இது பெண்கள் மட்டுமே ஏறும் மேடை!



பாம்பே ஞானம் கலக்கல் டீம்!

பிரபல சீரியல்களில் அழகு அம்மாவாக பாம்பே ஞானம் நமக்குப் பரிச்சயம். ஆனால், ஒரு ஆல் வுமன் நாடகக் குழுவை நடத்தி வருபவராக... அதன் மூலம் ஆன்மிகக் கருத்துக்களைச் சொல்லி வருபவராக... இப்படியொரு இன்ட்ரஸ்ட்டிங் முகமும் உண்டு இவருக்கு! முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே மேடையேறும் இவரின் நாடகக் குழுவில் 7 வயது குட்டிப் பெண் முதல் 70 வயது சீனியர் வரை இருக்கிறார்கள். ஆண்களுக்கு நோ அட்மிஷன்! மதுரை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகம் முழுக்க சென்று நாடகம் போட்டு வந்த பெருமிதமும் களைப்பும் தெரிகிறது பாம்பே ஞானம் முகத்தில்!

‘‘1989ம் வருஷம் இந்த ‘மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு’வை ஆரம்பிச்சேன். இது 26வது வருஷம். பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமூகம் சார்ந்த விஷயங்கள்னு எவ்வளவோ பண்ணிட்டோம். இப்போ, ஆன்மிகத்துக்குள்ள வந்திருக்கோம். இதுக்கும் மக்கள்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு!’’ என்ற ஞானம், இந்த டீம் உருவான விதத்தைப் பகிர்ந்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல ஒரு கிராமம். அப்பவே, டிராமான்னா ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் டிராமாவுல எல்லாம் நடிச்சிருக்கேன். ஆனா, வீட்டுல யாருக்கும் பெரிசா அதுல ஆர்வம் கிடையாது. அப்போ, பெண் குழந்தைகளை வெளிய அனுப்பவே மாட்டாங்க. எட்டாங்கிளாஸ் முடிச்சதுமே எனக்குக் கல்யாணமாகி பாம்பேக்கு வந்துட்டேன். அங்கதான் ஒரு நாடகத்துல நடிக்க வாய்ப்பு அமைஞ்சுது.

ஆனா, அங்கிருந்த நாடகக் குழுவுல என் திறமையை நிரூபிச்சு மேல வர ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னை மாதிரியே நிறைய பெண்கள் நடிக்க திறமை இருந்தும் வாய்ப்பில்லாம இருக்கிறாங்கன்னு தெரிஞ்சது. அப்போ, ‘பெண்களை வச்சு நீங்களே ஒரு குழு ஆரம்பிக்கலாமே’னு பலரும் கேட்க, அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த மகாலட்சுமி நாடகக் குழு. என்னால தனியா கதை எழுத முடியும்னு கூட அப்போ தெரியாது. திறமையை கொஞ்சம் கொஞ்சமா வளர்த்து இன்னைக்கு பேர் சொல்றளவுக்கு வந்திருக்கேன்.

எங்க குழுவுல ஆன் ஸ்டேஜ் கலைஞர்கள் எல்லோருமே பெண்கள்தான். தமிழ்நாட்டுலயே முழுவதும் பெண்களால் ஆன ஒரே நாடகக் குழுன்னு கூட சொல்லலாம். எங்க டீம்ல யாரும் நடிக்கிறதுக்காக காசு வாங்கிறதில்ல. எல்லாருமே நாடக ஆர்வத்தால மேடைக்கு வந்த அற்புதக் கலைஞர்கள்!’’ என உற்சாகம் பொங்கியவர், ஆன்மிக நாடகங்கள் பற்றித் தொடர்ந்தார்.

‘‘ஆன்மிக நாடகத்துக்குள்ள எப்படி வந்தோம்னு தெரியலை. ஆனா, கடந்த ரெண்டு வருஷமா இந்த ரூட்தான். முதல்ல, பகவான் போதேந்திராள் பத்தின நாடகத்தை அரங்கேற்றினோம். மக்கள் ரொம்ப ரசிச்சுப் பார்த்தாங்க. ஆதரவு எக்கச்சக்கம். இப்போ, ஆதிசங்கரர் அருளிய ‘பஜ கோவிந்தம்’ பத்தின நாடகத்தைப் போட்டிருக்கோம். இதுக்காக ஒரு வருஷமா கடுமையா உழைச்சோம். அவர் பிறந்த கேரளாவின் காலடி நகரத்துக்குப் போய் ஆசீர்வாதம் வாங்கித்தான் இந்த நாடகத்துக்கு பிள்ளையார் சுழியே போட்டோம்.

அவர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாத்தையும் படிச்சுட்டு, இந்த 2 மணி நேர நாடகத்தை உருவாக்குனேன். இதுல 26 பேர் நடிச்சிருக்காங்க. ஆதிசங்கரர் அந்தக் காலத்துலயே ‘எல்லோருக்கும் ஆத்மா ஒன்றுதான்’னு தீண்டாமைக்கு எதிரா பேசியவர். இதையெல்லாம் இந்த நாடகத்தில் சொல்லியிருக்கோம். இதுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். இந்தப் பயணம் இன்னும் ரொம்ப தூரம் தொடரும்!’’ - மகிழ்ச்சி பொங்க  முடித்தார் ஞானம்!எங்க டீம்ல யாரும் நடிக்கிறதுக்காக காசு வாங்கிறதில்ல. எல்லாருமே ஆர்வத்தால வந்த அற்புதக் கலைஞர்கள்

- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்