வாட்ஸ்அப் ஃபார்வேர்டிங்...



சொந்த செலவில் சூனியம்!

‘‘போட்டோவுல நீங்க பார்க்குற இந்தப் பொண்ணுக்கு ஒரு ஆக்ஸிடென்ட்ல கண்ணு போயிடுச்சு. ஆபரேஷனுக்கு 25 லட்ச ரூபாய் செலவாகும். நாங்க உங்ககிட்ட காசு கேக்கல... இந்த மெசேஜை உங்க  குரூப் எல்லாத்திலும் ஃபார்வேர்டு பண்ணுங்க.

ஒவ்வொரு ஃபார்வேர்டுக்கும் ஒரு குறிப்பிட்ட பைசா இந்தப் பொண்ணோட மருத்துவச் செலவுக்கு போய்ச் சேரும்!’’ - கிட்டத்தட்ட இதே டைப் மெசேஜ்கள் உங்கள் வாட்ஸ்அப்பிலும் அட்லீஸ்ட் அரை டஜன் கிடக்குமே? ‘யெஸ்’ என்றால், மிஸ் பண்ணாமல் இதைப் படிங்க!

‘‘காசா பணமா? ஃபார்வேர்டுதானே! பொண்ணு வேற அம்சமா இருக்கு(!!)... பாவம்! உடனே என் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் இதை அனுப்பிட்டேன்!’’ என்கிறார்கள் இளசுகள் பலர். சிலருக்கோ தயக்கம். ‘‘ஒவ்வொரு ஃபார்வேர்டுக்கும் காசு தர வாட்ஸ்அப் கம்பெனி என்ன இளிச்சவாயங்களா? இவங்க சொல்றதை நம்பவும் முடியல. சென்டிமென்ட்டுக்கு பலியாகாமலும் இருக்க முடியல!’’ எனப் பரிதவிக்கிறார்கள் அவர்கள்.

நிஜத்தில் இப்படியெல்லாம் அதிகம் ஷேர் ஆகும் வாட்ஸ்அப் தகவல்கள் யாருக்கேனும் பணம் பெற்றுத் தர முடியுமா?‘‘முடியும். ஆனால்...’’ என சில அதிர்ச்சித் தகவல்களை அடுக்குகிறார் தொழில்நுட்பவியல் நிபுணர் ஹெச்.ஆர்.மோகன்.‘‘வாட்ஸ்அப் நினைத்தால், ஒரு குறிப்பிட்ட குறுஞ்செய்தியில் விளம்பரங்களைப் புகுத்தி, அந்த விளம்பரதாரரிடமிருந்து பணம் பெற்று பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்க முடியும். டெக்னிக்கலாக இது சாத்தியமே தவிர, இதை அவர்கள் செய்வார்களா என்பது பெரிய கேள்விக் குறி. எத்தனை பேருக்கு இப்படியெல்லாம் தனி கவனம் எடுத்து வாட்ஸ்அப்பால் உதவ முடியும்? ஆக, இது போன்ற தகவல்களில் 50 முதல் 60 சதவீதம் ஏமாற்றுக்காரர்களின் தூண்டிலாகத்தான் இருக்கும்!’’ என்கிறார் அவர்.

இது யார் போடும் தூண்டில்? எதற்காக? கட்டற்ற மென்பொருள்களுக்காக இயங்கும் ஃப்ரீ சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் தலைவரான சிபியிடம் இதற்கு விடை இருக்கிறது.‘‘அப்பாவிப் பெண்களின் போட்டோக்களை வைத்து செய்யப்படும் விஷமமாகவும் இது இருக்கலாம் எனத் தோன்று கிறது. மற்றபடி, பெரும்பாலும் இவை ஸ்பாம் எனும் தேவையற்ற தகவல்கள்கள்தான். இந்தத் தகவல்களோடு சேர்ந்து, ட்ரோஜன் வார்ம் எனப்படும் வைரஸ் நம் செல்போனுக்குள் வந்துவிடும். இவை நமது பர்சனல் போட்டோக்கள் மற்றும் ரெக்கார்டிங்குகளை திருடி, தன் எஜமானருக்கு அனுப்பலாம். ஜஸ்ட் ஃபார்வேர்டுதானே என நினைப்போம். ஆனால், இது பேராபத்து. அடிக்கடி இளசுகளின் பர்சனல் பேச்சுகள் வாட்ஸப்பில் வெளியாக இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!

இன்னும் சில ஃபார்வேர்டு மெசேஜ்கள் எத்தனை போன்களுக்கு பரவுகிறதோ அத்தனை நம்பர்களையும் சேகரித்து குறிப்பிட்ட சர்வருக்கு அனுப்பும். மார்க்கெட்டிங் உலகுக்கு இந்த நம்பர்கள் லட்சக்கணக்கில் விற்கப்படும். நமக்கும் மார்க்கெட்டிங் அழைப்புகளின் தொல்லை அதிகமாகும்!’’ என்கிறார் அவர்.இதிலிருந்தெல்லாம் நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி? அதையும் சிபியே விவரிக்கிறார்.

‘‘இப்போதைக்கு முழுமையாக இதற்குத் தீர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறோம் என்றாலே எதோ ஓர் வகையில் நாம் கண்காணிக்கப்படலாம் என்பதே நிதர்சனம். முடிந்தவரை இப்படிப்பட்ட மெசேஜ்களில் ஆடியோ அல்லது போட்டோ ஃபைல் ஒன்றை இணைத்திருப்பார்கள். வெறும் எழுத்துக்களை விடவும் இப்படிப்பட்ட கோப்புகளில்தான் வைரஸ் வரும் வாய்ப்பு அதிகம்.

ஆக, ‘ஃபார்வேர்டு செய்யுங்கள்’ என்ற வேண்டுகோளோடு ஆடியோவோ, வீடியோவோ, போட்டோவோ வந்தால், அனுப்பிய நபரிடமே அதைப் பற்றித் தீர விசாரித்து, ஆபத்தில்லை என்ற பின், டவுன்லோடு செய்யலாம். வாட்ஸ்அப்பில் தானாக ஃபைல்கள் டவுன்லோடு ஆகும் ஆப்ஷனை செட்டிங்ஸில் போய் நிறுத்தி வைக்கலாம். அடிக்கடி போனிலிருந்து தேவையான தகவல்களை எடுத்துக் கொண்டு ஒரு ஃபேக்டரி ரீசெட் அடிக்கலாம். இதெல்லாம் வைரஸ் பாதிப்பு மற்றும் தகவல் திருட்டு வாய்ப்பை ஓரளவு குறைக்கும்!’’ என்கிறார் அவர்.அப்போ, இனி போனை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கக் கூடாது!

அலர்ட் அடையாளம்!

நம் இரக்க குணத்தைப் பயன்படுத்தி ஈட்டி இறக்கும் ஆபரேஷன் மெசேஜ்கள் மட்டுமே வைரஸ் சுமந்திருப்பதில்லை. தாமிரபரணி, மீத்தேன் வாயு என சமூக உணர்வுகளைத் தூண்டும் கத்தி பட டயலாக்குகளாகவும், ‘இந்தக் குழந்தை தொலைஞ்சு போச்சு’ என்ற உதவி மெசேஜ்களாகவும் கூட வைரஸ் மெசேஜ்கள் உலவுகின்றன. ஆபத்துக்கு உதவும் ஹெல்ப் லைன் நம்பர்களின் தொகுப்பாகவும் கூட இவை வரலாம்.

‘நாலு பேருக்கு பயன்படுமே’ என ஃபார்வேர்டு செய்தால் இவை அனைவருக்குமே ஆப்பு வைத்துவிடும். பொதுவாக இப்படிப்பட்ட மெசேஜ்கள், ‘இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்’ என்ற வேண்டுகோளோடு முடியும். ‘அப்படிப்பட்ட மெசேஜ்களையே புறக்கணிப்பது நல்லது’ என்கிறார்கள் நிபுணர்கள். ஆடியோவில் பேசுகிறவர்கள் தங்கள் பெயர், முகவரி போன்ற அடையாளத்தைச் சொல்லவில்லை என்றால் அதை ஷேர் செய்யக் கூடாது என்பதும் பொது விதி!

- நவநீதன்