மீன் பிடிக்க எல்.இ.டி பல்ப்!



புது ரூட்டில் மீனவ கிராமம்

சுருக்கு வலை போடுகிறார்கள், இரட்டை மடி வலை போடுகிறார்கள் என்றுதான் நம் மீனவர்கள் மீது எப்போதும் பழி  சுமத்துவார்கள். ‘‘நாங்க வலையே கொண்டு போகலைங்க’’ என்கிறார்கள் நம்மூர் மீனவ கிராமம் ஒன்றில். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் ‘கொம்புத்துறை’.

நிஜமாகவே தூண்டில்களும் எல்.இ.டி பல்புகளும் போதுமாம் இவர்கள் மீன் பிடிக்க. சுமார் 170 குடும்பங்கள் வாழும் இந்த  மீனவ கிராமம், மீன் பிடித்தலுக்கென புதுப்புது சாதனங்களைக் கண்டுபிடித்து  அவார்டுகள் எல்லாம் கூட வாங்கியிருக்கிறது!

‘‘சார்... இது எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்து டெக்னிக். நவீன உலகத்துக்குத் தகுந்த மாதிரி நாங்க அதை மாத்தி அமைச்சிருக்கோம். அவ்வளவுதான்’’ - அமர்க்களமாய் பேசுகிறார் கொம்புத்துறை மீனவ சங்கப் பிரதிநிதியான ஜான்சன். ‘‘எங்களுக்கு பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம். எல்லாருமே அங்குள்ள கடியாப்பட்டினம், குளச்சல் பகுதிகளைச் சேர்ந்தவங்க.

அங்க இந்த முறை ரொம்ப பிரசித்தம். பாரம்பரியமாவே நாங்க தூண்டில் போட்டுத்தான் மீன் பிடிச்சிட்டு வர்றோம். எந்த வலையும் எப்பவும் பயன்படுத்துறதில்ல. எங்கப் பகுதியில மே, ஜூன் மாசம் கடல்ல அலை அதிகமா இருக்கும். இதனால, தொழில் செய்ய முடியாம ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்தச் சமயங்கள்ல நாங்க தூத்துக்குடி பக்கமா மீன் பிடிக்க வருவோம்.

அப்படி 1980கள்ல வந்தப்ப இந்தப் பகுதியில மட்டும் கடல் அலையில்லாம, அமைதியா, அழகா இருந்துச்சு. இதனால, அஞ்சு கட்டுமரத்துல வந்த நாங்க இங்கேயே நிரந்தமா குடியேறிட்டோம். அமோகமா தொழில் செய்ய ஆரம்பிச்சோம். போகப் போக எங்க மக்கள் நிறைய பேர் வந்து ேசா்ந்தாங்க!’’ என்கிறார் அவர். இப்படி குடியேறுகிறவர்களிடம் பக்கத்து கிராமத்து மீனவர்கள் உரிமைப் பிரச்னை எழுப்பாமலா விடுவார்கள்?

‘‘எங்களோட தூண்டில் முறை கடலையோ, மீன்வளத்தையோ கூட பாதிக்காது. சுருக்கமா சொல்றதுன்னா, நாங்க சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்போம். முதல்ல, சின்ன மீனைப் பிடிக்க ராத்திரியே கிளம்பிடுவோம். இதுக்கு சில வகை தூண்டில்கள் வச்சிருக்கோம். இந்த தூண்டில்ல சின்னதா ஜரிகைத் துணி கட்டி கடல்ல போடுவோம்.

அப்புறம், மீனைக் கவர எல்.இ.டி பல்புகளை எரிய விடுவோம். ஆரம்ப காலங்கள்ல தீப்பந்தங்கள் எடுத்துட்டு போனோம். அப்புறம், பெட்ரோமாக்ஸ் லைட், பிலிப்ஸ் பல்புன்னு மாறி, இப்போ நவீன வரவான எல்.இ.டி. பல்புகளைப் பயன்படுத்துறோம். இந்த வெளிச்சத்தையும், மின்னுற ஜரிகையையும் பார்த்து சின்ன மீன்கள் மேல வந்து தூண்டிலைக் கவ்வி மாட்டிக்கும்.  இந்த சின்ன மீன்களை படகுல இருக்கிற நீர்ப் பெட்டிக்குள்ள உயிரோட போட்டுருவோம்.

அப்புறம், காலையில உயிருள்ள இந்த சின்ன மீன்களை வச்சு, கணவாய், பாறை, சீலான்னு பெரிய மீன்களைப் பிடிப்போம். இதுக்குன்னு பெரிய வகை தூண்டில்களும் எங்ககிட்ட இருக்கு. கடலுக்குள்ள 12 நாட்டிக்கல் மைல் தூரம் போய், ஆழ்கடல்லதான் மீன் பிடிப்போம். பிப்ரவரி, மார்ச் மாசத்துல மட்டும் மிதவைக் கட்டையில ‘லைன் தூண்டில்’ போட்டு இங்கேயே தொழில் செய்வோம்.

ஏன்னா, இந்த நேரத்துல அதிக மீன்கள் வரும். வரிசையா 150 தூண்டில்கள் போட்டு வச்சா நல்ல லாபம் கிடைக்கும். எங்க படகுகள்ல ஐஸ் பெட்டியும் வச்சிருக்கிறதால நாங்க பிடிக்கிற மீன்கள் எப்பவுமே ஃப்ரெஷ்ஷா இருக்கும். இதனால, மீன் வியாபாரிகள் தேடி வந்து வாங்குறாங்க!’’ என்கிறவர், தங்கள் கண்டுபிடிப்புகளையும் அடுக்குகிறார்.

‘‘முதல்ல மிதவை லைட் ஒண்ணைக் கண்டுபிடிச்சோம். சாதாரண தண்ணீர் பாட்டிலுக்குள்ள நாலு பேட்டரி மாட்டி அதுல ஒரு சின்ன எல்.இ.டி பல்பை எரிய விட்டோம். எந்த இடத்துல தூண்டில் போட்டுருக்கோம்னு பார்க்க இது உதவும். இதுக்குத்தான் தூத்துக்குடி மீன்வளக் கல்லூாி அவார்டு கொடுத்து பாராட்டிச்சு. அப்புறம், ஜி.பி.எஸ் பேட்டரி சார்ஜர் உருவாக்குனோம்.

இப்போ, தண்ணீர் புகாத எல்.இ.டி பல்பு பாக்ஸை கடலுக்குள்ளேயே போட்டு வெளிச்சத்தை ஏற்படுத்துற முறையையும் கொண்டு வந்துருக்கோம். இதுக்கெல்லாம் உறுதுணையா இருந்து உருவாக்கித் தர்றவர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் வசந்த்!’’ என நன்றியோடு குறிப்பிடுகிறார் அவர்.‘‘இந்த தூண்டில் முறை தமிழகத்தில் வேறெங்கும் பார்க்க  முடியாத புதுமை’’ எனத் துவங்குகிறார் தூத்துக்குடி மீன்வளக் கல்லூாி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பேராசிாியா் நீதிச்செல்வன்.

‘‘இவங்க ஒளி மூலமா மீன்களை கவர்ந்திழுத்து மீன் பிடிக்கிறாங்க. இந்த முறை நம்ம தாத்தா காலத்துலேயே இருந்ததுதான். ஆனா, அதுல நவீனத்தை புகுத்தினதுதான் ஆச்சாியமானது. ஒளிரும் அடையாள மிதவை, எல்.இ.டி பல்ப்னு அஞ்சு வகை கண்டுபிடிப்புகளைக் கொண்டு தொழிலை நச்னு பண்றாங்க.

ஸ்பார்க் பிளக்கைக் கூட தூண்டிலா பயன்படுத்தி ஆக்டோபஸ் மீன்களைப் பிடிக்கிறாங்க. இப்படி விதவிதமான கண்டுபிடிப்புகள்தான் இவங்களைக் கவனிக்க வைக்குது. . இதை மத்த பகுதி மீனவர்களும் கத்துக்கிட்டா சிறப்பா மிளிரலாம்!’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க!
‘சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கணும்’ என பழமொழி சொல்வார்கள். அதை நிஜமாகவே செய்து காட்டுகிறார்கள் கொம்புத்துறை மீனவர்கள்!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ரா.பரமகுமார்