பழக்கம்



‘‘முடியல ஷர்மி. மாமியாருக்கு டீ, மாமனாருக்கு சர்க்கரை இல்லாத காபி, அவருக்கு பால், அவரோட தங்கச்சிக்கு ஹார்லிக்ஸ், அவரோட தம்பிக்கு காம்ப்ளான்... இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி கேட்கிறாங்க.

காலையிலேயே பைத்தியம் பிடிச்சிடுது. தனிக்குடித்தனம் பத்தி பேசவும் பயமா இருக்கு!’’ - தோழி வீட்டுக்கு வந்து புலம்பினாள் மாலதி.ஷர்மிளா ஒன்றும் சொல்லவில்லை. ‘‘மாலு... வியர்க்குதுல்ல? எழுந்து அந்த ஃபேன் ஸ்விட்சைப் போடறியா?’’ என்றாள் அலுப்பாக!மாலதி எழுந்தாள். வரிசையாக அங்கே ஏழு ஸ்விட்சுகள்.

‘‘எதுடி ஃபேன் ஸ்விட்ச்? முன்ன வரும்போது F.L.Tனு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தியே... இப்ப காணோம்!’’‘‘தேஞ்சி போச்சு... மறுபடியும் ஒட்டலை. வந்த புதுசுல எந்த ஸ்விட்ச் எதுக்குன்னு குழப்பமா இருந்துச்சு. இப்போ ஸ்டிக்கர் தேவையில்லை!’’ என்றவள், ‘‘பழகிட்டா எல்லாமே ஈஸிடி.

 பாலை மட்டும் காய்ச்சினா போதும். காபி தூள், ஹார்லிக்ஸ், காம்ப்ளான் எல்லாம் தனித்தனி டம்ளர்ல கலக்கறதுக்குள்ள டீ டிகாக்ஷன் கொதிச்சிடும். எனக்கு சிம்பிளா தெரியுது. அவருக்கு வெளியூர்ல ரவுண்டடிக்கிற வேலை. தனிமைச் சிறையில் மாட்டின மாதிரி இருக்கு என் தனிக்குடித்தனம். இப்படி குடும்பமா கூடி இருக்கிறது பலருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம். அதுக்கு சந்தோஷப்படுடி!’’ என்று கண் கலங்கினாள் ஷர்மிளா.

 நா.கோகிலன்