சிலுசிலு சிகா அவார்ட்ஸ்



ஸ்வீட்... மலேசிய ட்ரீட்!

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சிகா விருதுகள், இந்தத் தடவை நடந்தது சென்னையில் அல்ல... மலேசியாவில்! கோலாலம்பூரில் நெஹ்ரா அரங்கமே இதற்காக கோலாகலம் பூண்டிருந்தது. ஒவ்வொரு விருதும் அந்தந்த துறை சார்ந்த கலைஞர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் இந்த விழாவின் சிறப்பு. சன் டி.வி வழியாக ஏப்ரல் 26 மற்றும் மே 3 என இரண்டு ஞாயிறுகளில் இது நம் வீட்டுக்கே ஆஜர்.
இதோ, ஒரு  டிரைலர்...

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் உட்கார்ந்து ரசித்த கமலின் உத்வேகம் எல்லோரையும் சந்தோஷப்படுத்தியது. கலைஞர்களைப் பாராட்டிப் பேசியும், கை தட்டியும் ரசித்த விதம் ஒரு பண்பட்ட கலைஞருக்கான அம்சம். அவருக்கான ஆயுட்கால சாதனை விருதை வழங்கியபோது எழுந்த கரகோஷம் முடிய நேரமானது. அவர் ஆற்றிய உரையும் முக்கியமானது.

கன்னடத்தின் அம்பரீஷ் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபோது, கமல் எழுந்து நின்று விசிலடித்துப் பாராட்டியது ஹைலைட். பாலகிருஷ்ணாவும், சரத்குமாரும் சேர்ந்து விருதை அளிக்க, அரங்கம் அப்ளாஸில் ஆடிப் போனது.

ஒவ்வொரு கலைஞரும் மேடையேறியபோது, தன் பக்கத்தில் இருந்த சூர்யாவிடம் கமென்ட்களை அள்ளி விட்டுக்கொண்டே  கமல். ‘கொம்பன்’ தோற்றத்தில் முறுக்கிய மீசையோடு கார்த்தி.ரசிகர்களிடமும் திறமைக்குக் குறைவில்லை. தனுஷ், பிரகாஷ்ராஜ், காஜல், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி என நடிகர்களைப் பார்த்தபோது, அவரவர் டயலாக்குகளையே ஆடியன்ஸ் சொல்ல, உற்சாக மழைதான்!

விருதுகள் யாருக்கு என்ற டென்ஷனைக் குறைத்து சந்தோஷப்படுத்தின ரஞ்சித், முகேஷ், அனிதா, விஜய் ஜேசுதாஸின் பாடல்கள்.  கவர்ச்சி ததும்ப ராய்லட்சுமி வந்தபோது சில்லிடும் அமைதி. மியூசிக் டைரக்டர்களுக்கான விருதுக்கு கடும் போட்டி. ஆனால், ஹிட்களை அள்ளிய விதத்தில் இளைஞர்களின் தரப்பு அனிருத் பக்கம் சென்றது.  சிறந்த வில்லனில் குழப்பமே இல்லை. பாபி சிம்ஹா அநாயாசமாய் தட்டிச் சென்றார்.  சிறந்த அறிமுக நடிகராக விக்ரம் பிரபு வெற்றிக்கனியைத் தட்டினார்.

இன்னும் சிறந்த நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் என விருதுகள் அணிவகுத்தபோது அதன் முடிவை அறிய சீட்டின் நுனிக்கு வந்திருந்தார்கள் ரசிகர்கள். இன்னும் இன்னும் சுவாரஸ்யங்களை விட்டுவிடாமல் பார்த்து ரசிக்க, சன் டி.வி இருக்கிறது. மலேசிய ரசிகர்கள் பெற்ற இன்பத்தை இங்கேயும் பெறத் தவறாதீர்கள்!