யாருக்கு சொந்தம்?



விநோத ரஸ மஞ்சரி

தம்பதிகள் விவாகரத்து கோருவதும் அவர்களின் குழந்தைகள் அம்மாவிடம் வளர வேண்டுமா... அல்லது அப்பாவிடம் வளர வேண்டுமா எனப் பிரச்னை எழுவதும் சகஜம். ஆனால், இது ஒரு விசித்திரமான வழக்கு. ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என அமெரிக்க நீதிமன்றத்தையே ‘அவ்வ்வ்’ ஆக்கிய வழக்கு!

இது விவாகரத்தல்ல... அமெரிக்காவின் பிரபல டி.வி நடிகையான சோஃபியா வெர்கராவும் தொழிலதி பரான நிக் லோபும் காதலித்து வந்தார்கள். இப்போது பிரேக்கப் ஆகிப் பிரிந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இதிலென்ன பிரச்னை? நடிகை சோஃபியாவுக்கு இப்போது 42 வயது. ஏற்கனவே 1992ல் திருமணமாகி ஒரு மகனுக்குத் தாயானவர் அவர். அந்த உறவெல்லாம் மறந்து பல நாளாச்சு. இன்று சோஃபியா பெரிய ஸ்டார். அமெரிக்காவின் காஸ்ட்லி ஆன்கர். ‘மாடர்ன் ஃபேமிலி’ என்ற டி.வி ஷோ மூலமாக அவர் உலகம் முழுவதும் பிரபலம். ஹாலிவுட் புரொமோஷனும் கிடைத்து கொடி கட்டிப் பறக்கிறார்.

2000ம் ஆண்டில் சோஃபியாவுக்கு புற்றுநோய் காரணமாக தைராய்டு சுரப்பியே முற்றிலுமாக அகற்றப்பட்டது. இன்றும் தைராய்டு சமநிலைக்காக ஹார்மோன் மருந்துகள் எடுத்துக்கொள்கிறார். இனி எக்காலத்திலும் இயற்கையாகத் தன்னால் தாயாக முடியாது என்பதால்தானோ என்னவோ, செயற்கைக் கருத்தரிப்பு நிலையம் ஒன்றில் தனது கருமுட்டையையும் காதலர் நிக்கின் உயிரணுவையும் வைத்து டெஸ்ட் டியூப் கருக்கள் இரண்டை உருவாக்கினார் சோஃபியா.

அவை உறைநிலையில் அங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ‘இருவரின் பரிபூரண சம்மதம் இருந்தால்தான் இவற்றை சோஃபியா தன் கருப்பையிலோ, வேறு யாராவது வாடகைத் தாயின் கருப்பையிலோ செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்’ என்கிறது எழுதிக் கொடுத்த அக்ரிமென்ட். இப்போது உறவே முறிந்துவிட்டதால் இந்தக் குழந்தை எதற்கு என கருக்கள் இரண்டையும் அழித்துவிட சம்மதம் தந்துவிட்டார் சோஃபியா. ஆனால், கருக்களின் தந்தையான நிக் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டு கருக்களையுமே வாடகைத் தாய் மூலம் பெற்று, தானே வளர்க்க விரும்புகிறார் அவர்.

‘‘அவை ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட உயிர்கள். அவற்றை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை!’’ என்பது நிக்கின் பாயின்ட். ஆனால் இதற்கு சோஃபியாவின் சம்மதம் வேண்டுமே! தன் கருமுட்டையை நிக் பயன்படுத்தக் கூடாது என கோர்ட்டில் தடை வாங்கிவிட்டார் அவர்.

‘‘கணவனின் சம்மதம் இல்லாமல் ஒரு தாய் கருவைச் சுமந்து பெற்றுக்கொள்ள உரிமை இருக்கும்போது, தந்தை தன் கருவைப் பெற்று வளர்க்கவும் தாயின் சம்மதம் தேவையில்லை!’’ என வாதம் வைக்கிறார் நிக்.அப்புறமென்ன... அங்கேயும் கணக்கு டேலி ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் நீதிபதிகள்!

- ரெமோ