இட்ஸ் a மிராக்கிள்!



வாய்ஸ் ஓவர் ராமநாதன்

ஒரு கட்டில் மட்டும் இல்லையென்றால் அதை பூஜை அறை என்றே நினைத்திருப்போம். ரவுண்டு கட்டியிருக்கும் சாமி படங்கள், ஒரு பெட்ரூமுக்கு நிச்சயம் ஓவர் டோஸ். டபுள் காட்டில் ஒரு பக்கம் சாதாரண படுக்கை. இன்னொரு பக்கம் தலையணை போட்டு அதன் மேல் சாய்பாபாவின் போட்டோ வைக்கப்பட்டிருக்கிறது.

‘‘அதுவா? என் பக்கத்திலேயே பாபா படுத்துக்குறதுக்கு இடம் விட்டிருக்கேன் சார்!’’ - ஒரு கொத்து ஊதுபத்தி ஏற்றி வைத்து சீரியஸாகப் பேசுகிறார் ராமநாதன். ‘ஏழாம் அறிவு’ பணத்தாசை புரொபஸராக கவனிக்க வைத்தவர். ஹேர் ஆயிலும் கையுமாக தினம் நம்மைத் துரத்தி அடிக்கிறவர்!

‘‘இதுவரை நான் யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை சார். ஏன்னா, என் கதையை யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியே எழுதவும் மாட்டாங்க. இந்த வாழ்க்கையே எனக்கு சத்யசாயி பாபா கொடுத்தது. இட்ஸ் எ மிராக்கிள். பல கோடி ரூபாய்ல பிரின்டிங்  பிஸினஸ் பண்ணிட்டிருந்தவன் நான். வேலை செஞ்சவங்களுக்கு சம்பளமே மாசம் 5 லட்ச ரூபாய் கொடுத்தவன். திடீர்னு பெரிய நஷ்டம். எந்திரிக்க முடியல. சம்பாதிச்சதுக்கும் கடனுக்கும் சரியாப் போச்சு.

‘நாளைக்கு என்ன’ன்னு தெரியாம படுத்துக் கிடந்தப்ப, கனவுல பாபா வந்தார். தொண்டையைத் தடவிக் கொடுத்து ‘கவலைப்படாதே’ன்னு சொன்னார். அடுத்த நாளே சரவணா வீடியோஸ்ல இருந்து போன்... ‘‘ ‘விழிப்புணர்வு’ன்னு ஒரு ஆவணப்படத்துக்கு நீங்க வாய்ஸ் ஓவர் தர முடியுமா?’’னு கேட்டாங்க. எனக்கு வாய்ஸ், சினிமா இதைப் பத்தியெல்லாம் அப்போ ஒண்ணுமே தெரியாது.

பார்த்தா, அந்த நிறுவனத்தோட ஓனர் பாபா பக்தர். எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தே ஆகணும்னு அவர் உறுதியா இருந்தார். குரல் கொடுக்குறதுல உள்ள சில நுட்பங்களை அவரே சொல்லிக் கொடுத்தார். அன்னைக்கு ஆரம்பிச்ச பயணம், இப்பவும் சக்ஸஸ்ஃபுல்லா போயிட்டிருக்கு!’’ என்கிற ராமநாதன், பிரின்டிங் துறையில் A to Z அறிந்தவர்.

‘‘எங்க அப்பா 1923லயே கொல்கத்தாவில் டிட்டாகர் பேப்பர் மில்ல டெக்னிக்கல் ஹெட்டா வேலை பார்த்தார். நான் பொறந்தது, 5ம் வகுப்பு வரை படிச்சதெல்லாம் அங்கதான். ஸோ, தமிழ் தெரியாது. சென்னை வந்தப்புறமும் என்னை இந்தி, சமஸ்கிருதம் எடுத்து படிக்க வச்சாங்க. விவேகானந்தா காலேஜ்ல பி.காம் படிச்சுட்டு அப்பா போலவே பிரின்டிங் பிஸினஸ்ல இறங்கிட்டேன்.

காலேஜ்லயும் தொழில்லயும் பேசிப் பழகி வந்ததுதான் தமிழ். சிவாஜி சார் ஃபேமிலியில ராம்குமார் எனக்கு காலேஜ் மேட். எப்பவுமே அவங்க குடும்பத்தோட இனிய உறவு உண்டு. ‘சிந்து பைரவி’ படத்துக்கு தேசிய விருது கிடைச்சப்போ, அதுக்கு ஒரு வாழ்த்து மலர் போடணும்னு பாலசந்தர் சாரோட அசிஸ்டென்ட்டா இயக்குநர் வசந்த் வந்தார். அதிலிருந்து அவர்கூட பழக்கம். இவ்வளவுதான் என் சினிமா கான்டாக்ட். நானும் சினிமாவுல நடிப்பேன்னு அவங்க கூட அப்போ கனவு கண்டிருக்க மாட்டாங்க. வெறும் வாய்ஸ் ஓவர், டப்பிங்னு போயிட்டிருந்தப்ப டைரக்டர் வசந்த்தான் கூப்பிட்டு, ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்துல நடிக்க வச்சார். அதுதான் முதல் படம்.

இப்ப 21 படங்கள் பண்ணியாச்சு. சென்னையில சுமார் 150 ரெக்கார்டிங் ஸ்டூடியோவுல நான் டப்பிங், வாய்ஸ் ஓவர் பண்ணியிருக்கேன். எக்கச்சக்க குறும்படங்கள்ல நடிச்சிருக்கேன். பேராசிரியர், டாக்டர், விஞ்ஞானி, பாதிரியார், அமெரிக்க ரிட்டன்னு எனக்கான சில கேரக்டர்கள் இருக்கு. மொட்டை போடும்போது தவிர மற்ற நேரத்தில் தாடியை எடுக்கக் கூடாதுன்னு பாபா உத்தரவு. அதனால வேற கெட்டப் ட்ரை பண்றதில்லை.

‘கஜினி’ ஓபனிங் சீன்ல மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருப்பேன். ‘நண்பன்’ படத்தில் ஜீவாவை இன்டர்வியூ பண்ணுவேன். இப்ப, `எனக்குள் ஒருவன்’ படத்தில் டி.வி சேனல் ஹெட்... இதெல்லாமே என் முகத்தை மக்கள் மனசுல பதிய வச்சிருக்கு!’’ என்கிற ராமநாதனுக்கு ஒரு மகன், ஒரு மகள் என அளவான குடும்பம்.

‘‘பையன் குமார் நாராயணன், மியூஸிக் டைரக்டர். இங்கே ரெண்டாவது மாடியில நான் இருக்கேன்னா, கீழே முதல் மாடி ஃபுல்லா அவரோட ‘சாய்ன் டியூன்ஸ்’ ஸ்டூடியோதான். இப்போ ‘எதிர்மறை’ன்னு ஒரு படத்துக்கு இசையமைச்சிருக்கார். பொண்ணு ஆனந்த லட்சுமி. வீட்ல அதிதின்னு கூப்பிடுவோம். கல்யாணம் ஆகி பெங்களூருல இருக்கா. அங்கேயே ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல அவ டீச்சர்.

இதுக்கு முன்னாடி என் பொண்ணு வேலை பார்த்துக்கிட்டிருந்த ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போயிருந்தேன். அங்கதான் கமல் பொண்ணு அக்‌ஷரா படிச்சாங்க. அந்த சமயம் அக்‌ஷராவைப் பார்க்க கமல் சாரும் வந்திருந்தார். மீட் பண்ணிப் பேசினேன். ‘என்ன பண்றீங்க?’ன்னு கேட்டார். ‘கவலைப்படாம இருக்கேன்’னு சொன்னேன். இப்பவும் எப்பவும் அதுதான் என் பாலிஸி.

 சினிமாவில் நானா போய் இதுவரைக்கும் வாய்ப்பு கேட்டதில்லை. தட்டிப் போனதுக்காக கவலைப்பட்டதும் இல்லை. இந்த நிமிஷம்தான் எனக்கானதுனு நம்புறேன். விளம்பரப் படங்கள் எடுக்கிறவங்களுக்கு கன்சல்டன்ட் கம்பெனி ஒண்ணு தொடங்குறதுதான் எதிர்கால லட்சியம். பாபா அதையும் அருள்வார்னு நம்புறேன்!’’ - பேசி முடிக்கவும் ஊதுபத்திகள் கரைந்திருந்தன.

நானா போய்இதுவரைக்கும் வாய்ப்பு கேட்டதில்லை.தட்டிப் போனதுக்காககவலைப்பட்டதும் இல்லை. இந்த நிமிஷம்தான் எனக்கானதுனு நம்புறேன்.

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்