மனித சிறுநீரில் விவசாயம்!



கலக்குது புது கான்செப்ட்

‘‘நான் 50 லிட்டர் கேனில் என்னுடைய சிறுநீரைச் சேகரித்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தேன். மற்ற செடிகளை விடவும் அவை ஒன்றரை மடங்கு பெரியதாக வளர்ந்திருந்தன’’ - நாக்பூாில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இப்படியொரு தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உதிர்க்க, நல்லதாய்ப் போய்விட்டது நெட்டிசன்களுக்கு! கிண்டல் கேலியில் மனிதரைக் காய்ச்சி எடுத்துவிட்டார்கள்.

‘‘இது கிண்டல் இல்ல சார்... நிஜம்! மனித சிறுநீர் அற்புதமான உரம்’’ என்கிறார் திருச்சி யைச் சேர்ந்த `ஸ்கோப்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுப்புராமன்.  மனித சிறுநீரைப் பயன்படுத்தி வெற்றி கரமாக நெல், வாழை மற்றும் பழ வகைகளை விளைவித்து சாதித்த மனிதர் இவர். `சிறுநீர் வங்கி’ என்கிற திட்டத்தை எட்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கி, இப்போதும் விவசாயத்திற்கென சிறுநீர் சேகரித்து வருகிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் குளித்தலை பக்கத்துல இனங்கூர்புதுப்பட்டி கிராமம். பி.எஸ்சி., பி.எட் முடிச்சதும் சமூக வேலைகள்ல ஈடுபட ஆரம்பிச்சிட்டேன். அதுல முக்கியமா சுகாதாரம்தான் என் ஏரியாவா இருந்துச்சு. இப்ப ‘தூய்மை இந்தியா’ திட்டத்துல சொல்ற விஷயங்களை அப்பவே செய்தோம். ‘கிராம மக்கள் திறந்தவெளியை கழிப்பறையா பயன்படுத்தக் கூடாது... சுகாதாரமான கழிப்பறையை பயன்படுத்தணும்’னு சொல்லி கழிப்பறை சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலையைச் செஞ்சேன்.

அதுக்காக கழிப்பிடமும் கட்டிக் கொடுத்தோம். ஆனா மக்கள், ‘தண்ணியில்லாத ஊர்ல எப்படி இந்தக் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியும்’னு கேட்டாங்க. இதனால, சுற்றுச்சூழலைப் பாதிக்காத `இகோசான்’ கழிப்பறையை உருவாக்குனோம். இது மனிதக்கழிவுகள், சிறுநீர்னு ரெண்டையும் தனித்தனியா பிரிச்சு மறுசுழற்சி செய்யும். அதாவது, இகோ ஃப்ரண்ட்லி கம்போஸ்ட் கழிப்பறை. இந்நேரத்துலதான் சில புத்தகங்கள் வழியா சிறுநீர் பயன்பாடு பத்தி எனக்கு தெரிய வந்துச்சு. பல உலக நாடுகள்ல சிறுநீரை உரமா பயன்படுத்துறதைக் கேள்விப்பட்டு நேர்ல போய்ப் பார்த்துட்டும் வந்தேன்.

அங்குள்ளவங்களும் இங்க வந்தாங்க. அப்புறம், முசிறி பேரூராட்சியில 14 கழிப்பறைகள் கட்டினோம். இதுல இருந்து தினமும் 400 லிட்டர் சிறுநீர் கிடைச்சது. இதை வச்சு விவசாயம் எப்படி பண்ணலாம்னு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அணுகினேன். அவங்க வயல்ல முயற்சி பண்ணினாங்க. அப்புறம், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சிறுநீரை உரமா பயன்படுத்தி வாழை விளைவிச்சாங்க. எல்லாமே சிறப்பா நடந்துச்சு.

மனித சிறுநீரை நாமதான் அசிங்கமா பாக்குறோம். அதுல பொட்டாசியம், நைட்ரஜன், பாஸ்பரஸ்னு எல்லா தனிமங்களும் இருக்கு. அதை அப்படியே உரமா பயன்படுத்த முடியாது. ஒரு லிட்டர் சிறுநீருக்கு பத்து லிட்டர் தண்ணீர் சேர்க்கணும். ஏன்னா, சிறுநீர் அவ்வளவு வீரியம் கொண்டது. இப்படி கலந்து செடிகளுக்குப் போடும்போது எந்தப் பூச்சியும் தாக்காது. நோய்களும் அண்டாது. விளைச்சலும் அமோகமா இருக்கும்.

ஆனா, சிலருக்கு சிறுநீர்ல விளைஞ்சதுன்னு அருவருப்பு ஏற்படலாம். இதுக்காகவே, நான் இதுல விளைஞ்ச வாழைப் பழங்களை டெஸ்ட்டுக்காக லேபுக்கு எடுத்துட்டுப் போனேன். அப்போ, அங்க வந்த லேபரட்டரிக்காரரோட நண்பர்கள் அதை எடுத்து சாப்பிட்டுட்டு ‘ரொம்ப டேஸ்ட்டா இருக்கே’ன்னாங்க. சிறுநீர்ல விளைஞ்சதுங்கற வித்தியாசம் எதையும் லேப்லகூட கண்டுபிடிக்க முடியலை. சேத்துல முளைச்ச செந்தாமரை எப்படியோ? அப்படித்தான் இதுவும்.

சரி, தினமும் சேகரிக்கிறோமே... சிறுநீர் நிறைய சேர்ந்துச்சுன்னா என்ன பண்றதுன்னு நினைச்சப்ப, ‘சிறுநீர்ல இருந்து பவுடர் தயாாிச்சு உரமாக்க
லாம்’னு டெல்லி ஐ.ஐ.டி. நிபுணர்கள் சொன்னாங்க. உப்புத் தொழிற்சாலையிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை இதோடு சேர்த்தால் உள்ளிருக்கிற தனிமங்கள் பிரிஞ்சிடும். அதை சூாிய ஒளியில வச்சு பவுடராக்கிடலாம். பொதுவா, சிறுநீர் எந்தத் தீங்கும் விளைவிக்காத ஒரு பொருள் சார்... அதுல எந்தக் கிருமியும் இருக்காது. அதிலுள்ள அமோனியா காற்றுல படும்போது துர்நாற்றம் வரும். அவ்வளவுதான்!’’ என்கிறார் சுப்புராமன் எளிமையாக.

கடந்த 2006ம் ஆண்டு, மனிதக் கழிவுகளை உரமாகப் பயன்படுத்தும் கம்போஸ்ட் கழிப்பறையை உருவாக்கியதற்காக குடியரசுத் தலைவரிடமிருந்து `நிர்மல் கிராம் புரஸ்கார்’ விருது பெற்றிருக்கிறார் இவர்.‘‘இத்தனை மதிப்புள்ள இயற்கைப் பொருளை ஏன் வேஸ்ட் ஆக்கணும்னு சிறுநீர் வங்கித் திட்டத்தை உருவாக்குனோம். ஒரு வண்டியை எடுத்துட்டுப் போய் வீடு வீடா சிறுநீர் சேகரிக்கிறதுதான் திட்டம்.

அவங்களா வந்தும் சிறுநீரைக் கொடுக்கலாம். ஆனா, எங்களால இதைக் கொஞ்ச நாட்கள்தான் செயல்படுத்த முடிஞ்சது. அப்புறம், போதிய நிதி கிடைக்காததால விட்டுட்டோம். இப்போ, அந்த 14 கழிப்பறைகளிலிருந்து வர்ற சிறுநீரை மட்டும் தேவைப்படுறவங்க வாங்கிட்டுப் போறாங்க. மற்ற கழிப்பறைகளை மக்கள் காசு கொடுத்து பயன்படுத்தணும். நாங்க, இந்த கழிப்பிடத்துல வந்து ஒரு தடவை சிறுநீர் கழிச்சா பத்து பைசா கொடுக்குறோம்.

 ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்குன்னு கணக்குப் போட்டு மாசம் 6 ரூபாய் வழங்குறோம். எங்களால முடிஞ்சதை செய்துட்டு வர்றோம். ஆனா, அரசு நினைச்சா இதுல ஒரு தொழிற்துறையையே துவக்கலாம். இப்போ, பொட்டாசியத்தை மொராக்கோ நாட்டுல இருந்து இறக்குமதி செய்றாங்க. நைட்ரஜன், பாஸ்பரஸ்னு எல்லாமே வெளியிலிருந்து வாங்குறாங்க. அதுக்கு பதிலா நம்ம சிறுநீரைப் பிரிச்சு, இங்கேயே இயற்கை உரங்கள உற்பத்தி பண்ணலாம். அதன்வழியா, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். விளைச்சலும் அமோகமா இருக்கும்!’’ என்கிறார் சுப்புராமன் அழுத்தமாக.
அதாவது... யூரின் இருக்க ஃபாரின் எதற்கு!

சிறுநீர் நிறைய சேர்ந்துச்சுன்னா என்ன  பண்றதுன்னு நினைச்சப்ப, ‘சிறுநீர்ல இருந்து பவுடர் தயாாிச்சு  உரமாக்கலாம்’னு டெல்லி ஐ.ஐ.டி. நிபுணர்கள்
சொன்னாங்க!’’

- பேராச்சி கண்ணன்
படங்கள்: சுந்தர்