மாற்றம்



ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள் மாதவி. ‘‘ஆழ்வார்பேட்டை போகணும்பா... ரொம்ப அவசரம்!’’ - பரபரத்தாள்.‘‘நூத்தம்பது ரூபா ஆகும் மேடம்!’’ - அவசரம் புரிந்து கேட்டான் அவன்.ஆனாலும் பேரம் பேசும் விஷயத்தில் மாதவி உஷார். ‘‘மீட்டர் போடுங்க. எட்டு கிலோ மீட்டர்தான் இருக்கும். நூறு ரூபாய்க்கு மேல ஆகாது. மேலே வேணும்னா இருபது ரூபாய் தர்றேன்!’’

மனதுக்குள் திட்டித் தீர்த்தாலும் அரை மனதாய் அவளை வண்டியில் ஏற்றினான். ஆட்டோ வேகமெடுத்து விரைந்தபோது வழியில் ஒரு பெரியவர் துடித்துக் கொண்டிருந்தார். எவனோ பைக்கில் இடித்துத் தள்ளிவிட்டுப் போயிருக்கிறான்.‘‘ஆட்டோவை நிறுத்துப்பா!’’  - சத்தம் போட்டாள் மாதவி.
நிறுத்தினான். அவள் அந்தப் பெரியவரைப் பிடித்துத் தூக்கி ஆட்டோவில் ஏற்றச் சொன்னாள். ‘‘பணம் எவ்வளவு வேணும்னாலும் தர்றேம்பா. முதல்ல இவரை ஏத்திக்கிட்டு ஹாஸ்பிட்டல் போ!’’ என்றாள்!

மருத்துவமனையில் அவரைச் சேர்த்துவிட்டு வெளியில் ஆட்டோக்காரனை நோக்கி வந்தாள் மாதவி.‘‘லேசான அடிதான். வயசானவர்... பாவம். எவ்வளவு ஆச்சு?’’அவன் மனம் உறுத்தியது. ‘‘மீட்டர்ல எவ்வளவு இருக்கோ, அதுல பாதி போதும் மேடம்!’’ அங்கே மனிதம் பரிமாறப்பட்டது.

ஆ.லோகநாதன்