கல்யாண உத்தேசம்?



திருமணச் சிறப்பிதழில் ‘மிரட்டும் கல்யாணச் சந்தை’யைப் பற்றி கூறியிருந்தவை  நூற்றுக்கு நூறு உண்மை. அப்பட்டமாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.  பாராட்டுக்கள்!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அழகு க்ரீம்களால்  ஏற்படும் ஆபத்துக்களை பட்டியலிட்டு சிந்திக்கத் தூண்டியதற்கு நன்றி!  இனியாவது நம் பெண்கள் விலை கொடுத்து வியாதியை வாங்காதிருந்தால் சரி!
- கோ.சு.சுரேஷ், கோவை.

வாட்ஸ் அப்பில் எது வந்தாலும் படிக்காமல் கூட பகிரும் இளைஞர்களுக்கு ‘அது சொந்த செலவில் வைக்கும் சூனியம்’ என அடித்துச் சொல்லி ஆபத்தை உணர்த்திவிட்டது உங்கள் கட்டுரை!
- மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

திருமணச் சிறப்பிதழில் வெளியாகியிருந்த சக்சஸ் ஸ்டோரி, விஜய்-விமல் போலவே  சாதிக்கத் துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும்  அளித்திருக்கும்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

எங்கள் உள்ளம் கவரும் ‘களவாணி’ ஓவியா, பேட்டியில் நல்ல தோழியாகவும் ஸ்டில்ஸில் ‘உரித்த கோழி’யாகவும் இருந்தார். ‘த்ரிஷாதான் ரோல் மாடல்’ என்றால் கல்யாணம் பண்ணும் உத்தேசம்  ஓவியாவுக்கும் இல்லையோ!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

பால்மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை பணியில் அமர்த்துவோரை அடியோடு வேரறுக்க வேண்டும். அதற்கு அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். செய்வார்களா?
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

‘கமலை என் கடவுளாக பூஜிக்கிறேன்’ என்பதை எம்.எஸ்.பாஸ்கர் குழப்பமே இன்றி விளக்கியுள்ளார். இதை இவ்வளவு தெளிவாக(!) கமலே சொல்ல முடியுமா என்பது
சந்தேகமே!
- என்.அத்விக், சென்னை.

தனுஷ் ஜோடியாக ‘விஐபி2’ படத்தில் நடிக்கும் சமந்தா, ‘இதுதான் என் சிறந்த படம்’ என்று சத்தியம் செய்திருப்பது ரொம்பவே ஓவர். ஏத்தி விட்ட ஏணிகளை மறந்திடாதீங்க அம்மணி!
- எஸ்.சந்திரன், கோயமுத்தூர்.

‘36 வயதினிலே’ படத்திற்கு நீங்கள் எழுதியது விமர்சனம் அல்ல; ஜோதிகாவுக்கு நீர் சூட்டிய மணி மகுடம்!
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்

‘ருத்ரமாதேவி’ ஷூட்டிங்கில் அனுஷ்கா உயரத்துக்கு ஈடாக நித்யா மேனனை 7  இன்ச் ஹை ஹீல்ஸ் போடச் சொல்லி காலைக்  காயப்
படுத்தியிருப்பது எங்கள் மனதைக் காயப்படுத்திடுச்சுங்க!
- கே.வி.சூரஜ்குமார், புதுச்சேரி.

‘அரவிந்த  அன்னை’யின் அற்புதங்களுக்கு வாசகர்களின் அனுபவங்கள் சான்றளித்தன. ஒவ்வொரு  வாரமும் ஒவ்வொரு மலர் பற்றிய குறிப்புகள் வருவது மனதை மலராய்  வருடுகிறது.
- பெ.தர்மன், திருவண்ணாமலை.