முடக்கலாமா சேவை உரிமைச் சட்டத்தை ?



ஜனநாயக நாட்டில் மக்கள்தான் எஜமானர்கள். அரசு ஊழியர்கள் அவர்களுக்கு சேவை செய்கின்ற வேலைக்காரர்கள். ஆனால், உலகின் ஆகப்பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவில் தலைகீழ் நிலை. உங்கள் ஊருக்கு அருகில் இருக்கிற ஒரு அரசு அலுவலகத்துக்குச் சென்றால் இந்த உண்மையை உணரமுடியும். ஒரு கடைநிலை ஊழியரின் முன்னால் கைகட்டி அச்சத்தோடு நிற்பார் ‘எஜமானர்’. அந்த ஊழியர் ஏக வசனம் பேசுவார். அந்த அலுவலகத்துக்கு அலைந்து அலைந்து எஜமானரின் கால் தேய்ந்து போயிருக்கும். 

எல்லா துறைகளிலும் ‘இந்த வேலையை இத்தனை நாளில் முடிக்க வேண்டும்’ என்று குறிப்பிடும் மக்கள் சாசனம் இருக்கிறது. புதிய ரேஷன் கார்டை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; சாதிச்சான்றிதழை 7 நாட்களுக்குள் தரவேண்டும். பட்டியல் இனத்தவராக இருந்தால் 2 நாள்தான். எந்த அரசு அலுவலகத்திலும் இது நடைமுறையில் இல்லை. புதிய ரேஷன் கார்டுக்கு வருடக்கணக்கில் அலைகிறவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், ‘வெட்டுவதை வெட்டினால்’ ஒரே வாரத்தில் வேலை முடிவதும் உண்டு.

இந்த நிலையை மாற்றத்தான் 2011ல் பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டப்படி, பொதுமக்கள் தரும் கோரிக்கைக்கு குறிப்பிட்ட நாளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பொறுப்பான அலுவலரின் சம்பளத்தில் இருந்து நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்பட்டு விண்ணப்பதாரருக்கு இழப்பீடாக வழங்கப்படும்.

19 மாநிலங்கள் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டன. தமிழகம் சீண்டவேயில்லை. தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘இங்கு அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. லஞ்சத்தையும் ஊழலையும் அகற்றும் வரமாக வந்த அந்தச் சட்டம் தமிழக எல்லைக்குள் முடக்கப்பட்டு விட்டது.

‘‘அரசு அலுவலகங்களில் மக்களை வதைக்கும் 2 விஷயங்கள் லஞ்சம், காலதாமதம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக வந்ததுதான் சேவை பெறும் உரிமைச் சட்டம். தகவல் உரிமைச் சட்டத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் மக்களை முதன்மைப்படுத்திக் கொண்டு வரப்பட்ட முக்கிய சட்டம் இது. மத்தியப் பிரதேசம், பீகார், உ.பி, ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்ராஞ்சல், இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், கர்நாடகா, கேரள மாநிலங்கள் அதை செயல்படுத்தி விட்டன. தமிழகம் கைவிட்டு விட்டது.

இது அரசு ஊழியர்களுக்கு எதிரானதாக பிரசாரம் செய்யப் படுகிறது. அது உண்மையில்லை. அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்வதை உறுதிப்படுத்தும் சட்டம். நாங்கள் பல அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்திருக்கிறோம். மக்கள் அடிமை போல நிறுத்தப்படுகிறார்கள். மக்களுக்கான சேவகர்கள் என்ற எண்ணமே பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு இல்லை.

காரணமே கூறாமல் பல மாதங்கள் அலைய விடுகிற ஊழியர்கள் நிறைய இருக்கிறார்கள். பல இடங்களில் இடைத்தரகர்கள் இல்லாமல் வேலை நடக்காது. இந்தச் சட்டம் இடைத்தரகர்களை ஒழிக்கும். காலதாமதத்தைத் தவிர்க்கும். லஞ்சத்தைப் படிப்படியாகக் குறைக்கும். மக்களின் நலனை உறுதிப்படுத்தும்’’ என்கிறார் இச்சட்டத்திற்காகப் போராடி வரும் லோக் சத்தா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற வருவாய்த்துறை ஊழியர் சங்கத் தலைவர் ஏ.ராஜு, “இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்கு பொறுப்பை உருவாக்கும்” என்கிறார்.
“மாவட்ட வருவாய் அதிகாரி யாகப் பணியாற்றியவன் நான். ஊழியர்களின் மனநிலையை நன்கு அறிவேன். எங்கள் காலத்தோடு ஒப்பிடும்போது இன்று மனதுக்கு நிறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் போன்ற நவீன சாதனங்களும் வந்துவிட்டன.

ஆனாலும் பெரும்பாலான அலுவலர்கள் ஏனோதானோவென இருக்கிறார்கள். அலுவலகச்சூழலே கெட்டுப்போய்க் கிடக்கிறது. மேலதிகாரிகளை கீழுள்ளவர்கள் மதிப்பதேயில்லை. ஒரு கிளார்க் நினைத்தால் கூட தாசில்தாரை மாற்றிவிட முடிகிறது. எல்லாவற்றிலும் அரசியல். பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது எழுதப்படாத சட்டமாக மாறிவிட்டது.

நாங்கள் பணியாற்றும் காலத்தில் ‘டாட்டன்ஹாம் சிஸ்டம்’ என்று ஒரு நடைமுறை இருந்தது. அனைத்து மனுக்களையும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலதிகாரிகள் அவ்வப்போது அதைப் பார்த்து ‘ஏன் இந்த மனுவை முடிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்புவார்கள். இன்று அந்தப் பதிவேட்டை எந்த அதிகாரியும் பார்ப்பதேயில்லை. இந்த சட்டம் இந்த நிலையை மாற்றும்...” என்கிறார் அவர்.

தமிழக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ராம்குமாரிடம் இதுபற்றிப் பேசினோம்.“மக்களுக்கு சேவை செய்வதை உறுதிப்படுத்தும் எந்த சட்டத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் அரசு அலுவலர்களின் பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும். 15 பேர் செய்ய வேண்டிய வேலையை 2 பேர் செய்கிற நிலைதான் இன்று அரசு அலுவலகங்களில் இருக்கிறது.

ஒரு துணை வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், தேர்தல் அலுவலராகவும், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரியாகவும், தகவல் உரிமைச் சட்ட அலுவலராகவும் நாலைந்து பொறுப்புகளை செய்யவேண்டி யிருக்கிறது. உடல் உளைச்சல், மன உளைச்சலோடுதான் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். எதுவுமே ஒருவர் மட்டுமே தீர்மானித்து நடக்கிற வேலையில்லை. புதிதாக ரேஷன் கார்டு வழங்க வேண்டுமென்றால் ஆர்.ஐ. விசாரித்து அறிக்கை தரவேண்டும். உதவியாளர் அதைப் பதிவு செய்ய வேண்டும். துணை வட்டாட்சியர் அதை சரிபார்த்து அச்சுக்கு அனுப்ப வேண்டும். பிரஸில் அச்சாகி வரவேண்டும். ஒரு இடத்தில் தேங்கினாலும் நின்றுவிடும்.

40 ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த மக்கள்தொகை அடிப்படையில் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இன்று பல மடங்கு மக்கள்தொகை அதிகரித்து விட்டது. பல புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இருக்கும் பணியிடங்களே காலியாக உள்ளன. காலதாமதத்துக்கு இதுமாதிரி பல காரணங்கள். எந்த ஊழியரும் திட்டமிட்டு மக்களை அலைய விடுவதில்லை...” என்கிறார் ராம்குமார்.

2010 முதல், கடந்த மாதம் வரை 41 லட்சத்து 94 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக நீதிமன்றத்தில் பட்டியல் வாசித்திருக்கிறது தமிழக அரசு. அலுவலகங்களுக்குள் முடங்கிக் கிடக்கிற மனுக்களும், பெறாமலே திருப்பி அனுப்பப்பட்ட மனுக்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களின் மீது அக்கறை உள்ள அரசு மாற்றத்துக்குத் தயாராக வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தயாராகி விடுவார்கள். பல அரசு அலுவலகங்களில் மக்கள் அடிமை போல  நிறுத்தப்படுகிறார்கள். மக்களுக்கான சேவகர்கள் என்ற எண்ணமே அரசு ஊழியர்களுக்கு இல்லை.

- வெ.நீலகண்டன்