எல்லா போர்க்களங்களிலும் தோற்கும் இந்தியர்கள்!



ஏமன் நாட்டில் ஏதோ பெயர் தெரியாத தீவிரவாத அமைப்புகளுக்கும் அரசுக்கும் போர் எனில், ‘அது நம் பிரச்னை இல்லை’ என நினைப்பவர்கள் அநேகம். சொல்லப் போனால், ‘ஏமன் எங்கே இருக்கிறது’ என்பதில்கூட நிறைய பேருக்கு அக்கறை இல்லாமல் போகலாம். ஏமன் போரில் சிக்கிய இந்தியர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இந்தியக் கடற்படையின் கப்பல்களும் விமானப்படையின் விமானங்களும் மீட்டபோதுதான் அங்கே போர் நடப்பதே நிறைய பேருக்குத் தெரியும்.

எந்தப் போரிலும் போர்வீரர்களை விட அப்பாவிகளே அதிகம் சாகும் துயரம் நிகழ்கிறது இப்போது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என தப்பிக்க வழியற்றவர்கள் மரணத்தைத் தவிர வேறு எதையும் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் இப்படிப்பட்ட போர்க்களங்கள் எத்தனையோ இப்போது! அத்தனை போர்க்களங்களிலும் இந்தியர்கள் தோற்கிறார்கள். காரணம்?

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிரியா, இராக், இப்போது ஏமன், இன்னும் எத்தனையோ ஆப்ரிக்க நாடுகள் என உள்நாட்டுக் கலவரங்களால் அமைதியிழந்து தவிக்கும் அத்தனை இடங்களிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். காரணம், பிழைப்பு! உலகெங்கும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய நேரும் நபர்களில் பத்தில் மூன்று பேர் இந்தியர்கள். சுமார் 2 கோடியே 10 லட்சம் பேர் இப்படி வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். (ஆங்காங்கே குடியுரிமை பெற்றவர்கள் இந்தக் கணக்கில் வர மாட்டார்கள்!)

அதிகம் படிக்காத கூலித் தொழிலாளர்கள் மட்டுமில்லை, நர்ஸ்கள், எஞ்சினியர்கள், டாக்டர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் என இந்தியர்கள் பல நாடுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஆபத்தான பகுதிகளில்கூட துணிச்சலாகப் பணிபுரிபவர்கள் என்ற பெருமை இந்தியர்களுக்கு உண்டு. எப்போதும் கலவரம் நடக்கும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் ஐரோப்பிய நிறுவனங்களில் வெள்ளையர்கள் பணிபுரியப் போவதில்லை;

அங்கு இந்தியர்கள் போகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உலக வங்கியும் ஐ.நா.வும் செய்யும் புனரமைப்புப் பணிகளின் காண்டிராக்ட்களை எடுத்திருப்பது அமெரிக்கக் கம்பெனிகள். ஆனால் அங்கே போய் கட்டிடம் கட்டவும் ரோடு போடவும் இந்திய எஞ்சினியர்களும் பணியாளர்களும்தான் தேவைப்படுகிறார்கள். சமீப ஆண்டுகளாக கலவரங்கள் நடக்கும் எகிப்து, இராக், சிரியா, டுனிஷியா, ஓமன் என அத்தனை நாட்டு மருத்துமவனைகளிலும் பணிபுரிகிறவர்களில் பெரும்பாலான டாக்டர்களும் நர்ஸ்களும் இந்தியர்கள்தான். 

இப்படி வெளிநாடுகளில் பணிபுரி யும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்த தொகை, சுமார் 4 லட்சத்து 39 ஆயிரத்து 355 கோடி ரூபாய். கேரளா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான வர்த்தகமே இப்படி வெளிநாடு களிலிருந்து வரும் பணத்தையே நம்பியிருக்கிறது. அதனால்தான் எங்காவது பிரச்னை எழும்போது முதல் சிக்கல் இந்தியாவுக்கு நேர்கிறது.

சதாம் உசேன் காலத்தில் குவைத்தை இராக் ஆக்கிரமித்தபோது, அங்கு பணிபுரிந்த 1 லட்சத்து 76 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்திய ராணுவம் நிகழ்த்திய மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையாக அது கருதப்படுகிறது. லிபியாவில் போர் மூண்டபோது 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்ப நேர்ந்தது.

கடந்த ஆண்டு இராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக்கிரமித்தபோது அங்கிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 7 ஆயிரம் பேர். இப்போது ஏமனில் 3 ஆயிரம் பேர். பீரங்கிகள் சீறிக் கொண்டிருந்த போர்க்களத்தின் அருகே சென்று இந்தியர்கள் மீட்கப்பட்டதும், முதல்முறையாக மீட்பு நடவடிக்கையை கவனிக்க ஒரு அமைச்சரே (வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங்) நேரில் சென்றதும், பிற நாடுகளின் மக்களைக்கூட இந்தியா மீட்டு வந்ததும் பெருமைக்குரிய விஷயங்கள்!

ஆனால் மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், அனைத்தையும் இழந்தவர்களாக திரும்பி வந்திருப்பதுதான் சோகம். இதற்குக் காரணங்கள் நிறைய... எங்கெல்லாம் உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கிறதோ, அங்கு போருக்கு முன்பாக கலவரங்களும் கொள்ளைகளும் துவங்கி
விடும். இந்த ஆரம்ப அறிகுறிகளைப் பார்த்ததும் ஐரோப்பியர்கள் வெளியேறி விடுவார்கள். ஆனால் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பணியாளர்களுக்கு கடைசி நிமிடத்தில்தான் வெளியேற்ற எச்சரிக்கையை அங்கிருக்கும் அரசு தரும்.

அதற்குள் வங்கிகள் முடங்கிவிடுவதால், நம்மவர்கள் வேலை செய்யும் பல நிறுவனங்களில் சம்பளத்தையோ, பழைய பாக்கிகளையோ பெற முடியாது. தாங்கள் வைத்திருக்கும் சேமிப்பையும் எடுக்க முடியாது. போர்ச்சூழலிலிருந்து ஒருவர் அதிகபட்சமாக 50 அல்லது 60 கிலோ பொருட்களை எடுத்து வரலாம்.

 வாங்கி வைத்திருந்த பொருட்கள் அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு ஓடி வர வேண்டும். அது மட்டுமில்லை... அங்கிருந்து வெளியேறுவதற்கு லஞ்சம் கொடுத்தே எக்ஸிட் பாஸ் வாங்க வேண்டியிருக்கும். நிறைய சம்பாதிக்கும் கனவோடு வெளிநாடு போன பலர், இருப்பதையும் இழந்துவிட்டு வந்த கொடுமைதான் நடந்தது.

குறிப்பாக இப்போது ஏமனிலிருந்து திரும்பிவந்தவர்களைவிட, இன்னும் அங்கேயே இருக்க விரும்பும் நர்ஸ்கள் அநேகம் பேர். நான்கைந்து மாதங்களாகவே போர்ச்சூழல் நீடிப்பதால் அவர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்குக்கூட பணம் இல்லாமல் தவித்தாலும், ‘நிலைமை சீரடையும்’ என நம்பிக்கையோடு அவர்கள் இருக்கிறார்கள்.

போர்க்களத்தின் நடுவே சிக்கியிருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால், பாதுகாக்க இன்சூரன்ஸ்கூட இல்லை. இத்தனை ரிஸ்க்கையும் அவர்கள் எடுக்கக் காரணம், பல லட்சங்கள் கடன் வாங்கி அங்கே போயிருப்பதுதான்.

ஊருக்குத் திரும்பி வந்ததும் கடன்காரர்கள் கொடுக்கும் நெருக்கடிகளை விடவும் போர்க்களம் அவர்களுக்கு பெரிய ஆபத்து இல்லை!தாய்மண் துறந்து, சொந்தங்களை மறந்து, உலக வரைபடத்தின் எந்த மூலைக்கும் சென்று பணிபுரியத் தயாராக இருக்கும் இந்தியர்களை பாதுகாக்கத்தான் எந்த சட்டமும் இல்லை!

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள்!

இந்தியா, சீனா, வங்க தேசம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இலங்கை, வியட்நாம், இந்தோனேஷியா என பல நாடுகளிலிருந்து வெளிநாடு போய் பணிபுரிபவர்கள் ஏராளம். இவர்களில் இந்தியர்களே எங்கும் அதிகம். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகள்...

சவூதி அரேபியா 17,89,000
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 17,02,911
குவைத்    5,79,390
ஓமன்    5,57,713
கத்தார்    5,00,000
பஹ்ரைன் 3,50,000

- அகஸ்டஸ்