தண்ணீர்



மகள் அனிதாவின் திருமணத்துக்குப் பிறகு முதல்முறையாக அவளைப் பார்க்க வருகிறார்கள் ராகவனும் லெட்சுமியும். மாப்பிள்ளை வருண் வசதியான வீட்டுப் பிள்ளை. என்றாலும் அலட்டல் இல்லை. ரொம்ப நல்ல மாதிரி.‘‘மடிவாலா... மடிவாலா...’’ - நடத்துநரின் குரல் கேட்டதும் அவர்கள் இறங்க ஆயத்தமானார்கள்.குடிப்பதற்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பாதி மீதமிருந்தது. ராகவன் அதை எடுத்துக்கொண்டார்.

‘‘ப்ச்... இதைக்கூட விடாம எடுத்திட்டு வர்றோமேன்னு மாப்பிள்ளை மட்டமா நினைக்கப் போறார். பாட்டிலை அப்படியே விட்ருங்க!’’ - என்றாள் லெட்சுமி.
அதை சீட்டில் வைத்துவிட்டு வந்தார் ராகவன். இறங்கியதும் எங்கிருந்தோ வந்து சூட்கேஸை வாங்கிக் கொண்டு வரவேற்றார் மாப்பிள்ளை. ‘‘வாங்க மாமா... வாங்க அத்தை...’’ - அவர் வார்த்தைகளில் நிஜ அக்கறை.

மூவரும் காருக்கு நடந்தபோது இவர்களுக்கு முன்னால் நடந்த ஒரு இளைஞன் பாதித்தண்ணீருடன் இருந்த பாட்டிலை குப்பைத் தொட்டியில் வீசினான்.
‘‘இங்க பாருங்க மாமா... குடிக்கத் தண்ணி கிடைக்காம எத்தனையோ பேர் கஷ்டப்படுறாங்க... சென்னையில் இடிந்த கட்டிடத்தில் சிக்கின ஒருத்தன் தாகத்துக்குத் தன்னோட சிறுநீரையே குடிச்சானாம்... இவன் அதுல மாட்டியிருக்கணும்!’’ என்றார் மாப்பிள்ளை வருண்.
ராகவன் மௌனமாய்ச் சிரித்தபடியே லெட்சுமியைப் பார்த்தார்.

பட்டுக்கோட்டை ராஜா