கிச்சன் to கிளினிக்



எலும்பை சிதைக்கும் குளிர்பானங்கள்!

உணவு விழிப்புணர்வுத் தொடர்


நம் வீட்டு கிச்சனிலிருந்து கிளினிக்கிற்கு நம்மை அனுப்பிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்கள் குறித்தும், அவற்றின் ரசாயனச் சிக்கல்கள் குறித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் பற்றி தினம் தினம் ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் ஆய்வு முடிவுகள் நம்மை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன.

 நம் சமையலறைகளில் தினசரி உணவாக இருந்தவையும், நம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் விருப்ப உணவாக இருந்தவையும், ருசியால் நம் நாவை அடிமையாக்கியவையும் இன்று வில்லன்களாகப் பார்க்கப்படுகின்றன. பல உணவுகள் பற்றிய உண்மைகள் நம் உடல்நலத்தையும்  மன பலத்தையும் வேரோடு சாய்ப்பவைகளாக உருமாறியுள்ளன.

உடலிற்குக் குளிர்ச்சி தரும் என்று நம்பி நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் பெட்ரோலியப் பொருட்களின் கழிவு ரசாயனமான லிக்யூட் பாரபின் என்ற அமெரிக்க மண்ணெண்ணெய் கலந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெயோடு லிக்யூட் பாரபின் கலப்பது என்பது இப்போது லிக்யூட் பாரபினோடு தேங்காய் எண்ணெய் கலக்குமளவிற்கு அதிகரித்துள்ளது.

 இது தேங்காய் எண்ணெயில் மட்டுமல்ல, டப்பாவில் அடைத்து விற்கப்படும் எல்லா வகை எண்ணெய்களிலும் கலக்கப்படுவது அம்பலமாகி வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நாம் மண்ணெண்ணெயை பயன்படுத்திக் கொண்டிருப்பது உடலிற்கு ஆரோக்கியம் தரும் விஷயமா என்ன?

அமெரிக்கா மற்றும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல கடுமையான உணவுத் தரக்கட்டுப்பாட்டு விதிகள் நம்மிடம் இல்லை. கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் பெரிய அதிகாரிகள் படையும் இல்லை. நம் சட்டமே, உணவு தொடர்பான தர நிர்ணய அளவுகோலை தயாரிப்பு நிறுவனங்கள் கையில் கொடுத்திருக்கிறது.

‘மக்களுக்கு உணவாகப் பயன்படும் பொருட்களில் இவர்கள் தரத்தை சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது. ஆனால் வணிக நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்கு முன்னுரிமை கொடுத்து, உணவு வியாபாரத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.

கார்பனேட்டட் டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களில் வித விதமான ரசாயனக் கலப்புகள் இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குளிர்பானங்களில் என்னென்ன ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன தெரியுமா? அவற்றில் உள்ள செயற்கைப் பழச்சாறுகளும், சுவையூட்டிகளும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் பலவிதமான அமிலங்கள் கலக்கப்படுகின்றன. பொட்டாசியம் பென்சோவேட், சோடியம் சைக்ளோமேட் போன்ற வேதிப்பொருட்களையும், பெக்டின், அல்ஜினேட்,
கராஜெனன் போன்ற திண்மையூக்கிகளையும் பயன்படுத்துகின்றனர்.

சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற அமிலங்களும், மேற்கண்ட வேதிப்பொருட்களும் இணைந்து நம் உடலைப் பதம் பார்க்கின்றன. இரைப்பையின் இயல்பு பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை உள்ளதாக மாறுகிறது. இரைப்பை மற்றும் சிறுகுடல், பெருங்குடலில் புண்களை ஏற்படுத்தும் குணம் இப்பொருட்களுக்கு உள்ளது. தொடர்ந்து குளிர்பானம் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு உணவுகளில் இருந்து சத்துகளைப் பிரிக்கும் தன்மை குறைந்து, பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்று வலி, வயிறு கனமான உணர்வு போன்ற தொந்தரவுகள் தோன்றும். காலப்போக்கில் முழு செரிமான இயக்கமே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இவ்வகை வேதிப்பொருட்களால் ஏற்படும்.

 உலகில் மிகப்பெரிய சந்தையைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்க குளிர்பானம் ஒன்று, தங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக சீக்ரெட் ஃபார்முலாவில் ஆல்கஹாலைக் கலந்து விற்பனை செய்கிறது. நம்முடைய கிராமங்கள் வரை கிடைக்கும் அக்குளிர்பானம் இப்போதும் அமோகமாக விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சுமார் 125 வருடங்களாகத் தயாரிக்கப்படும் அந்த குளிர்பானத்தின் சீக்ரெட் ஃபார்முலா மிகச்சமீபத்தில்தான் வெளியாகி இருக்கிறது.

இவற்றையெல்லாம் விட குளிர்பானங்களால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு ஒன்று உண்டு. அதுதான் ஆஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய். குளிர்பானங்களில் கலக்கப்படும் பாஸ்பாரிக் அமிலம் ஒரு முக்கியமான உடலியல் மாற்றத்தை விளைவிக்கிறது. நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவுகளிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை உருவாக்கி ரத்தம் மூலமாக எல்லா பகுதிகளுக்கும் வழங்குகிறது என்பது நமக்குத் தெரியும். அப்படி உருவாக்கப்படுகிற சத்துக்களில் ஒன்று கால்சியம்.

இவ்வாறு உணவுகளில் இருந்து பெறப்படுகிற எல்லா சத்துப்பொருட்களும் சிறுகுடலில் அமைந்துள்ள குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு அவை ரத்தத்தில் கலக்கின்றன. குடலுறிஞ்சிகள் கால்சியத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்னால், நாம் குடிக்கும் குளிர்பானம் சிறுகுடலுக்குச் செல்கிறது. அதிலுள்ள பாஸ்பாரிக் அமிலம் கால்சியத்தோடு வினைபுரியத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தால் ரத்தத்தில் கலக்கப்பட வேண்டிய கால்சியம், கழிவாக மாறி குப்பைக்குப் போகிறது. இதே நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும்போது உடலிற்குத் தேவையான கால்சியம் முழுமையாகக் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்ல... பாஸ்பாரிக் அமிலத்தை செரிப்பதற்காக கூடுதல் கால்சியமும் தேவைப்படுகிறது.

தொடர்ந்து கால்சிய உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், இருக்கும் கால்சியமும் அமிலத்தைச் செரிக்கப் பயன்படுவதாலும் நம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான கால்சியம் கிடைப்பதில்லை. இதனால்தான் தொடர்ந்து குளிர்பானங்கள் அருந்துகிறவர்களுக்கு கால்சியம் குறைந்து, எலும்பில் உள்ள கால்சியமும் கரையத் துவங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இக்காலத்தில் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்படும் எலும்புச் சிதைவு நோய்க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக குளிர்பானங்கள் இருக்கின்றன.ரசாயனச் சிக்கல்கள் இதோடு முடிந்துவிடவில்லை.குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பால் பவுடர் முதல் செயற்கைப் பால் வரைக்கும் இக்காலத்தில் வந்து விட்டது. பால் பவுடரிலுள்ள ‘மெலமைன்’ என்ற ரசாயனம் அளவு மிகும்போது குழந்தைகளின் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

2008ம் ஆண்டு சீனாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணம் பால் பவுடரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் மெலமைன்தான் என நிரூபிக்கப்பட்டது. நாட்டு மக்களையே அதிர வைத்த இந்த ஆபத்துக்குக் காரணமான பல நிறுவனங்களுக்கு சீன அரசு தடை விதித்தது.

மிகச் சமீபத்தில் நம் உச்ச நீதிமன்றம், ‘பால் பொருட்களில் ரசாயனக் கலப்பு நிரூபிக்கப்பட்டால், அதற்குக் காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கலாம்’ என்று அறிவித்தது நமக்கு நினைவில் இருக்கும். அந்த அளவிற்கு இக்காலத்தில் ரசாயனக்கலப்பு நம் அன்றாட உணவுகளில் அதிகரித்திருக்கிறது.

இவையெல்லாம் உதாரணங்கள்தான். இந்தப் பட்டியலை முழுமையாகப் பார்த்தால், நாம் எந்த உணவையுமே சாப்பிட முடியாத நிலைக்கு ஆளாகி விடுவோம். நிறுவனங்கள் தயாரிக்கிற பொருட்கள் ஒருபக்கம் இருக்கட்டும்... இயற்கையாக விளைகிற காய்கறிகள், பழங்கள் இவற்றைப் பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.மிகச் சமீபத்தில் நம் உச்ச நீதிமன்றம், ‘பால் பொருட்களில் ரசாயனக் கலப்பு  நிரூபிக்கப்பட்டால், அதற்குக் காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கலாம்’  என்று அறிவித்தது!

(தொடர்ந்து பேசுவோம்...)

படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: ரித்திகா, லக்‌ஷிதா

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்