வளமான வாழ்க்கை தரும் கலை, அறிவியல்



தமிழகத்தில் +2 தேர்ச்சி பெறுபவர்களில் வெறும் 40% பேர்தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள். அதிலும் 10% மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களாகவும், பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள்தான் திட்டமிட்டு தரமான கல்வி நிறுவனங்களையும் தரமான படிப்புகளையும் தேர்வு செய்கிறார்கள். மீதமுள்ள 30% பேர், கிடைத்த கல்லூரியில், கிடைத்த படிப்பில் சேர்கிறார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம்.

உண்மையில், தமிழகத்தில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. செலவே இல்லாமல் பட்டம் பெறுவதற்கான வழிகளும் நிறைய உண்டு. தனியார் அமைப்புகளும் அரசுத்துறைகளும் ஏராளமான உதவித்தொகைகளை வாரி வழங்குகின்றன. அடித்தட்டுப் பிள்ளைகளும் நுழைவுத்தேர்வு எழுதி இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்; வேலைவாய்ப்பையும் பெறமுடியும். ஆனால், இதுபற்றி விழிப்புணர்வு இல்லை.

‘தனியார் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள்; அரசுப்பள்ளிகள் வீண்’ என்று எப்படி ஒரு கற்பிதம் உருவாக்கப்பட்டதோ, அதைப் போல ‘பொறியியல் படித்தால்தான் எதிர்காலம்; கலை, அறிவியல் படிப்புகள் வீண்’ என்ற ஒரு மூட நம்பிக்கையும் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால், பொறியியல் படிப்புகளை விட வேலைவாய்ப்பு மிகுந்த பல படிப்புகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரி கள் உள்ளன. இதில் 120க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகள், 150க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடக்கம். மொத்தம் 7 லட்சத்துக்கும் மேலான இடங்கள் உண்டு. 100க்கும் மேற்பட்ட துறைகளும் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளைப் போல போட்டி இல்லை. கவுன்சிலிங் நடைமுறைகள் இல்லை. அண்மைக்காலமாக துறை சார்ந்த நிறைய படிப்புகளும் வந்து விட்டன.

‘‘இன்று ஐ.டி. உட்பட பல்துறை நிறுவனங்களின் பார்வை கலை, அறிவியல் கல்லூரிகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள், பி.பி.ஓ, கே.பி.ஓ நிறுவனங்கள் வளாகத் தேர்வுகளுக்காக கலை, அறிவியல் கல்லூரிகளுக்குச் செல்கின்றன. படிப்போடு சேர்த்து ஆங்கில பேச்சுத்திறனையும் வளர்த்துக் கொள்ளும் பட்டதாரிகளுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது...’’ என்கிறார், கல்வியாளரும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகருமான டாக்டர் கே.ஜாஃபர் அலி.

‘‘கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வழங்கும் நிலை மாறிவிட்டது. திறனைத்தான் இப்போது நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றன. என்ன படித்தோம் என்பதை விட எப்படி படித்தோம் என்பதுதான் முக்கியமானது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் பொறியியல் பட்டதாரிகளின் பங்களிப்பு 20 முதல் 30 சதவீதம்தான். மீதமுள்ள அனைத்துத் துறைகளும் கலை, அறிவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பப்படுகின்றன.

வேலைவாய்ப்பும் சிறப்பான எதிர்காலமும் கொண்ட பல படிப்புகள் கலை, அறிவியலில் இருக்கின்றன. படைப்பாற்றல் நிறைந்த மாணவர்கள் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். கேட்டரிங் சயின்ஸ், ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்புக்கு மிகப்பெரும் தேவை இருக்கிறது. ஃபேஷன் டெக்னாலஜி, காஸ்ட்யூம் டிசைனிங் படிப்புகளும் எதிர்காலம் மிக்கவை. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பி.இ. பட்டதாரிகளை விட பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பட்டதாரிகளையே விரும்புகின்றன.

கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு நான்கு புறமும் பரந்து விரிந்த வாய்ப்புகள் உண்டு. இளங்கலை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி உயர் பதவிக்குச் சென்றவர்கள் நிறையப் பேர். உடனடியாக பணிக்குச் சென்று வருமானம் ஈட்ட வேண்டிய நிலையில் இருக்கும் மாணவர்கள் தாராளமாக கலை, அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்...’’ என்கிறார் ஜாஃபர் அலி.

வணிகம் சார்ந்த படிப்புகள் நிறைய அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. பி.காம் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட், பி.ஏ. பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ், பி.ஏ. கார்ப்பரேட் செகரட்டரிஷிப், புள்ளியியல் படிப்புகளை நல்ல கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் நிச்சயம். புள்ளியியல் படிப்பில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு.

முதுகலை முடித்துவிட்டு மத்திய புள்ளியியல் ஆணையம் நடத்தும் தேர்வை எழுதி கலெக்டர் ரேங்க்கில் அதிகாரி ஆகலாம். பி.ஏ. புவி புள்ளியியல், இந்தியப் பாரம்பரியம், சுற்றுலா, இன்டீரியர் டிசைன், எலெக்ட்ரானிக் மீடியா இன்ஃபர்மேஷன் போன்ற படிப்புகளுக்கும் மோஸ்ட் வான்டட். மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி போன்ற  படிப்புகளை பொறியியல் கல்லூரிகளில் படிப்பதை விட கலை, அறிவியல் கல்லூரிகளில்  படிப்பது நல்லது என்கிறார்கள் மனிதவள நிபுணர்கள்.

பயோகெமிஸ்ட்ரி, எலக்ட்ரானிக் சயின்ஸ், நாட்டிக்கல் சயின்ஸ், நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளையும் கல்வியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். ‘‘கடந்த ஆண்டு அமேசான், இ-பே போன்ற பெரிய நிறுவனங்கள் சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளிலிருந்து ஊழியர்களைத் தேர்வு செய்துள்ளன. பல மாணவர்களுக்கு தொடக்க சம்பளமே ரூ.35 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட துறையில் நல்ல தெளிவு, ஆங்கில பேச்சுத்திறன், தன்னம்பிக்கை... இது மூன்றும் இருந்தால் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு சாத்தியம்தான்’’ என்கிறார் கல்வியாளர் ‘போதி’ கலாவதி.

‘‘கலை, அறிவியலைப் பொறுத்தவரை ‘ஏதோ ஒரு பட்டம் வாங்கணும்’ என்ற மனநிலையில் படிப்பைத் தேர்வு செய்யக் கூடாது. விருப்பம், திறமை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். டைம்பாஸ் மாதிரி கல்லூரிக்குப் போகக்கூடாது. ஈடுபாட்டோடு, புரிந்து படிக்க வேண்டும். இன்டர்ன்ஷிப், பகுதிநேர வேலை போன்றவை மிகவும் முக்கியம்.

இவற்றின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் பல கல்லூரிகளில் இன்டர்ன்ஷிப் இருக்கிறது. சில கல்லூரிகள் பகுதிநேர வேலையையும் அனுமதிக்கின்றன. இதன் மூலம் வேலையை உறுதிசெய்ய முடியும். துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதிலும் முனைப்பு காட்ட வேண்டும். நிறைய மேகசின்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் அப்டேட் ஆக முடியும்...’’ என்கிற கலாவதி, உடனடி வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் சில படிப்புகளையும் பரிந்துரைக்கிறார்.  

‘‘பி.ஏ தமிழ், ஆங்கிலம் படிக்கும் மாணவர்கள் கூடவே டிசைனிங், டைப்பிங் கற்றுக்கொள்வது நல்லது. டெக்னிக்கல் ரைட்டிங், இதழியல் துறைகளில் நிறைய தேவை இருக்கிறது. அடிப்படை அறிவியல் பிரிவுகளைப் படிக்க விரும்புபவர்கள் முதுகலை, பிஹெச்.டி படித்தால்தான் உயர் பொறுப்புகளுக்குப் போகமுடியும். ஃபைனான்ஸ், காமர்ஸ், எகனாமிக்ஸ் படிப்பவர்கள் டேலி போன்ற தொடர்புடைய சாஃப்ட்வேர்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

பி.காம். படித்துக்கொண்டே சி.ஏ. படிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ‘சோஷியல் ஒர்க்’ படித்தவர்களுக்கு இங்கே நிறைய தேவை இருக்கிறது.  வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு குவிந்திருக்கிறது. இன்சூரன்ஸ் துறை சார்ந்த படிப்புக்கும் தேவை அதிகம் இருக்கிறது...’’ என்கிறார் கலாவதி.பொறியியலோ, கலை, அறிவியலோ... எதுவாக இருந்தாலும் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

எது நல்ல கல்லூரி?‘‘தகுதியான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் சாப்ட்வேர் என்றால், உள்கட்டமைப்பு வசதி ஹார்ட்வேர். இரண்டும் அத்தியாவசியம். அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் நிர்வாகம் அந்தக் கல்லூரியை நடத்துகிறதா என்று பார்க்க வேண்டும்.

வளாகத்தேர்வுகள் வருகிறதா என்று விசாரிக்க வேண்டும். நல்ல கல்லூரியில், நன்றாகப் படித்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் அமையும்...’’ என்கிறார் ஜாஃபர் அலி. மருத்துவத் துறையில் இருக்கும் வாய்ப்புகளை அடுத்த இதழில் அலசுவோம்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்த பல மாணவர்களுக்கு தொடக்க சம்பளமே ரூ.35  ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை கடந்த ஆண்டு கிடைத்திருக்கிறது.

- வெ.நீலகண்டன்