குட்டிச்சுவர் சிந்தனைகள்!



கடந்த ஆறேழு மாதங்களாக  தமிழ்நாட்டில் சாமிகள்தான் ரொம்ப பிசி. ஏழேழு ஜென்மத்துக்கான பூஜைகளையும்  புனஸ்காரங்களையும் இந்த கேப்பில் பார்த்து விட்டனர். இப்படி கண்டபடி பிசியாக இருந்த சாமிகள், இப்ப கம்ப்ளீட் ரெஸ்ட்ல  இருக்காங்க. அப்படிப்பட்ட சில சாமிகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்தோம்...

ஆசீர்வாத  ஆஞ்சநேயர்: நானே நாலு நாள் ஃபாரீன் வெகேஷன் போலாம்னு இருக்கேன்.  உங்களுக்கு case ட்ரபிள்ன்னா, எனக்கு ஏன்யா gas டிரபிள் கொண்டு வர்றீங்க? ஒரு  நாள், ரெண்டு நாளுனாகூட ஓகே! ஏன்யா ஒரு ஜீவனுக்கு போஜனமா தினம் மூணு  வேளையுமா வடை மாலை போடுவாங்க. ரெண்டு மாசமா கேஸ் டிரபிள்ய்யா. லேஸ்  கம்பெனிக்காரன், ஒவ்வொரு பாக்கெட்டுலயும் காத்து அடிச்சு தர முடியுமான்னு  தேடி வந்துட்டான்யா. போடுறதுதான் போடுறீங்க... குலோப் ஜாமூன் மாலை, ரவா லட்டு மாலை, மைசூர் பாகு மாலை எல்லாம் போட மாட்டீங்களா?

பெல்லாரி பெயில்நாயகி: மொத நாளு மூவாயிரம் பேரு பால் காவடில புரண்டா, மறுநாளு  ஐயாயிரம் பேரு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டு உருள்றான். அடுத்த நாளு  ஆறாயிரம் பேரு அக்னிசட்டி எடுத்தா, அதுக்கு அடுத்த நாளு பத்தாயிரம் பேரு  பாதயாத்திரை போறான். என்னா என்டர்டெயின்மென்ட்! தினம் தினம் ஒலியும்  ஒளியும் ஓடுச்சு, இப்பதான் ஒரு வாரமா வயலும் வாழ்வும் ஓடிக்கிட்டு  இருக்கு.

தாலி காத்த காளியம்மன்: குடத்துல பாலபிஷேகம் பண்ணலாம்; அண்டாவுல பாலபிஷேகம் பண்ணலாம்; ஆனா, கடல்  கடலா பாலை ஊத்தி அபிஷேகம் பண்ணிட்டாங்க தம்பி. தினம் தினம் பாலுல  குளிச்சதுல டல்லா இருந்த நானே தூளா ஆயிட்டேன்னா பார்த்துக்குங்களேன். அரசமர பிள்ளையார்: எல்லாம் பெரிய கோயிலுங்களை  புடிச்சிட்டாங்க பிரதர். பஞ்சு மிட்டாய் வேணும், பரீட்சைல பாஸ் ஆகணும்னு  பெட்டி கேசுங்கதான் இங்க வருதே தவிர, பெத்த கேசுங்க ஒண்ணும் வரல. இந்த  நாட்டுல பேச்சிலருக்கே மரியாதை இல்ல பாஸ்!

நம்ம மோடி சர்க்கார் வந்தும் ஒரு வருஷம் ஓடிப்போச்சு. நாலு பேரு நல்லாட்சிங்கிறாங்க... நாப்பது பேரு ‘என்ன  ஆட்சி’ங்கிறாங்க. மிச்ச சொச்ச பேரெல்லாம் ‘ஆமா, என்னாதான் ஆச்சி?’ங்கிறாங்க. எது எக்கேடோ கெட்டா என்ன, பாட்டியோட பல் செட்டு புட்டா என்னன்னு நாம வேடிக்கை பார்த்தாலும், நாட்டுல நேத்து முளைச்ச காளான் கூட மோடி மேல விமர்சனம் வைக்குது. வேறென்ன... மணியடிச்சா சோறு கணக்கா மாசங்கண்டா டூர் போறாருனுதான்.

*சினிமான்னா மொத்தப் பாட்டுக்கோ... இல்ல, ஒத்த பாட்டுக்கோ ஃபாரீன் போறது சகஜமா போச்சு. ஆனா, எப்போ எந்த நாட்டுக்குப் போகலாம்னு ஒரு கைடு இருக்கா இங்க? அதான், எந்தப் பிரதிபலனும் பார்க்காம, ஒவ்வொரு நாட்டுக்கும் போயி போட்டோ எடுத்து லொகேஷன் கலெக்ட் பண்றாரு நம்ம பிரதமரு. அவரைப் பார்த்து ‘ஜாலியா ஊர் சுத்துறாரு’ன்னு சொல்லலாமாய்யா?

* டூவீலரையும் காரையும் சர்வீஸுக்கு விட்டா போதும்... மைலேஜ் பார்க்கிறேன்னு எடுத்துட்டுப் போறாங்க மெக்கானிக்குங்க! ஆனா,  தினம் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணிக்கிற நம்ம ஏர் இந்தியா ஏரோப்ளேன்களுக்கு மைலேஜ் செக் பண்ண யாருக்காவது தோணியிருக்கா? அதுக்காகத்தான் நம்ம பிரதமர், ஃப்ளைட் எடுத்துக்கிட்டு வெளிநாடு போயி ஒப்பந்தங்கள் போட்டு, டூ இன் ஒன் வேலை செய்யறாரு.

* நம்ம பிரதமர் ஒவ்வொரு தடவை வெளிநாடு போறப்பவும் அந்தந்த நாட்டுல வேலை செய்யற நம்மாளுங்களுக்கு உப்பு, ஊறுகா, அப்பளம் வரை எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயி கொடுத்துட்டு வர்றது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அதே மாதிரி திரும்பி வரப்பவும், இங்க இருக்கிற வெளிநாட்டுத் தூதரகத்துல வேலை செய்யற வெளிநாட்டுக்காரங்களுக்கு அங்கிருந்து துணிமணிகள எடுத்துட்டு வர்ற கொரியர் ஆளா வேலை செய்யற அரிய வகை மனிதர்யா அவரு! எங்க நாட்டுல இருக்கு, உங்க நாட்டுல இருக்கான்னு நாம பெருமை பேசறளவு பயன்படுற டேபிள் மேட்டுய்யா அவரு. அவரைப் போயி...

ஆல்தோட்ட பூபதி