அவமானம்



‘‘இன்னொரு வாட்டி இப்படித் தூக்கி வீசினே, அப்புறம் இதைக் கூட வாங்கித் தர மாட்டேன்’’ என்று கத்தினார் தாத்தா விசுவம்.‘‘ப்பூ... இதென்ன காஸ்ட்லி ரிமோட் காரா? பிசாத்து பத்து ரூபாய் பிளாஸ்டிக் கார்தானே!  இது எவனுக்கு வேணும்?’’ என்று கத்திக்கொண்டே, அந்தக் காரை காலால் மிதித்து உடைத்துப் போட்டான் ரமணி.முறைக்கும் தாத்தாவை அவனும் முறைத்தான்.

‘‘நமக்கு  இருக்கும் வசதிக்கு ஒரு நிஜக்காரே வாங்கித் தரலாம்’’ என்று ஆரம்பித்த  வசந்தியை முறைத்த முறைப்பில் அவள் வாயை மூடிக்கொண்டாள். தனக்கு ஆதரவாய்ப் பேசிய பாட்டியை ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான் ரமணி.‘நமக்கு  வசதி இருக்குன்னு பேரனுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்  கொடுத்தா, இவன் அதை நம்ம சம்பந்திகிட்ட காமிச்சி, ‘விசுவம் தாத்தா என்னெல்லாம் வாங்கித் தர்றாங்க பாருங்க’ம்பான்.

அவர் வாங்கித் தரலன்னு அவமதிப்பான்.  அந்தப் பாவப்பட்ட மனுஷன்கிட்ட ஏது வசதி? பேரனை நினைச்சு கலங்கிப் போவாரே. அதனாலதான் அவர் சக்திக்கு என்ன வாங்கித் தர முடியுமோ அதையே நானும் வாங்கித் தர்றேன்! சம்பந்தி அவமானப்பட்டா அது நமக்கும்தானே!’ - தன்னுள் கூறிக்கொண்டார் விசுவம்.

உமா கல்யாணி