குழந்தைத் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்..?



குழப்பும் மத்திய அரசு

ஒரு நாட்டின் மிகப்பெரிய வளமும் எதிர்காலமும் குழந்தைகள்தான். தேசத்தின் மீது அக்கறையுள்ள அரசு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கல்வி தந்து, உணவு தந்து, அறிவார்ந்த குடிமக்களாக குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

மாறாக, குழந்தைகளை பாகுபடுத்தி, உழைப்பைச் சுரண்டி, அவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கக்கூடாது. மத்திய அரசு குழந்தைத் தொழிலாளர் தடை சட்டத்தில் கொண்டு வந்திருக்கும் திருத்தம் அப்படியான ஒரு வேலையைத்தான் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் குழந்தை உரிமை  செயற்பாட்டாளர்கள்.

உலகம் முழுவதும் சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கலாம் என்று கணிக்கிறது ஐ.நா. இந்தியாவில் சுமார் 7 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. ஏழைப் பெற்றோருக்குப் பிறந்ததால், பெற்றோரால் கைவிடப்பட்டதால், உழைத்தே சாப்பிட வேண்டும் என்ற சூழலால், இன்னபிற காரணங்களால் பல குழந்தைகளின் பால்யம் கருகிப் போகிறது.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம்-1976, குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழிப்புச் சட்டம்-1986, குழந்தைகளை தொழிலாளர்களாக அடமானம் வைப்பதற்கு எதிரான சட்டம்-1993, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2000 என பல சட்டங்கள் உண்டு. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதையும், குழந்தைகளிடம் வேலை வாங்குவதையும் குற்றமாக்குகின்றன இந்த சட்டங்கள். 

ஆனாலும் சட்டத்தின் கண்களையும் அதிகாரிகளின் கண்களையும் மறைத்து குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவது தொடரத்தான் செய்கிறது. இதைத் தடுப்பதற்காக மத்திய அரசு குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவதோடு சிறைத்தண்டனை அளிக்கவும் இந்தத் திருத்தம் வகை செய்கிறது.நல்ல விஷயம்தானே... இதில் என்ன பிரச்னை?

ஒருபக்கம், குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவோருக்கு தண்டனையை அதிகப்படுத்தி விட்டு, இன்னொரு பக்கம் குழந்தைகள் தொழிலாளராவதை சட்டபூர்வமாகவும் மாற்றி விட்டார்கள். பள்ளி நேரம் தவிர பிற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் குடும்பத்தொழில்,  குடும்ப நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் வேலை செய்யலாம்.  தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளைப் பயன்படுத்துவது குற்றமில்லை.

‘‘இப்போது பட்டாசுத் தொழில் முதல் தீப்பெட்டித் தொழில் வரை அனைத்தும் ‘அவுட்சோர்சிங்’ முறைக்கு மாறிவிட்டன. மக்கள் மூலப்பொருட்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து தயாரித்து நிறுவனங்களுக்குத் தருகிறார்கள். அப்படிப் பார்த்தால் எல்லாமே குடும்பத் தொழில்கள்தான். இன்று தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை.

அவர்கள் எல்லோரும் வீடுகளில் இருந்தபடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள், நெசவுத்தொழிலாளர்கள், பீடி, தீப்பெட்டி, புகையிலைத் தொழிலாளர்களின் பிள்ளைகளே குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதை சட்டபூர்வமாக்கியிருக்கிறது மத்திய அரசு.

வாழ்க்கையில் திரும்பக் கிடைக்கவே கிடைக்காத பருவம் குழந்தைப்பருவம். உடல், மனம், மூளை அனைத்தும் வளரும் பருவம். அப்பருவத்தில் நல்ல கல்வி தேவை. விளையாட்டு தேவை. நல்ல நட்பு தேவை. இதையெல்லாம் பறித்து, அவர்களை தொழிலாளர்களாக்கி குறுக்கப் பார்க்கிறார்கள். பள்ளிக்கூடம் பாதிக்காமல் வேலை செய்யலாமாம். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பூப்பறிக்கச் செல்லும் குழந்தை 9 மணிக்கு வீடு திரும்புகிறது.

அதன்பிறகு பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படிக்க முடியுமா? காலை 3 மணிக்கு தன் தந்தையோடு கடலுக்குள் செல்கிற சிறுவன் 7 மணிக்குக் கரைக்குத் திரும்புகிறான். உறக்கத்தைத் தொலைத்து வலைக்குப் போகிற அந்த சிறுவனால் பள்ளிக்கூடத்தில் அமர முடியுமா? சமூகத்தில் நடக்கும் தவறுகளை அக்குழந்தைகள் பழகிக்கொள்ள மாட்டார்களா?

வேலைக்குச் செல்வதன் மூலம் கல்வியோடு சேர்த்து ஒரு தொழிலையும் கற்றுக்கொள்வார்கள் என்கிறது மத்திய அரசு. மீண்டும் குலக்கல்வி முறை... துப்புரவுப் பணி செய்கிற ஒரு தொழிலாளி குடும்பத் தொழில் என்பதற்காக தன் பிள்ளையை அதில் ஈடுபடுத்தினால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னாவது? ஐ.நாவின் குழந்தை உரிமைக்கான உடன்படிக்கை, 18 வயதுவரை உள்ளவர்களை குழந்தைகளே என்கிறது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் அப்படித்தான் வரம்பு வைத்திருக்கின்றன. இந்தியா 100 ஆண்டுகள் பின்னோக்கி நடக்கிறது. இப்படிச் செய்தால் வீடுகள் தொழிற்சாலைகளாக மாறிவிடும்...’’ என்கிறார் தேவநேயன்.

‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான சம உரிமைக் கோட்பாட்டுக்கு விரோதமான செயல்பாடு இது’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
‘‘அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும். வசதியான குடும்பத்துக் குழந்தைகள் பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லலாம். விளையாடலாம்.

நூலகத்திற்குப் போய் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். வசதியில்லாத குடும்பத்துப் பிள்ளைகள் வேலைக்குப் போக வேண்டும். ஆனால் இரு குழந்தைகளும் ஒரேமாதிரி தேர்வுதான் எழுத வேண்டும். மிகப்பெரிய வேடிக்கை இது. மத்திய அரசு சமூகத்தில் பெரும் பாகுபாட்டை உருவாக்கப் பார்க்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, வாழ்வுரிமையைப் பற்றிப் பேசுகிறது. கல்வியும் சுகாதாரமும் நல்வாழ்வும் வாழ்வுரிமை சார்ந்ததுதான். வேலைவாய்ப்புகளை உருவாக்கி பெற்றோரின் பொருளாதாரச் சூழலை உயர்த்தி குழந்தைகளை சிறப்பாக வளர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, குடும்பத்தின் சுமையை குழந்தைகள் தலையில் சுமத்தி எதிர்காலத்தைக் குலைப்பது என்ன மனநிலை? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கழிந்தபிறகு, இப்படியான ஒரு பிற்போக்குச் சட்டத்தை எந்த நாடும் எதிர்பார்க்காது.

கல்வி உரிமைச் சட்டத்தை செயலிழக்கச் செய்து மனுதர்மத்தை மீண்டும் வலுப்படுத்தவே இந்த சட்டத் திருத்தம். வாய்ப்பிருக்கிற குழந்தை வளமாக வாழலாம்; வாய்ப்பில்லாத குழந்தை குடும்பத் தொழிலைக் கற்றுக்கொண்டு வேலைக்குப் போகலாம் என்பதை அரசே ஒரு விதியாக்குகிறது...” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. பஞ்சு போலிருக்கும் பிஞ்சுக் கைகளில் உழைப்பைத் திணித்து காய்ப்பை உருவாக்கத் துடிக்கும் நடவடிக்கை நியாயமற்றது.

பெற்றோரின் பொருளாதாரச் சூழலை உயர்த்தி  குழந்தைகளை சிறப்பாக வளர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, குடும்பத்தின்  சுமையை குழந்தைகள் தலையில் சுமத்தி எதிர்காலத்தை குலைப்பது என்ன மனநிலை?  

- வெ.நீலகண்டன்