36 வயதினிலே



‘கும்பிட ஆயிரம் கோயில் கட்டுகிறோம். நமக்கும் நம் குடும்பத்திற்கும் தூணாக, தோளோடு தோள் நிற்கும் பெண்ணின் கனவுகளுக்கு எந்தவிதத்தில் நாம் துணை நிற்கிறோம்’ என்று கேள்வி எழுப்புவதுதான் ‘36 வயதினிலே’!‘ஹௌ ஓல்டு ஆர் யூ’ என ஹிட் அடித்த மலையாளப் படத்தின் தமிழ் வடிவம்.

‘பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும்; அவர்களின் வயது ஒரு பொருட்டோ, தடையோ அல்ல’ என்பதே படத்தின் மைய இழை. ஒற்றை வரி செய்தி என்றாலும் மூலக்கதைக்கும் திரை வடிவத்திற்கும் நியாயம் செய்த விதத்தில் தமிழ் சினிமா பெருமிதம் கொள்ள ஒரு படம்.

எளிய பெண்களின் பிரியங்களையும், கனவுகளையும், ஆசைகளையும் வீடும், சுற்றமும், கணவனும், அதிகார வர்க்கமும் எப்படி குதறிப் போடுகின்றன என்பதை அத்தனை அசலாக அதிகபட்ச செய்நேர்த்தியுடன் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த வகையில் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு வெல்கம்! இத்தனை தெளிவான படத்தைக் கொடுத்த விதத்தில் சூர்யாவுக்கும் பூங்கொத்து!

கல்யாணத்துக்குப் பிறகு ஒரு பெண்ணின் நலம் என்பது, அவளைச் சுற்றியிருக்கிறவர்களின் நலமாகி விடுகிறது. அப்படி ஒரு பாத்திரத்தில் ஜோதிகா. எட்டு வருடங்களுக்குப் பிறகு இதில் கனகச்சிதமாகவும் இன்னும் நேர்த்தியுடனும், கேரக்டரை உணர்ந்துகொண்ட விதத்தில் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்கிறார். கணவன் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை உதாசீனப்படுத்தும்போது மிகையாக கத்தி மெலோடிராமா ஆக்கிவிடாமல், வார்த்தைகளிலும் தேர்ந்த பாவனைகளிலும் நறுவிசு காட்டுகிறார்.

மகளும், கணவனும் தன்னைப் பிரிந்து வெளிநாடு செல்வதற்கு முன் தன் தவிப்பைச் சொல்லி உடைந்து நொறுங்கும் இடத்தில் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறார். ஒரு மிகச்சிறந்த நடிகையின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்த அளவில் இயக்குநர் பெரிய இடம் வகிக்கிறார்.ரஹ்மான் பகட்டுக்கும், மேற்கொண்டு வசதிக்கும் ஆசைப்படும் கணவன் என்ற இடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சிவசப்படுவது, இறுகிய முகம் காட்டுவது… கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமே! ஜோதிகாவின் அலுவலகக் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

ஒரு அனுபவத்தின் அனைத்து முகங்களும் வெளித் தெரிய அமைந்த காட்சிகள். தகவல்தொடர்பின் உச்சபட்ச நிலையே கேலிக்குள்ளாகிறது படத்தில். இணையம், முகநூல் இவை தவறாகப் பயன்படுத்தப் படும்போது, அந்தரங்கம், வெளியே வைக்கப்படும்போது ஏற்படும் மனச் சோர்வு, சீரழிவுக்கு சாட்டையடி.
வசனம் ரத்தினச் சுருக்கம், இறுக்கம்.

வார்த்தைகளில் படு இயல்பாகவும் யதார்த்தமாகவும் ஜொலிக்கிறார் விஜி. படம் நெடுக நடமாடும் சீரியஸ் மனிதர்களுக்கும், புரிபடாத மனிதர்களின் உணர்வுகளுக்கும் வசனகர்த்தாவாக அவர் உயிர் தருகிறார். ஜோவை திட்டி கடுப்பேற்றும் முத்துராமன், தேவதர்ஷினி, ஜோவை நிகழ்வுலகத்திற்கு இழுத்து வரும் அபிராமி என கொஞ்ச நேரமே வந்தாலும் நிஜ வாழ்க்கையை கண்ணில் நிறுத்துகிறார்கள்.

அத்தனை பேரும் அழகான தேர்வுகள்.படத்தை விட்டு தனியாக வெளியே தெரியாத கேமராவிற்கு திவாகரன் பொறுப்பு. சந்தோஷ் நாராயணனிடமிருந்து இடைஞ்சல் செய்யாத பின்னணி. மூன்றே பாடல்களில் நல்ல ஆறுதல். `வாடி, ராசாத்தி’ - ஆல்டைம் ஹிட்!பெண்களின் கனவுகளுக்கு வயதில்லை... அது புரிய, தெரிய, அறிய ஆண்களுக்கு இது அவசியம்!

- குங்குமம் விமர்சனக் குழு