கவிதைக்காரர்கள் வீதி




அடி வாங்கிக்கொண்டு கற்ற
பாடங்களால் அல்ல,
பள்ளிவீதியில்
நாவல்பழம்
அவித்த கிழங்கு

வறுத்த வேர்க்கடலை
வெம்பிப்போன காட்டுக் களாக்காய் விற்ற
பாட்டியால்தான் பள்ளிக்கூடம்
இன்றுவரை நினைவில் இருக்கிறது

தும்பிவால் பிடித்து
றெக்கை ஒடித்தது
சுருக்கில் இறுக்கி
ஓணான் பிடித்தது
குருவியை அடித்துவிட்டு
துள்ளிக் குதித்தது,
காக்கா அடிக்க
உண்டிவில் செய்தது எல்லாம்
யாருக்குமின்று தெரியாவிட்டாலென்ன
மனதுள் உயிரோடிருக்கின்றன
அந்தஉயிர்கள் துடித்த தருணமெல்லாம்

நெல் வேகும் வாசம்
மண் நனையும் வெப்பம்
தெருவோர மதிலெட்டிப் பார்க்கும்
செம்பருத்திப் பூக்கள்
கிணற்றடிப் பெண்கள்
மார்கழிக் கோலம்

திருவிழாக்களில் புதுப்படம்
மாலைநேர மீன் பன்
குச்சி ஐஸ்...
இதுபோன்ற
எத்தனையோ விஷயங்களைத்
தொலைத்துவிட்டுத்தான்
நம்மூர் சிட்டியாகிறது

சந்தேகக் கேசில் பிடித்து
உள்ளே போடக்கூடுமென்று
தெரிந்தும்
காவல்நிலையத்தைத் தாண்டிப்போய்
இரவுக் காட்சி பார்க்க வைத்தது
அந்தக் கால சினிமாக்கள்
மட்டுமல்ல,
வயதும்தானென்று
இப்போது புரிகிறது

வித்யாசாகர்