது லாரன்ஸின் திகில் பட்டியலில் அடுத்த கமர்ஷியல் பேய். ‘காஞ்சனா’வில் ஆரம்பித்த பேய் ஜுரம் இன்னும் பரவியிருக்கிற நேரத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது இது. திகிலடிக்கிற சினிமாவில் காமெடி சேர்த்த வகையில் லாரன்ஸை மிஞ்ச ஆள் கிடையாதோ என்ற எண்ணத்தை உண்டாக்கி விடுகிறார். பழைய கதையை புதிய திரைக்கதையால் ஊதி ஊதி நெருப்பாக்கி அனல் பறக்க வைத்திருப்பது இயக்குநர் லாரன்ஸின் வெற்றி!

 இரண்டு தனியார் தொலைக்காட்சிகளுக்குள் யாருக்கு முதல் இடம் என்பதில் ஆரம்பிக்கிற போட்டி, பேய் பீதியை செயற்கையாக உருவாக்குவதில் இறங்க வைக்கிறது. இழந்த முதல் இடத்தைப் பிடிக்க பேய் இருப்பது போல் காட்டப் போக, அங்கேயிருக்கிற அசல் பேய்கள் லாரன்ஸையும், டாப்ஸியையும் லபக்கென பிடித்துக்கொள்ள, அடுத்தடுத்து வருகிறது அதகள பரபரப்பு. கடைசியில் பேயின் ‘ஆசைகள்’ நிறைவேறியதா? - திகீர், பகீர், க்ளைமேக்ஸ்.

சரியான ரூட் பிடித்து விட்டார் லாரன்ஸ். சில்லிட்டு பயப்படும்போதே சிரிப்பும் அதே வேகத்தில் பரபரப்பும் பற்றிக் கொள்கிற புது பாணியில் மனிதர் கைதேர்ந்து விட்டதை சீனுக்கு சீன் நிரூபிக்கிறார். அம்மா கோவை சரளாவோடு பேசும் காட்சிகளில் குழந்தைத்தனம் இன்னும் எட்டிப் பார்ப்பது சுட்டிக் குழந்தைகளுக்குப் பிடிக்கும். இரண்டு பேய்களுக்குள் இரண்டு வகை ஃப்ளாஷ்பேக்கை கொண்டு வந்து காட்டிய வகையில் இரட்டை பரபரப்பில் படம் விரைந்து ஓட்டம் பிடிக்கிறது.

முதன்முதலில் பங்களா பேயின் பரபரப்புக் காட்சிகளின்போது சூடு பிடிக்கிற படத்தை இறுதிக்கட்டம் வரை டெம்போவில் தூக்கிப் பிடித்திருப்பது டைரக்டரின் சாதனை. நடிப்பிலும் சிறுமியாக, இளம் பெண்ணாக, பாட்டியாக உருமாறுவது ஆல்ரவுண்ட் லாரன்ஸ்.

 அட, டாப்ஸிக்கு இவ்வளவு நடிக்கத் தெரியுமா? ஆச்சரியம்தான். அந்த அழகு முகம், பேய் முகம் காட்டி பயமுறுத்தும்போதே தொடங்குகிறது அவரது புது நடிப்பு. டாப்ஸியும், லாரன்ஸும் போடுகிற காதல் ஆட்டத்தில் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஸ்கிரீன் சேவராக மனம் மயக்குகிறது. டாப்ஸிக்கு தோழியாக வருகிற பூஜா, லேட் என்ட்ரி! பாரதிராஜா வரைக்கும் கூப்பிட்டுப் பார்த்தபோது மிஸ் பண்ணிட்டாங்களே பூஜா!

நித்யா மேனன் மாற்றுத் திறனாளியாக பின்னி எடுக்கிறார். அவரைக் காதலிக்கும் ‘சண்டியர்’ லாரன்ஸ் அப்படியே அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவுக்கு கஞ்சி போட்ட துணி மாதிரி விறைப்பு... முறைப்பு! ஒரே படத்தில் பயந்தாங்கொள்ளியும் வீரமுமாக இரட்டை முகம் காட்டுவதில் நமக்கு கிடைத்தது காமெடியும் செம வெயிட் ஃபைட்டும்.

இந்த மாதிரி திகில் தருவதில் பின்னணி இசைக்கு இருக்கிற வேலை கொஞ்ச நஞ்சமில்லை. ஆரம்பித்த முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை களை கட்டி பயமுறுத்துகிறது தமனின் பயப் பின்னணி. ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு திகிலையும், பயத்தையும் கொண்டு வந்து சேர்த்திருப்பதில் முழு வெற்றி பெற்றிருக்கிறது. பாடல்களுக்கான இசையில் சத்யா, தமன், அஸ்வமித்ரா, லியோன் என கவனிக்க வைக்கிறார்கள்.
காரசார, திகில், காமெடி சூப்பர் மசாலா!

- குங்குமம் விமர்சனக்குழு