அழியாத கோலங்கள்



நான் பிறந்தபோது என் தாயின் வயது 14 அல்லது 15 ஆக இருக்கும். நான் பிறந்து 24 ஆண்டுகளும் 11 மாதங்களும் கழித்துத்தான் கமல் பிரவேசம்.  எங்கள் தந்தை சீனிவாச அய்யங்காருக்கு சம்பாதித்ததை சேமித்துப் பழக்கம் இல்லை. பரமக்குடி வீடே ‘ஸ்த்ரீதனா பிராப்பர்டி’. அதை விற்று சென்னையில் வீடு வாங்க என் மாமன்மார்களிடம் விடுதலைப் பத்திரம் எழுதி வாங்க வேண்டி வந்தது.

ஆனால் எங்கள் தந்தை ஜில்லா போர்டு உதவித் தலைவராக இருந்தபோது, காமராஜர் சொல்படி 139 கிராமப் பள்ளிக்கூடங்களை அந்தந்த ஊர்ப் பெரியவர்களைக் கொண்டு நிறுவினார். இதை அவரே பெருமையோடு சொல்லிக்கொள்வார். இந்தக் குடும்பத்தின் பெரிய குறையே, தன்னையும் அறியாமலே வெற்றி பெறுவதுதான்.

வெகு நாட்களுக்கு முன் நரசிம்மன் என்பவர் ஒரு கார் திருட்டு மோசடி செய்ததாக ஒரு வழக்கு. அந்த வழக்கைப் போட்டது ஒரு சைக்கிள் கடை ஓனர். நரசிம்மனின் முன்னாள் முதலாளிதான் அவர். கீழக்கரையில் ஒரு பணக்கார முஸ்லிம். அவருடைய மைனர் மகளை இந்த நரசிம்மன் கடத்திச் சென்றதாக ஏற்கனவே ஒரு வழக்கு நடந்து, அது ஒரு வகையாக சமாதானத்தில் முடித்து வைக்கப்பட்டது.

வழக்கறிஞர் தொழில் செய்த ஆரம்ப காலத்தில் நான் இந்த நரசிம்மனுக்கு ஆஜராகி, கார் திருட்டு வழக்கும் ஒருவாறாக விடுதலை ஆனது. இது நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நரசிம்மன் என் தந்தையாரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்திருந்தார். நான் பொறுக்க முடியாமல், ‘‘இவனை ஏன் வேலைக்குச் சேர்த்தீர்கள்?’’ என்று கேட்டேன். “ரொம்ப கெஞ்சினான்... இரக்கப்பட்டு சேர்த்தேன்!’’ என்றார் என் தந்தையார்.

இதே பிரச்னைதான் அவருடைய வாரிசு உலக நாயகனிடமும். இவரைத் தீவிரமாகக் காதலிக்கும் பெண்ணிடம் மனதையும் தன் உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு... திடீரென்று தன் கற்பை வேறு ஒருத்தியிடம் இழந்துவிட்டு... மற்ற பிரபலங்களைப் போல் உண்மையை மறைக்காமல் ஒப்புக்கொள்வார். சிக்கல் வரும்!

 இந்த டிரைவர் நரசிம்மன், என் தந்தையார் இறந்த பிறகு அவருடைய வக்கீல் ஆபீஸில் இருந்த பழைய கேஸ்கட்டுகளில் முக்கியமான ஒன்றை உருவி விட்டார். ஒரு நிலத்தை என் தந்தையார் டிரஸ்டியாக வாங்கி பலருக்கு வீட்டுமனையாக பாகப்பத்திரம் போட்டுக் கொடுத்த டிரஸ்ட் பத்திரம் அது. அதில் தன் பெயரைப் போட்டு, ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு, நான் உட்பட அந்த வீட்டுமனை வாங்கிய வாரிசுகள் அத்தனை பேர் மீதும் ஒரு பிளாக் மெயில் பிராது செய்தார் அவர்.

நடந்திருப்பது மோசடி என்பது எனக்குப் பட்டவர்த்தனமாகத் தெரியும். அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, அவர் பேரில் ஃபோர்ஜரி குற்றத்துக்கு ஆதாரங்களோடு ரிட் மனு ஒன்றைத் தயார் செய்துவிட்டேன். சுலபமாக அவரை உள்ளே தள்ளிவிட முடியும். அதற்கு முன் கமலிடம் பேசினேன். கமல் என்னிடம் சொன்னது இதுதான்...

 ‘‘வக்கீல் சொந்த கேஸ் நடத்துவது என்பது, நடிகன் சொந்தப் படம் எடுத்து நஷ்டம் அடைவது போன்றது. தர்மம் தலைகாக்கும் என்றாரே அப்பா... தர்மத்தை திருடர்களுக்குச் செய்தால், திருட்டு கொடுத்தவர்கள் திருடனை விட்டுவிட்டு நம்மைத் திட்டுவார்கள்!  அவன் போட்ட வழக்கு அங்கேயே முடியட்டும். சாக்கடையில் கல் எறிந்தால் நம்மீதும் கொஞ்சம் தெறிக்கும்!’’

அது சரிதானே? ‘கமல்ஹாசன் தந்தை பேரில் பொய் வழக்கு போட்டவருக்கு ஃபோர்ஜரி குற்றம் செய்ததாக ஒரு வருடம் கடுங்காவல்’ என்று தலைப்போடு செய்தி வரும். ‘ஐயோ, பாவம்!’ என்று சந்தனக்கட்டை வீரப்பனுக்கு சேர்ந்தது போல் ஒரு கூட்டம் சேரும்.சமீபத்தில் ஒருவர் ‘கமலுக்கு ஓர் கடிதம்’ என்று கமலின் திறமைகளை எல்லாம் அரைமனதாக ஒப்புக்கொண்டு அதைப் போல் இரண்டு மடங்கு குறைகளைப் பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார்.

இவர் வேறு யாராவது நடிகருக்கு கடிதம் எழுதியிருப்பாரா என்பதே சந்தேகம். சினிமா நடிப்பைப் பொறுத்தவரை பார்க்கும் மக்கள் எல்லோரும் கையில் ஒரு தராசு வைத்துக்கொண்டு நடிப்பை எடை போடுவதில்லை.

அரசியலிலும் சினிமாவிலும் ஒரு புரிந்துகொள்ள முடியாத ஈர்ப்பு, சிலர் முகத்தைப் பார்த்தவுடன் ஏற்படும். அது இயல்பு! 85 வயதான என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘‘ஹலோ... ஹேண்ட்ஸம்!’’ என்று என் முகத்துக்கும் ஒரு விளக்கம் கொடுக்கும் ஹீரோயின்கள் ஒரு டஜன் பேர் உண்டு.

அவர்களைப் பற்றி அதிகம் கூறி உங்கள் கோபத்தைக் கிளற மாட்டேன். சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாத பல துணை நடிகர்கள், பல திறமை வாய்ந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் திறமையை என் மனக்கணக்கில் அளவிட்டுப் பார்த்திருக்கிறேன். அவர்களில் 75 சதவீதம் பேர் என்னிலும் திறமை உள்ளவர்கள்.

யாருக்கும் புரியாத காரணத்துக்காக என்னை ஒரு சிறிய கூட்டம் தேர்ந்தெடுத்து தேசிய விருது வரை அழைத்துப் போயிருக்கிறது. அந்த விருதுகள் கன்னடப் படத்துக்காகத்தானே ஒழிய, தமிழர்களை யாரும் குற்றம் சாட்டுவது சரியல்ல!

 ஒருவேளை மக்களுக்கு என் நடிப்பு பிடித்திருந்தால் சினிமா ரசிகர்கள் என் படத்துக்கு கூட்டம் கூட்டமாய் வந்திருப்பார்கள்... தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் வினியோகஸ்தர்களைத் தேடிச் சென்று, ‘‘சாருஹாசன் நடித்த படங்கள் ஸ்டாக் இருக்கிறதா?’’ என்று கேட்டிருப்பார்கள்.

வினியோகஸ்தர்கள் உடனே தயாரிப்பாளர்களிடம் கேட்டு, அவர்கள் பிரபல இயக்குநர்களிடம் போய், ‘‘சாருஹாசனை வைத்துப் படம் எடுங்கள்... நான் தைரியமாக செலவு செய்கிறேன்!’’ என்றிருப்பார்கள். நானும் கோடிகளில் உருண்டு புரண்டு, என் மனிதத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்திருப்பேன்.

 கமல் போல 56 ஆண்டுகளாகத் தொடர்ந்து புகழும் வெற்றியும் அடைந்தவர்களை அப்போதும் கூட ஒரு கொடுமை துரத்தும். நாற்பது ஆண்டுகளாக புகழுடன் தோன்றும் அமிதாப்பச்சனை ஒரு சாதாரண ‘மேகி’ நூடுல்ஸை வைத்து  அடித்துத் துவைத்து நீதிமன்றம் வரையாவது போவது போல்! கமலைப் பொறுத்தவரை தன் பிறவியின் பயனாக, ‘அடுத்த படத்தில் என்ன கிழிக்கப் போகிறாய் பார்த்து விடுவோம்’ என்று தான் ஆரம்பிப்பார்கள்.

மற்ற பிரபல ஹீரோக்களுக்கு வழக்கம் போல் ஆறு காதல் பாட்டுகள்... ஆறு சண்டைகள்... தவிர ஹீரோவின் முகத்தையும் இன்னொரு வடக்கத்திய ஹீரோயினின் அழகிய முகத்தையும் அடிக்கடி குளோஸ்அப்பில் காட்டினால் போதும். இப்படிப்பட்ட மசாலா தமிழ் சினிமாவின் எதிர்ப்பு சக்தியாக புதிய சிந்தனையுடன் வந்தவர்கள் தர், கே.பாலசந்தர், மகேந்திரன் போன்றவர்கள். கமலுடைய முயற்சி... அரைத்த மாவையே அரைக்காமல் புது சிந்தனைகளைத் திணிப்பது.

நல்ல நடிகர்களை வெறுப்பது புதிதல்ல. நான் தி.மு.க.வின் கட்சி வக்கீலாக அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியவர்களை ஆரம்ப காலங்களில் சந்தித்திருக்கிறேன். என் தந்தையின் கட்சித் தோழர் என்ற முறையில் நடிகர் திலகம் சிவாஜியும் பழக்கம்.

அன்று தி.மு.க ஈர்ப்பு உள்ளவர்களால், சிவாஜியை சிறந்த நடிகராக ஒப்புக்கொள்ள முடியவில்லை. காரணம், அவரின் காங்கிரஸ் அடையாளம்! சிவாஜி படம் ஓடும் தியேட்டரில் என்னை யாராவது கட்சிக்காரர்கள் கண்டுவிட்டால் போதும்... ‘‘என்ன வக்கீல்சாமி... நீங்க சிவாஜி படம் பார்க்கலாமா?’’ என்று கேட்பார்கள். அவர்களுக்கு பயந்து நான் சிவாஜி படத்தை மதுரையிலோ சென்னையிலோதான் பார்ப்பது வழக்கம்.

 அன்றைய நாகரிகம்...  எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிவாஜி பட போஸ்டரைக் கிழிக்க மாட்டார்கள். ஆனால், புதிதாக ஒட்டிய போஸ்டர்களில் இரவோடு இரவாக சாணியை அடித்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் போஸ்டர்களில் அந்த சாணித் தாக்குதல் இருக்காது.

காரணம், சிவாஜி ரசிகர்கள் சாணியைக் கையில் தொடும் பழக்கமில்லாதவர்கள்.   கமலுக்கு இரண்டு விதமான எதிர்ப்புகள். பிராமண ஜாதியில் பிறந்ததால் திராவிட சிந்தனை அவரை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அவர் பிராமண வழிமுறைகளை எதிர்ப்பதால் அவர்களின் கோபமும் வந்து சேர்கிறது!

அரசியலிலும் சினிமாவிலும் ஒரு புரிந்து கொள்ள முடியாத ஈர்ப்பு, சிலர் முகத்தைப் பார்த்தவுடன் ஏற்படும். அது இயல்பு!கமல் என்னிடம் சொன்னது இதுதான்... ‘‘வக்கீல் சொந்த கேஸ் நடத்துவது என்பது, நடிகன் சொந்தப் படம் எடுத்து நஷ்டம் அடைவது போன்றது!’’

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்