அர்ச்சனை



ஆண்டுக்கு இரண்டு தடவை, ஏதாவதொரு பிரசித்தி பெற்ற கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவது என் வழக்கம்.இன்று, நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்.அதிகாலையில் புறப்பட்டு, கோயிலைச் சென்றடைந்தோம். அர்ச்சனைச் சீட்டுடன், தேங்காய் பழத்தட்டை அர்ச்சகரிடம் நீட்டினோம்.

சாமி சிலைக்கு மாலை சார்த்தி, பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து முடித்த அர்ச்சகர், ``அர்ச்சனை யார் பேருக்கு? பேர் சொல்லுங்கோ!’’ என்றார்.
``ஸ்ரு...’’ - எங்கள் குழந்தையின் பெயர் சொல்லப்போன சரிதாவைக் கையமர்த்திவிட்டு, `மாரிமுத்து’ என்றேன். என்னைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மௌனமானாள் சரிதா.

அர்ச்சனை, வழிபாடெல்லாம் முடிந்து, கோயிலைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தபோது சரிதா புரியாமல் கேட்டாள்... ``யாருங்க அந்த மாரிமுத்து?’’``நம்ம வீட்டு வேலைக்காரி மகன்மா. அவன் ஒரு வாரமா டைபாய்டு காய்ச்சலில் அவஸ்தைப்படுறான்னு அந்தம்மா சொன்னதை மறந்துட்டியா? அவன் சீக்கிரம் குணமடையட்டும்னு அவன் பேரைச் சொன்னேன்.

எப்பவும் நம்ம குழந்தைக்காகத்தான் அர்ச்சனை பண்றோம். இன்னிக்கி மத்தவங்க குழந்தைக்காகப் பண்ணியிருக்கோம். இது தப்பா சரிதா?’’ என்றேன்.``நான் அப்படிச் சொல்வேனா? நானும் ஒரு பிள்ளையைப் பெத்தவள்தானே!’’ என்றாள் அவள் கனிவோடு!

நாமக்கல் பரமசிவம்