பப் கலாசாரத்தில்ஒரு நல்ல நட்பு!



இயக்குநர் ரவிச்சந்திரன் ரீ என்ட்ரி

``இந்த உலகத்துல பெத்த அம்மா இல்லாதவன் இருக்கலாம். அப்பா இல்லாதவன், அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சின்னு உறவுகள், சொந்தங்கள் யாரும் இல்லாதவனும் இருக்கலாம். ஏன், அனாதையாகக்கூட இருக்கலாம். ஆனா நண்பன் இல்லாதவன்னு யாரும் இல்லை. ஒரு பிச்சைக்காரனுக்குக்கூட இன்னொரு பிச்சைக்காரன் ஃப்ரெண்டா இருப்பான்.

வாழ்க்கையை லைக் அண்ட் ஷேர் பண்றதுக்கு நட்பை விட வேற என்ன கேட்வே?’’ - மேக் மானிட்டரில் போய்க்கொண்டிருக்கும் எடிட்டிங்கில் கண் வைத்தபடி பேச ஆரம்பிக்கிறார் ரவிச்சந்திரன். ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’ படங்களின் இயக்குநர்... நீண்ட கேப் விட்டு `நட்பதிகாரம் 79’ படம் இவருக்கு ரீ என்ட்ரி!

‘‘ `கண்ணெதிரே தோன்றினாள்’ல கூட நட்பையும் அதில் வரும் உறவுச் சிக்கலையும் சொல்லியிருப்பேன். அப்படி எந்தச் சிக்கலும் இல்லாத ஒரு நேர்மையான நட்பை இப்போ சொல்ல வர்றேன்! சென்னை மாதிரி நகரங்கள் இப்போ பப் கலாசாரத்துல இருக்கு. இந்தச் சூழல்ல நேர்மையான நட்பு சாத்தியமாங்கறதை இளமையா, புதுமையா சொல்லியிருக்கேன். 2 ஆண், 2 பெண் இடையே ஆன நட்பு இது. ராஜ்பரத், அம்ஜத், ரேஷ்மி, தேஜஸ்வி மடிவாடா நடிக்கிறாங்க.

எல்லாருமே ஒவ்வொரு படம் பண்ணியிருக்காங்க. ஸோ, அனுபவசாலிகள்தான். இதுல தேஜஸ்வி, ராம்கோபால்வர்மா படமே பண்ணினவங்க. தவிர எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி, விக்னேஷ் கார்த்திக் நடிக்கிறாங்க. இதுக்கு நாங்க முதல்ல யோசிச்ச தலைப்பு வேற. திருக்குறள்ல நட்பு அதிகாரத்துல உள்ள குறள்கள் என் கான்செப்ட்டுக்கு பொருத்தமா இருந்ததால இந்த டைட்டிலுக்கு மாறிட்டோம்.

    `உற்சாகம்’ படத்துல நான் ஒளிப்பதிவாளரா அறிமுகப்படுத்தின ஆர்.பி.குருதேவ், அதுக்கப்புறம் `ஆதிபகவன்’, `காஞ்சனா 2’, சந்தானம் ஹீரோவா நடிக்கற படம்னு கேமராவில் பிஸியாகிட்டார். இதுல குருதேவ் ஒளிப்பதிவு பிரமாதமா இருக்கும். `மஜ்னு’ல ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டு வந்தேன். அதே மாதிரி இப்போ தீபக் நிலம்பூர்னு ஒரு புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துறேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். படத்துல 5 பாடல்கள். கபிலனும் நானும் எழுதியிருக்கோம். ஆர்ட் டைரக்டர் சாபு ஜோசப். ஒரு பாட்டுக்கு நடனம் அமைச்சுக் கொடுத்ததோடு பர்ஃபார்மன்ஸும் பண்ணியிருக்கார் ராஜு சுந்தரம்!’’
``இளைஞர்கள்தான் டார்கெட்டா?’’

‘‘ம்ம்ம். ஆனா, ஃபேமிலி ஆடியன்ஸையும் மனசுல வச்சு தான் பண்ணியிருக்கேன். படத்துல ஒரு சீன், ஃப்ரெண்ட்ஸுங்க பேசிட்டு இருக்கப்ப, ஒரு மகிழ்ச்சியான தருணம். பையன் ஒருத்தன் பொண்ணோட இடுப்பைப் பிடிச்சுத் தூக்கிடுறான். `என்னதான் ஃப்ரெண்ட்னாலும் இடுப்பைப் பிடிச்சு எப்படி தூக்கலாம்? அது தப்பு’ன்னு என் அசிஸ்டென்ட்ஸ் சொன்னாங்க. ‘நல்ல நட்புல அது இடுப்புன்னுகூட தோணாது’ன்னு சொன்னேன். மகாபாரதத்துல துரியோதனன் தன் மனைவிகிட்டயும் கர்ணன்கிட்டயும் `எடுக்கவோ கோர்க்கவோ’ன்னு கேட்ட மாதிரி நட்பு இது. நான் எடுத்துச் சொன்னதும் அசிஸ்டென்ட்ஸ் ஆமோதிச்சாங்க. ஆடியன்ஸும்
ஏத்துக்குவாங்க!’’

``அப்படியொரு ஆண் - பெண் நட்பு சாத்தியமா?’’``நிச்சயம் சாத்தியப்படும். ஆனா, ஆண் தப்பா இருந்தா, பெண் நட்பா இருக்க முடியாது. ஒரு பொண்ணோட கண்ணைப் பார்த்துப் பேசாத ஆணும், சூழ்நிலையைப் பார்த்துப் பேசாத பெண்ணும் நட்பா இருக்கறதுக்கான வாய்ப்பு இல்லை. நட்போட ஆயுசு புரிதல்லதான் இருக்கு!’’ `` ‘உற்சாகம்’ படத்துக்கு அப்புறம் ஆளைக் காணோமே... என்ன பண்ணிட்டிருந்தீங்க?’’

``மயிலாடுதுறையில இருந்து சென்னைக்கு பஸ் ஏறுறப்பவே, இனிமே சினிமாதான்னு கிளம்பி வந்துட்டேன்.  என்னோட இதயம்ங்கற பேட்டரி ஃபுல்லா சினிமாவைத்தான் சார்ஜ் ஏத்தி வச்சிருக்கேன். சில பர்சனல் விஷயங்களுக்காக படம் பண்ண முடியாமப் போச்சு. விஜய் நடிச்ச `பிரியமானவளே’ நான் பண்ணியிருக்க வேண்டிய படம். சில காரணங்களால பண்ண முடியலை.

இப்போ திரும்பிப் பார்க்குறதுக்குள்ள நாலு வருஷம் ஓடிடுச்சு. இந்த இடைவெளியிலயும் சினிமாவில் எல்லாரோடவும் டச்லதான் இருக்கேன். கார்த்திக் சாரோட `சந்தித்த வேளை’யில் தொடங்கின நட்பு இன்னமும் எனர்ஜியா இருக்கு. கார்த்திக் இன்னமும் குழந்தையா இருக்கார். எனக்கு ரொம்ப பிடிச்ச ஆர்ட்டிஸ்ட். அவரும் ஹாரிஸ் ஜெயராஜும் அடிக்கடி பேசுவாங்க.

இப்போ சினிமாவே மாறிப் போச்சு. காமெடி, பேய்ப் பட டிரெண்ட் வந்திடுச்சுனு சொல்றாங்க. அதை நான் ஏத்துக்க மாட்டேன். இங்கே ரெண்டு சினிமாதான் இருக்கு. ஒண்ணு, நல்ல படம். இன்னொண்ணு, சுமாரான படம். டிரெண்ட்னு எதுவும் கிடையாது. நல்ல படங்கள் கொடுத்தா ஜனங்க கொண்டாடுவாங்க. எப்பவும் அவங்க நல்ல படங்களை ஜெயிக்க வச்சிருக்காங்க. இந்த முறை அவங்களை மட்டுமே நம்பி இறங்கியிருக்கேன்!’’

- மை.பாரதிராஜா