அழகு



மத்தியானத்திலிருந்து டென்ஷனாகவே இருந்தான் கதிர்வேல். காரணம், அவன் நாளை பெண் பார்க்கப் போகவிருந்த சித்ரா! இன்றே அவனுக்கு திடீரென போன் செய்து, ‘‘இன்று மாலை நாம் இருவரும் நேதாஜி பார்க்கில் சந்திக்கலாம்...’’ என்று சொல்லியிருந்தாள்.இதில் என்ன டென்ஷன்?கதிர்வேல் சுமாராகத்தான் இருப்பான்.

சராசரி வருமானம்தான். சித்ராவுக்கும் பல் எடுப்பு, மாநிற தேகம். ஜாதகம் ரொம்பவே பொருந்தி இருந்ததால் பெண் பார்க்கப் போகலாம் என வீட்டில் சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில்தான் அவளிடமிருந்து போன். கொஞ்சம் குழப்பமாகியிருந்தான் கதிர்வேல்.

மாலை...இருவரும் புகைப்படத்தில் பார்த்திருந்ததால் பரஸ்பரம் அடையாளம் கண்டுகொண்டனர்.‘‘ஆமா... இங்கே எதுக்கு வரச் சொன்னீங்க..?’’ - எடுத்ததுமே கேட்டான் கதிர்.‘‘நான் பார்க்க சுமாரா, துருத்தின பல்லோட, கறுப்பா இருக்கேன். நீங்க எங்க வீட்டுக்கு வந்து பார்த்துட்டு என்னைப் பிடிக்கலைனு சொல்லிட்டுப் போனா அப்பா-அம்மா மனசு கஷ்டப்படும். தெருவில் உள்ளவங்க கேலிப் பேச்சுக்கு ஆளாக வேண்டி வரும். இப்பவே என்னைப் பார்த்து நீங்க உங்க முடிவைச் சொன்னா...

அப்பா-அம்மா மனம் நோகாம நான் பேசி சமாளிச்சிடுவேன்!’’ என்றாள் அவள்.பெற்றவர்களுக்கு தன்னால் மனவேதனை வரக்கூடாது என நினைக்கிற நல்ல மனதுதான் அழகு எனத் தோன்றியது கதிர்வேலுக்கு. ‘சம்மதம்’ என அடுத்த நொடியே தலையாட்டினான்.

டி.சேகர்