ஐந்தும் மூன்றும் ஒன்பது...



“அமுதசுரபி எங்குள்ளது என்கிற கேள்வியில் விழுந்த எனக்குள், வைக்கோல் போரில் விழுந்துவிட்ட ஒரு குண்டூசியின் நினைவும் சேர்ந்தே எழும்பியது. எப்படி அந்த குண்டூசியைக் கண்டறிய இயலாதோ, அப்படித்தான் இந்த அமுதசுரபி விஷயமும்.

 லாஜிக்கலாக கோவலன் - கண்ணகி பாத்திரங்கள் இருந்து, மாதவி அழகில் கோவலன் மயங்கி பிறன்மனை கிடந்து, அதன் காரணமாக மணிமேகலை பிறந்திருந்தாலும், இவர்கள் வாழ்ந்த காலகட்டம் என்பதே துல்லியமாகத் தெரிந்திராத நிலையில், எந்த அடிப்படையில் அமுதசுரபி இப்போதும் இருக்கும் என்று நம்பி அதைத் தேடுவது? ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையின்படி தென்மதுரையில் சிந்தாதேவி எனும் தேவதையால் ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரம் அது.

பின் அது மணிபல்லவத் தீவிலுள்ள கோமுகிப் பொய்கையை அடைந்து, அங்கே அது மணிமேகலை வசம் சேர்ந்தது. அதன்பின் அதனால் பல்லாயிரம் பேர் அன்றாடம் பசியாறினர். குறிப்பாக காயசண்டிகை என்பவளின் தீராப் பசியையும் அவளின் பஸ்மக நோயையும் அமுதசுரபி போக்கிற்று... இத்தனை அரிய ஒரு பொக்கிஷத்தை தன்வசப்படுத்த பலரும் எண்ணியிருப்பார்கள். அவர்களில் அன்றைய சோழ மன்னனும் ஒருவன்.

அமுதசுரபி என்வரையில் இப்படி ஒரு மன்னனிடம் சென்று நிற்கிறது. ஆனால் மணிமேகலை அமுதசுரபியை கோமுகிப் பொய்கையிலேயே போட்டுவிட்டாள் என்றும் ஒரு கருத்து வலம் வருகிறது.எது உண்மை?

இதைப் பற்றிய ஆய்வில் நான் இறங்கியபோது என்னை பேராசை பிடித்தவனாகத்தான் என்னருமை ஆய்வாளப் பெருமக்கள் பலர் கருதினார்கள். நான் ஒரு கற்பனைப் புதினத்தை நம்பி முட்டாள்தனமாய் நடந்து கொள்வதாகவும் கூறினார்கள். ஆனால் நான் அன்றைய காவிரிப்பூம்பட்டினமான இன்றைய பூம்புகார் எனும் இடத்தில், மணிபல்லவத் தீவு இருந்ததற்கான தடயம் ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்த்து வருவதற்காகச் சென்றேன். எனக்கு இம்மட்டில் கடலாடுபவர்களின் உதவி பெரிதும் தேவைப்பட்டது.’’

- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...அந்தக் குரலும் கட்டளையும் வர்ஷனை ஒரு உலுக்கு உலுக்கியதில் காரின் ஓட்டத்திலும் ஒரு தடுமாற்றம்.
‘‘வர்ஷன்! என்னாச்சு... வாட்ஸ் ராங் மேன்?’’ - என்று ப்ரியாவும் பதற்றப்பட, காரை அப்படியே ஓரம் கட்டினான் அவன்.‘ஏய்... ஏழரைக்கு பொறந்தவனே! இது மெயின் ரோடு. ஃபுட்பால் கிரவுண்டுன்னு நினைச்சியா?’ - என்கிற ஒரு கமென்ட்டுடன் பின்னால் வந்த ஒரு கார் அவர்களைக் கடந்து போயிற்று.
வர்ஷன் காதில் அது விழவேயில்லை.

‘‘ஏய்... என் சிஸ்டருக்கு ஏதாவது ஆச்சு, அப்புறம் உங்களை சும்மா விடமாட்டேன்’’ என்று கார் ஓரம் கட்டப்பட்ட நிலையில் படபடத்தவனை ப்ரியா அதிர்ச்சியோடு பார்த்தாள்.‘‘கத்தாதே வர்ஷன்! உன்னை விட்டுட்டு வேலைக்காரி முத்தழகுவை பிடிச்ேசாம். ஆனா அவ ஷாக்குக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கறதால எங்களுக்கு வேற வழி தெரியல. டெல்லியில இருந்து எங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலம், ஒரு வாரம். அதுல ஆறு நாள் ஓடிப் போயிடிச்சு. இருக்கறது ஒரே ஒரு நாள்... அதாவது 24 மணி நேரம்! இந்த 24 மணி நேரத்துல நாங்க இந்த அசைன்மென்ட்டை முடிக்கலைன்னா இது வேற கைக்கு போயிடும்...’’ - போனின் மறுமுனையில் இருந்து வந்த விளக்கம் வர்ஷனை குமையச் செய்தது.

‘‘இதோ பார்... உன்னோட பிரச்னையை என் பிரச்னையா ஆக்காதே! இது கொஞ்சம்கூட நல்லா இல்லை!’’‘‘வர்ஷன்... டென்ஷன் ஆகாதே! உன் பக்கத்துல ப்ரியா இருக்கறது எங்களுக்குத் தெரியும். இந்த நெருக்கடியை அவகிட்ட சொல்லு. அவளே உனக்கு உதவி செய்வா! இன்ஃபாக்ட், அவளாலதான் இதைச் செய்ய முடியும். வயசான காலத்துல அந்தப் பேராசிரியர் கணபதி சுப்ரமணியனை ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. அப்புறம், அந்த வள்ளுவர் சொன்னபடி காலப் பலகணியைக் கண்டுபிடிச்சு ெநருங்கறவங்கதான் சீக்கிரமா செத்துடுவாங்களே! ப்ரியா தன்னோட தாத்தாவை நிச்சயம் சாக விட மாட்டா. அதனாலதான் நாங்களும் இப்படி ஒரு முடிவுக்கு வந்தோம். உன் தங்கையையும் வளைச்சோம்.

இந்த நிமிஷம் வரை உன் தங்கைக்கு, நாங்க அவளை எங்க பிடியில வெச்சிருக்கறதே தெரியாது. ஜிம்முல நீ எக்சர்ஸைஸ் பண்ணும்போது சின்ன ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில இருக்கேன்னு சொல்லி அவளை கம்ப்யூட்டர் சென்டர்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்துட்டோம். இப்பகூட கே.ஆர். ஹாஸ்பிட்டலுக்கு வெளியிலதான் இருக்கோம். உன் தங்கை, உள்ள உனக்கு ட்ரீட்மென்ட் நடந்துக்கிட்டு இருக்கறதா நம்பி, ரிசப்ஷன்ல உக்காந்திருக்கா.

எங்க ஒவ்வொரு அடியும் அவ்வளவு கவனமா, கச்சிதமா இருக்கு. நீ அந்த தகரப்பெட்டியோட வந்து பணத்தை வாங்கிக்கிட்டு, உன் தங்கையோட பத்திரமா வீட்டுக்குப் போற வழியைப் பார். அதை விட்டா உனக்கு வேற சாய்ஸே இல்லை!’’ - போனில் வந்த விளக்கம் வர்ஷனை நெற்றியைத் தேய்த்துக் கொள்ளச் செய்தது.
‘‘வர்ஷன்! வாட் ஹேப்பண்ட்? யார் போன்ல... என்ன பிரச்னை?’’ - என்று மீண்டும் ப்ரியா கேட்க, போனில் எச்சரிக்கையின் தொடர்ச்சி...

‘‘வர்ஷன்! எந்த வகையிலயும் குறுக்குச்சால் ஓட்டாதே. புத்திசாலித்தனமா நடந்துக்கோ. எங்களுக்கு நாங்க நினைச்சது நடந்தாகணும். ஒரு காரியத்தை முடிக்க நாங்க எந்த எல்லைக்கும் போவோம். நீ ஒரு மணி நேரத்துல அந்த பெட்டியோட வரலைன்னா, உன் தங்கையை நாங்க ஒரு பேஷன்ட்டாக்கி ஆம்புலன்ஸ்ல வெச்சே மும்பை, கல்கத்தான்னு எங்கயாவது கூட்டிப் போய் விபசார புரோக்கர்கள்கிட்ட விட்டுவோம். அது ஒரு ஒன்வே டிராஃபிக்! அங்க போகலாம், நிச்சயமா திரும்பி வர முடியாது. உனக்கு டி.ஐ.ஜி.யே பழக்கமா இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது. பிரச்னையோட தீவிரத்தைப் புரிஞ்சிக்கோ. ப்ரியாகிட்ட பேசு. நிச்சயம் உனக்காக இல்லாட்டியும் உன் தங்கைக்காக அவ பெட்டியை எடுத்துத் தருவா.

பை த பை, உன்னை எங்க ஆட்கள் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஜேம்ஸ்பாண்ட் வேலை எதுவும் செய்யாம பெட்டியைக் கொடுத்துட்டு காசோட சந்தோஷமா வாழற வழியைப் பார்...’’ - என்று பேச்சும் ஒரு முடிவுக்கு வந்தது.
வர்ஷன் வியர்வையில் குளித்திருந்தான்.

ப்ரியா அவன் தோளைப் பற்றி உலுக்கத் தொடங்கினாள்.‘‘இப்ப சொல்லப் போறியா, இல்லையாடா... என்னடா பிரச்னை?’’ என்று உச்ச ஸ்தாயியில் வெடித்தாள்.
அவனிடம் சில வினாடிகள் ஒருவித ஸ்தம்பிப்பு தொடர்ந்தபடியே இருந்தது.

‘‘டேய்ய்...’’
‘‘ச... ச... சாரி ப்ரியா...!’’

‘‘எதுக்கு சாரி கேக்கறே... யார் போன்ல... ஏன் பேய் மாதிரி முழிக்கறே?’’‘‘ப்ரியா... ப்ரியா...’’‘‘தந்தி அடிக்காதே... பீ சியர்ஃபுல் மேன்...’’
‘‘முடியல... நான் இப்ப வசமா ஒரு குரூப்கிட்ட மாட்டிக்கிட்டிருக்கேன்!’’‘‘ஒரு குரூப்பா... யார் அவங்க?’’
‘‘சொல்றேன். இப்ப என் பிரச்னையை உன்னைத் தவிர யாராலயும் தீர்க்கவும் முடியாது...’’

‘‘முதல்ல பிரச்னையை சொல்!’’‘‘தயவுசெய்து நான் சொல்றத கேட்டுட்டு என்னை வெறுக்கத் தொடங்கிடாதே...’’
‘‘முதல்ல சொல்லு...’’- வர்ஷனும் தொடக்கம் முதல் கூறத் தொடங்கினான். மிகச் சரியாக பத்து நிமிடங்கள் ஆயிற்று இறுதி வரை சொல்லி முடிக்க!
ப்ரியாவிடம் இப்போது கற்சிலையானது போல் ஒரு மௌனம்.

‘‘ப்ரியா! என்னை தப்பா நினைக்காதே... நான் இந்தக் காலப் பலகணி விஷயத்தை முதல்ல ஒரு விஷயமாகவே நினைக்கல. அதலாலதான் அந்த குரூப் என்னை அப்ரோச் பண்ணப்ப நான் முதல்ல ஒத்துக்கிட்டேன். ஐம்பது லட்ச ரூபாய்ங்கறது ஒண்ணும் சின்ன தொகை இல்லை. ஒரு தகரப் பெட்டிக்கு 50 லட்சம்னு சொன்ன உடனே நான் சரின்னு சொல்ல அதான் காரணம். ஆனா அப்புறமா அது ஒரு அதிசயம்னு தெரிஞ்ச உடனே நான் விலகிட்டேன்...’’ என்று பூசி மெழுகினான்.
‘‘வர்ஷன்... உனக்குள்ளயும் ஒரு கல்ப்ரிட் இருக்கான்டா. நிஜமா இந்தக் காலப் பலகணியை விடவே அந்த கல்ப்ரிட்தான் என் வரைல அதிசயம். நீ என்ன சொன்னாலும் என்னால ஜீரணிக்கவே முடியல!’’

‘‘ப்ரியா... ஒரு வேளை நான் முதல்லயே மறுத்திருந்தாலும் அவங்க வேற வடிவத்துல முயற்சி செய்திருப்பாங்க. முத்தழகுவை அவங்க வளைச்சதை யோசிச்சுப் பார்!’’
‘‘குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டலைங்கற மாதிரி பேசாதே... முத்தழகுவுக்கு ஆக்சிடென்ட்டுங்கறைதயும்
என்னால ஜீரணிக்க முடியல...’’

‘‘சரி, நான் பேசலை. நீ இப்ப என்ன செய்யலாம்ங்கறே?’’
‘‘கொஞ்சம் இரு...’’ - ப்ரியா முதல் காரியமாக அனுஷாவுக்குத்தான் போன் செய்தாள்.
‘‘அனு...’’ என்றாள் வேகமாக...

‘‘அனு இல்ல. நாங்க டெல்லி பார்ட்டி. என்னடா இன்னும் உன்கிட்ட இருந்து போன் வரலையேன்னு நினைச்சோம்!’’
‘‘அனு போன் அப்ப உங்க கைலதான் இருக்கா..?’’
‘‘பின்ன... அவ கைல இது இருந்தாதான் அவ யார்கூட வேணா பேச முடியுமே..?’’
‘‘கிட்நாப்பிங்ல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்னு சொல்லுங்க...’’
‘‘உனக்கு இப்ப என்ன வேணும்?’’

‘‘அனுஷா கூட நான் பேசணும். அவளுக்கு எதுவும் ஆகிடக் கூடாது!’’
‘‘அது உன் கைலதான் இருக்கு. உள்ள யாரோ ஐ.சி.யுல இருக்க, வர்ஷன்தான் அதுங்கற மாதிரி சொல்லி நாங்க சமாளிச்சுக்கிட்டு இருக்கோம். இருந்தும் அவளுக்கு எங்க மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடிச்சு. அது முத்தி வெடிக்கறதுக்குள்ள நீ பெட்டியோட வந்துட்டா நல்லதுன்னு நினைக்கறோம்!’’
‘‘நான் வர்றேன். அதே சமயம் அவளுக்கு ஏதாவது ஆனா நீங்க யாரும் தப்பிக்க முடியாது.’’

‘‘வீர வசனத்தை விடு... காரியத்தைப் பாரு... உனக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு...’’
- அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ள, அனுஷா கடத்தப்பட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டவள் வர்ஷனை காரை எடுக்கச் சொன்னாள்.
‘‘இப்ப என்ன பண்ணப் போறோம் ப்ரியா?’’‘‘காரை வீட்டுக்கு விடு...’’‘‘அப்ப..?’’
‘‘பெட்டிய ஒப்படைக்க வேண்டியதுதான்...’’

‘‘நிஜமாதான் சொல்றியா?’’
‘‘அப்ப ஒப்படைக்காமலே சமாளிக்க முடியும்னு நீ நம்பறியா?’’
‘‘நாம நேரா ஹாஸ்பிட்டலுக்குப் போய் அனுஷாவை முதல்ல பார்ப்போம்...’’

‘‘முட்டாள் மாதிரி பேசாதே... நம்மை ஃபாலோ பண்றவங்க நாம எங்க போய்க்கிட்டிருக்கோம்னு கவனிச்சுக்கிட்டே இருந்து தகவல் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க...’’
‘‘போலீசுக்கு தகவல் தந்து அவங்கள போகச் சொன்னா?’’
‘‘அதுக்கு நேரமில்ல... அது பெரிய ரிஸ்க்கும் கூட!’’
‘‘அப்ப பெட்டிய கொடுத்துடறதுதான் ஒரே வழியா?’’

‘‘அதுக்கு முந்தி என் கேள்விக்கு நீ பதில் சொல். பெட்டியில இருக்கற அயிட்டங்கள் என்னென்னன்னு அவங்களுக்குத் தெரியுமா?’’‘‘நல்லா தெரியும்...’’‘‘எப்படி?’’‘‘அது தெரியாது...’’- ப்ரியா அதைக் கேட்டு நகம் கடித்தாள். கார் விரைந்தபடியே இருந்தது.‘‘என்ன யோசனை?’’‘‘ஒண்ணுமில்ல... வீட்ல இருந்து தாத்தாவை எப்படி வெளிய அனுப்பறதுன்னு யோசிக்கறேன்!’’‘‘முத்தழகு பாக்கத் துடிக்கறாள்னா ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிடப் போறார்!’’‘‘அப்படிப் போறவர் பீரோ சாவியை எடுத்துக்கிட்டு போயிட்டா என்ன பண்றது?’’‘‘அப்ப தாத்தாவுக்கு தெரியாம பீரோவுல இருந்து எடுத்து அந்த குரூப்கிட்ட கொடுத்துடப் போறோமா?’’

‘‘அனுஷா மாட்டிக்கிட்டிருக்கா... யோசிக்க அவங்களும் நமக்கு நேரம் கொடுக்கல. எவ்வளவு மர்மக் கதைகள் படிச்சிருப்பே... சினிமாவும் பாத்துருப்பே? யோசிடா...’’
‘‘புரியுது... நீ என் சிஸ்டருக்காக இவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்து செயல்படுவேன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல ப்ரியா. அதே சமயம் பர்சனலா சொல்றேன். பெட்டிய தூக்கித் தர்றதுல எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது...’’

‘‘வேகமா போ! நான் தாத்தாகிட்ட இருந்து பீரோ சாவியை எப்படி வாங்கறதுன்னு யோசிக்கறேன்...’’ப்ரியா மூளையைக் கசக்கி விட்டுக்கொள்ள, காரும் சென்னை நகர சந்தடிகளில் முண்டியடித்தது. வர்ஷன் ரியர் மிர்ரர் வழியாக பின்னால் வரும் வாகனங்களைப் பார்த்தபடியேதான் வந்தான். ஒரு பழைய சான்ட்ரோ கார் மட்டும் விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.கார் பங்களாவினுள் நுழையவும், பத்மாசினி பாய்ந்து வந்தாள்.‘‘முத்தழகுக்கு என்னம்மா?’’

‘‘பாழாப் போன எலெக்ட்ரிக் வயரால வந்த வினை. அந்த வீணாப் போன எலெக்ட்ரீஷியன் பண்ண வேலை...’’ - பத்மாசினி வெடித்தாள். கணபதி சுப்ரமணியனும் எதிரில் வந்து நின்றார். வரும்போதே அவர் கையில் அந்தப் பெட்டி!‘‘எல்லாம் இது வந்த நேரம்தான்டி. இவர்கிட்ட இதைத் தூக்கிப் போடச் சொல்லி நான் கெஞ்சிக்கிட்டு இருக்கேன். நீ வந்தபிறகு, உன்கிட்ட பேசிட்டுத்தான் முடிவுக்கு வருவேன்கறார் இவர்...’’‘‘தாத்தா... என்ன தாத்தா இதெல்லாம்?’’

‘‘என்னத்தம்மா சொல்ல... முத்தழகு நிலை ரொம்பவே சீரியஸ்னு இப்பகூட போன் வந்தது. உங்கம்மா என்னடான்னா இது வந்த நேரம்தான்னு என் உயிரை வாங்கறா. சரிதான்னு நானும் இதைத் தூக்கிக் கூவத்துல போட முடிவு செய்துட்டேன். நீ என்ன சொல்றே?’’ என்று கேட்டவரிடம், ‘‘கொடுங்க! நாங்க போய் போட்டுட்டு வர்றோம்’’ என்று கையை நீட்டினாள் ப்ரியா.

காலப் பலகணியை கண்டுபிடிச்சு ெநருங்கறவங்கதான் சீக்கிரமா செத்துடுவாங்களே! ப்ரியா தன்னோட தாத்தாவை நிச்சயம் சாக
விட மாட்டா.

‘‘தன் வீட்டு பாத்ரூம்ல ‘இங்கு சிறுநீர் கழிக்க வேண்டாம். மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்’னு ஏன் தலைவர் எழுதி வச்சிருக்கார்!’’
‘‘சின்ன வயசுப் பழக்கம். இன்னும் அவரால மறக்க முடியலையாம்!’’

‘‘தலைவருக்கு பேச்சு சாமர்த்தியம் அதிகம்னு எப்படிச் சொல்றே?’’
‘‘கூட்டத்துக்கு பத்து பேர் வந்திருந்தாலும், லட்சம் பேர் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணி பேசுவாரே!’’

‘‘டாக்டர், என்னை நம்பி மூணு குடும்பம் இருக்கு...’’
‘‘என் குடும்பத்தையும் சேர்த்து நாலு குடும்பம் இருக்குன்னு சொல்லத் தோணலையா
உங்களுக்கு?’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

(தொடரும்)

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்