கமல் என் கடவுள்!



எமோஷனல் எம்.எஸ்.பாஸ்கர்

காமெடி, சென்டிமென்ட் எனக் கிடைத்த கேரக்டர்களில் எளிதாக சிக்ஸர் அடிப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். `உத்தம வில்லன்’, ‘வை ராஜா வை’, ‘இந்தியா பாகிஸ்தான்’ என சமீபத்தில் வெளியான 3 படங்களிலும் வெரைட்டியான ரோல்களில் இவர் ஆஜர். சாலிகிராமத்தில் உள்ள எம்.எஸ்.பாஸ்கரின் வீட்டிற்குப் போனால், கரண்டியும் கையுமாக வந்து கதவைத் திறக்கிறார் அவரே. ‘‘வொய்ஃப், குழந்தைங்க கேரளா போயிருக்காங்க. உக்காருங்க... சாம்பார்ல காய்கறி போட்டுட்டு வந்துடுறேன்..!’’ என்கிறார் சிரித்தபடி.

‘‘ `உத்தம வில்லன்’ல சொக்கு செட்டியாரா நடிச்சிருந்தேன். அதுல ஒரு டயலாக், ‘இத்தனை வருஷமா உங்களை என் உடன்பிறந்த பிறப்பாதான் நினைச்சிட்டிருக்கேன்’னு வரும். அது வெறும் வசனம் இல்லை. என் இதயத்தில் இருந்து வந்த ஒலி. உண்மையிலேயே கமல் அண்ணான்னா எனக்கு உயிர். ஏன், நான் கடவுளாக பூஜித்துக்கொண்டிருப்பதே கலைஞானி அண்ணனைத்தான்!’’ - கமல் வணக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் மனிதர்.‘‘கமலுக்கும் கடவுளுக்கும்தான் செட் ஆகாதே... நீங்க இப்படிச் சொன்னால் அவருக்கு கோபம் வராதா?’’

‘‘அவருக்கு கடவுள் பிடிக்காது என்று யார் சொன்னது? `தசாவதாரம்’ படத்திலிருந்து கமல் அண்ணாவுடன் அறிமுகம். `உன்னைப் போல் ஒருவன்’, `உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என்று அவருடன் நடித்து வருகிறேன். அபிராமி அந்தாதியில் ஐம்பது பாடல்கள் அவருக்கு மனப்பாடம். சித்தர் பாடல்களை சிறிதும் பிழையில்லாமல் சொல்வார். மூடத்தனங்களை விட்டு ஒழியுங்கள் என்று முழங்குபவர் அவர்!’’‘‘ `உத்தம வில்லன்’ல மறக்க முடியாத அனுபவம்..?’’

‘‘கமல் அண்ணாவைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் இன்று ஒருநாள் போதாது.  ஒரு காட்சி யில்... தலையில் முடி இல்லாமல் வருவார் அவர். பக்கத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். `ரெண்டு தலையும் ஒரே மாதிரி இருக்கே’ என்று ஊர்வசி சொன்னார். உடனே கமல் என் தலையைக் காண்பித்து, `அது காலம்’ என்றவர், தன் தலையைக் காண்பித்து `இது கோலம்’ என்றார்!’’

 `` ரிலீஸுக்கு முன்னாடி பிரச்னை வந்தால் அது கமல் படம்... ரிலீஸுக்கு அப்புறம் பிரச்னை வந்தால் அது ரஜினி படம்னு ஆகிடுச்சே..?’’‘‘காய்த்த மரம்தான் கல்லடி படுமென கண்கூடாய் நான் பார்த்ததுண்டு. புத்தன், ஏசு, காந்தியைக் கூட குற்றம் சொல்லி கேட்டது உண்டு என்பார்கள். ஒருவேளை புகழ்பெற்றவர்களை எதிர்த்து எதாவது செய்தால், புகழ் பெறலாம் என்று சிலர் எண்ணுகிறார்களோ என்னவோ! பிரச்னை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் அது படத்திற்கும், திரைத்துறைக்கும் இழப்புதான். இனி இப்படி பிரச்னைகள் வராமல் காப்பாற்று என்று நான் நம்புகின்ற சிவனை வேண்டிக்கொள்கிறேன்!’’‘‘காமெடி, சென்ட்டிமென்ட் ரெண்டுத்தையும் விடுறதில்லையே நீங்க?’’

‘‘பாராட்டிற்கு நன்றி. இயக்குநர் சொல்வதைக் கேட்பது மட்டுமல்லாது அந்தந்த கேரக்டரைப் புரிந்துகொண்டு உண்மையாக உழைத்தால், எந்த வேடத்திலும் சோபிக்கலாம் என்பது என் பணிவான கருத்து!’’‘‘மதுரை, நெல்லை, கோவை, சென்னைன்னு எல்லா தமிழும் நல்லா பேசுறீங்களே... எப்படி?’’

‘‘தஞ்சாவூரிலிருந்து நான் வரும்பொழுது எனக்கு தஞ்சைத் தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. சென்னைத் தமிழை புரிந்து கொள்ளவே சிரமப்பட்டேன். ஒரு பற்பசை நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்தபோது, பல கடைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர்களோடு பழகி திருநெல்வேலி தமிழைக் கற்றேன். அடுத்து, நான் சந்திக்கும் மனிதர்களை வைத்தே கோவை தமிழ், மதுரை தமிழ் எல்லாம் கற்றேன். இன்னமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதே சரியான பதம்!’’

‘‘நல்லா சமைப்பீங்களோ?’’``உள்ளே முருங்கைக்காய் சாம்பார் கொதிக்கிறது. சமையல் என்பது ஆண்களுடையதுதானே... நளபாகம்தானே! இருந்தாலும் என் மனைவி சமைக்கிற அளவிற்கு சுவையாக இருக்குமா என்பதை சாப்பிட்டுப் பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். நான் இப்போதெல்லாம் காலை உணவு உண்பதில்லை. உணவின் அளவையும் குறைக்கிறேன். `கொஞ்சம் வயித்தைக் குறை’ என்று கமல் அண்ணா சொல்லியிருக்கிறார். அதற்காக நடைப்பயிற்சியும் மேற்கொள்கிறேன்!’’‘‘ரொம்ப காலமா இருக்கீங்க. சினிமாவில் உங்களுக்கான அங்கீகாரம் கொஞ்சம் லேட்டா கிடைச்சிருக்கறதா வருத்தம் இருக்கா?’’

‘‘இல்லை. இப்போதாவது கிடைத்ததே என்ற சந்தோஷம் உண்டு. இதுவரை நான் 136 படங்கள் பண்ணியிருக்கறதா சொல்றாங்க. ஆனால், நான் ஒவ்வொரு படத்தையும் புதுப்படமாகத்தான் நினைத்து பண்ணுகிறேன். எவ்வளவோ டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகள் கடைசி வரை அதே துறையில் இருக்கிறார்கள். நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சின்னத்திரை கலைஞராக மாறி, இன்று பெரிய திரையிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே... அது இறைவனின் அருள்தானே!’’
``பசங்க என்ன பண்றாங்க?’’

‘‘மகள் ஐஸ்வர்யா பாஸ்கர், இப்போது விஸ்காம் முடிச்சிட்டாங்க. `இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் என்னுடைய மகளாக நடித்த பெண்ணிற்கு குரல் கொடுத்து, திரைத்துறையில் கால் பதித்திருக்கிறாள். மகன் ஆதித்யா பாஸ்கர், பன்னிரண்டாவது வகுப்பு படிக்கிறார். யார் மனமும் புண்படாமல் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர்!’’‘‘ நீங்க இப்பவும் டப்பிங் போறீங்களா?’’

‘‘ஆமாம். ஸ்பைடர்மேன், பேட் பாய்ஸ் எனப் பல ஆங்கிலப்படங்களுக்கு தொடர்ந்து டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய சகோதரியின் மகன் கீர்த்தி வாசன் செய்கின்ற படங்கள், மற்ற பழைய நண்பர்கள் அழைத்தாலும் அவர்களுக்காக டப்பிங் பேசி வருகிறேன். தெலுங்கில் பிரம்மானந்தம் நடிக்கும் படங்கள் தமிழில் டப் ஆகும்போது அவருக்கு டப்பிங் நான்தான்!’’

‘‘முன்னாடியெல்லாம் இயல்பா பேசுவீங்க... இப்போ பேட்டியில் கூட மேடைப்பேச்சு மாதிரி சுத்தத் தமிழில் சுளுக்கெடுக்குறீங்களே... அரசியலுக்கு வரப்போறீங்களா?’’``ஆமாம். அரசியல் ஆர்வம் இருப்பதினால்தான் தவறாமல் ஓட்டுப் போடுகிறேன். ஆங்கிலம் கலக்காமல் பேசுவோமே என்ற எண்ணமும் உண்டு. இவை எல்லாமே என் கடவுள் கமல் அண்ணாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பதுதான்!’’ - சமையலறையிலிருந்து சாம்பார் மணம் வீச, `சாப்பிடச் சொல்லிவிடுவாரோ...’ என பயந்து ‘பாய்’ சொல்லிக் கிளம்பினோம்.

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்