ரஜினி சாயல் எல்லாருக்கும் இருக்கு!



உதடு பிரியாத புன்னகை, சிநேகம் ததும்பும் கண்கள். ஒரு போன் செய்தால் ‘‘அண்ணா, சௌக்கியமா?’’ என்கிற அளவுக்கு எளிமை. தமிழ்த் திரையுலகமே அவரைக் கொஞ்சுகிறது. இளைய தலைமுறையில் நம்பர் ஒன்... ஹாட் ஃபேவரிட்... ஃப்ரன்ட் ரன்னர்... எல்லாமே சிவகார்த்திகேயன்தான். இப்போது அவரின் ‘ரஜினி முருகன்’ ரெடி! சிவாவின் கால்ஷீட் கிடைத்தாலே படம் வெற்றியடைந்த மாதிரி... இதுதான் உண்மை. இனி ஓவர் டூ சிவா!

‘‘எங்களுக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ செய்யும்போது ஒரு பிரச்னையும் இல்லை. சந்தோஷமா ஒரு கதையை எடுத்துக்கிட்டு செய்தோம். பார்த்தால் அதிரிபுதிரி வெற்றி. பயம் வந்திடுச்சு. அடுத்து அதே பொன்ராம், பாலசுப்ரமணியம், இமான்னு போகும்போது சின்னதா பதற்றம். பெரிசா உலகத்தையே நெம்புகோலாகப் புரட்டிப் போடுற கதையை தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியா இருந்தோம். இப்ப கொஞ்சம் பெரிய குடும்பமா சேர்ந்திருக்கோம். இது எங்கேயும் நடந்திருக்கலாம். உங்க ஊரில் நடந்திருக்கலாம். உங்களுக்கே நடந்திருக்கலாம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்’தை விட பெரிசா பண்ணிடலாம்னு நினைச்சு செய்யலை. ஆனால், வந்திருக்கிறதைப் பார்க்கும்போது அப்படித் தோணுது.

எங்க தாத்தா அய்யங்காளையாக வருகிறார் ராஜ்கிரண். நானும் சூரியும் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ‘சிவா, காமெடி இப்படி வரணும்... சூரி, காமெடி இப்படி வரணும்’னு பேசிக்கிட்டு இருந்தோம். செட்டிற்கு போனதும் எல்லாம் மாறிடுச்சு. அங்கே பேசினது எல்லாமே படு இயல்பான காமெடியா அமைஞ்சது. ஒண்ணு புரிஞ்சுதுங்க... என்னதான் ரூமுக்குள்ள டிஸ்கஷன் போட்டு வகைதொகையில்லாம சிரிச்சி சிரிச்சி ஸ்கிரிப்ட் பண்ணினாலும், ஷூட்டிங்கிற்குப் போய் நடிச்சு, மக்கள் சிரிச்சாத்தான் காமெடி! இல்லாட்டி இல்லை.

‘ஊதா கலரு ரிப்பன்’ கொடுத்த எஃபெக்ட் கொஞ்சமும் குறைஞ்சுடாம இதில் இமான் உழைச்சுக் கொடுத்திருக்கார்.
பொன்ராம் அருமையான டைரக்டர். எது சரின்னு அவருக்கு சரியாத் தெரியும். சிரிச்சுக்கிட்டு, தட்டிக் கொடுத்து அதைக் கொண்டு வந்துடுவார். நல்லா வந்திருக்கு. அது கொடுக்கிற நம்பிக்கையிலயே அதைப் பத்தி பேசவும் முடியுது!’’

‘‘ ‘ரஜினி முருகன்’னு தலைப்பு... பிரமாண்டமாக இருக்கே?’’‘‘எனக்கே கொஞ்சம் அல்லுதான். என்னங்க இவ்வளவு சீக்கிரத்துல இந்தத் தலைப்பு அவசியமானு டைரக்டர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் காரணம், சீன் எல்லாம் வச்சிருந்ததை சொன்னார். ரஜினி மாதிரி மிமிக்ரி செய்து, நடந்து காட்டி, அவர் மாதிரி அலப்பறை பண்ணிக்கிட்டு திரிஞ்சவன் நான்.

 யாருமே அவர் சாயல் இல்லாம இப்ப நடிச்சிட முடியாதுன்னு தோணுது. சும்மா இடுப்பு மேலே கையை வச்சுக்கிட்டு கோபமா பார்த்தாலே ‘பார்ரா... ரஜினி மாதிரி’னு சொல்லிடுவாங்க. அப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கார் சூப்பர்ஸ்டார். இதில் கழுத்தில் RMனு டாலர் போட்டுக்கிட்டு திரிவேன். 2002ல் இருந்து அவர் வாய்ஸ், அவர் ஸ்டைலை கரைச்சுச் குடிச்சு டி.வியில் இருந்திருக்கேன். இப்ப நாமே அவர் பெயரை வச்சுக்கிட்டு படம் பண்றது டுப்பினைதான்!’’‘‘ராஜ்கிரண், சமுத்திரக்கனின்னு ஆளை முழுங்குற கேரக்டர் ஸ்டார்களிடம் மல்லுக்கு நிற்கிறீங்களே?’’

‘‘ராஜ்கிரண் பல்கலைக்கழகம். பிரமாதமா மேலே போய், அதே வேகத்தில் சறுக்கி, அப்படியே இப்ப எழுந்து நிற்கிறது வரைக்கும் அவருடைய வார்த்தைகளில் கேட்கணுமே. அப்படியொரு கஷ்ட நஷ்டமெல்லாம் வந்திருந்தால் நாமெல்லாம் ஊரைவிட்டே ஓடியிருப்போம். நின்னு ஜெயிக்கிறது வீரம் இல்லையா... அதுதான் ராஜ்கிரண் சார்.

சமுத்திரக்கனி அண்ணா அப்படியே பாஸிட்டிவ் எனர்ஜி. ‘எப்படியண்ணே உங்களை முறைக்க முடியும்’னு சொன்னா ஃப்ரேமிற்கு வெளியே நின்னு அவரே முறைச்சுக் காட்டி மல்லுக்கு நிற்க கூப்பிடுவார். இப்படியெல்லாம் அவங்க செய்யவே வேண்டாம். ஆனால், கூட இருக்கிறவன் நடிப்பும் நல்லா இருக்கணும்ங்கிற அக்கறை கொண்டவர்கள்தான் ராஜ்கிரண் சாரும், கனி அண்ணனும்!’’

‘‘புதுசு புதுசா பொண்ணுங்க ஜோடியா அமையுது...’’‘‘கண்ணு வைக்கிறீங்களே... . கீர்த்தி சுரேஷ்... மேனகா அம்மா பொண்ணு. சுட்டி. நடிப்பு நல்லாவே வருது. தமிழ் தெரிஞ்ச பொண்ணு வேறயா... பிரிச்சு பின்னுது. நானும் சூரியும் தமிழ்ல கலாட்டா பண்ணுவோம்னு புறப்பட்டா, பொண்ணு பேசுன தமிழில் அல்லுசில்லாயிட்டோம். அத்தனை தெளிவு. எள்ளுண்ணா எண்ணெயா நிற்குது. எனக்கும் சூரிக்கும் செம டஃப் கொடுக்குது!’’‘‘உங்களுக்கு எதிரிகளே இல்லை போலிருக்கே?’’

‘‘நானே அப்படி யாரையும் நினைக்கலையே. ஒவ்வொரு படத்திலும் மக்கள் எனக்கு ஏற்றம் கொடுத்துட்டு இருக்கும்போது அவங்களை வணங்கிட்டு அடுத்த படத்துக்குப் போயிடுவேன். ஒவ்வொரு சமயமும் ஒரு செய்தி என்னைச் சுத்தும். ‘விஜய்சேதுபதிக்கும் உங்களுக்கும் போட்டியாம்ல’னு கேப்பாங்க. ‘தனுஷ் உங்க மேலே கோபமா இருக்காராமே’னு விசாரிப்பாங்க. சம்பந்தப்பட்டவங்க எல்லாரும் நேரில் பார்த்தா இதையே தலைப்பாக்கி, சிரிப்பு சிரிப்பா பேசிக்குவோம். நல்லவேளை, எனக்கு அப்படியெல்லாம் மனசை ஆண்டவன் தரலை!’’‘‘இளைய தலைமுறையில் பிடிச்ச நடிகர் யார்?’’

‘‘நம்ம ஆல்டைம் ஃபேவரிட் தனுஷ்.  அவரை மாதிரி ஆக, நடிக்க முயற்சியே பண்ண முடியாதுனு தோணுது. எப்படியெல்லாமோ  நடிக்கிறார். அப்புறம் அந்த துல்கர் சல்மான்... நமக்கே லவ் பண்ணணும்  போலருக்கு. அந்தத் துள்ளல், துறுதுறு நேச்சர், அந்தச் சிரிப்பு எல்லாம்  அள்ளிக்கிட்டுப் போகுது!’’
‘‘இளம் தலைமுறையில் முதலிடம் வகிக்கிறதை எப்படி எடுத்துக்கிறீங்க?’’

‘‘நீங்க  சொல்றதைக் கேட்டுக்கறேன். அதுக்கு ஆமோதிக்கிறதா அர்த்தம் கெடையாது. ‘மனம்  கொத்திப் பறவை’, ‘3’, ‘மெரீனா’ படங்களின்போது பெரிய இடமெல்லாம் கிடையாது.  ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ பளிச்னு தெரிஞ்சிருச்சு. இப்ப பல கோடிகளைப்  போட்டு படம் எடுக்குறாங்க. இப்பத்தான் வியாபாரம், கோடிகள்னு பயம் வருது.  இதில் ரொம்ப மெனக்கெட்டு தகுதிக்கு மீறி கலைப் படைப்புகளில் சீரியஸா  இறங்கிடக் கூடாதுனு இருக்கேன். ஒரு சமயத்தில் ஒரு படம்தான்.  தயாரிப்பாளருக்கு நிம்மதி. ஒரே நேரத்தில் நாலு படத்தில் நடிச்சிட்டு இருந்தால் காசு பார்க்கலாம்.

 நிம்மதி பார்க்க முடியுமா? ‘அடடா,  இவ்வளவு சீக்கிரம் முடிச்சுக் கொடுத்துட்டீங்க’னு சொன்ன திருப்பதி பிரதர்ஸ்,  லிங்குசாமி சார் முகத்தில் அந்த நிம்மதியைப் பார்த்தேனே! அடுத்தடுத்து  போறது நிச்சயம்னு தெரியுது. ‘மான் கராத்தே’யில் டான்ஸ் வருதேன்னு சொன்னாங்க.  சில காரசாரமான ஃபைட் கதைகள் வருது. குழந்தைகள் நமக்குப் பெரிய பலமாச்சே... 

அதனால் அதை ஒதுக்கிடுறேன். இப்பக்கூட ஒரு கூல் ட்ரிங்க்ஸ் கம்பெனியின் விளம்பரப்படத்துக்குக் கூப்பிட்டாங்க. பெரிய பணம். நானே அதைக் குடிக்கறதில்ல. குழந்தைகளுக்கு ஆகவே ஆகாது. கையெடுத்துக் கும்பிட்டு வேண்டாம்னுட்டேன். இத்தனை நாளைக்கு அவசரகதியில் பண்ணினா 16 படம்  பண்ணியிருக்கலாம். எட்டே எட்டுதான் இப்ப நம்ம கணக்கு!’’

- நா.கதிர்வேலன்