பொருத்தம்



‘‘தரகரே... எங்க பொண்ணு பவித்ராவுக்கு நீங்க கொடுத்த வரன்ல இந்த வினோத்ங்கற பையன் டபுள் ஓகே. இதையே பேசி முடிச்சிடுங்க. ஆனா, எங்க பவிக்கு ஏற்கெனவே ரெண்டு தடவை கல்யாணம் நிச்சயமாகி அந்தப் பையன்கள் இறந்ததால அது நின்னு போன விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிய வேணாம்! சரியா?’’ - விஷமச் சிரிப்போடு தரகர் கையில் ஆயிரம் ரூபாயைத் திணித்தார் கணேசன்.

‘இது தப்பில்லையா? நாளை உண்மை தெரிந்தால் ‘ஏமாற்றிவிட்டான்’ என மாப்பிள்ளை வீட்டில் நம்மைத்தானே கோபிப்பார்கள்!’ - மனசாட்சியோடு விவாதித்துக்கொண்டே மாப்பிள்ளை வினோத் வீட்டுக்குள் நுழைந்தார் தரகர். ‘‘வாங்க வாங்க’’ வரவேற்றாள் வினோத்தின் அம்மா.

‘‘நீங்க கொடுத்த ஜாதகத்துல பவித்ராங்கற பொண்ணு சூப்பர். அதையே முடிச்சிடலாம். ஆனா, எங்க வினோத்துக்கு ஏற்கனவே ஒரு தடவை மணமேடை வரைக்கும் வந்த கல்யாணம், நின்னு போச்சுங்கற உண்மையை அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்!’’ - அவளும் இரண்டு ஐந்நூறு ரூபாய் தாள்களை தரகர் கையில் திணித்தாள்.‘பொருத்தமான குடும்பம்தான்’ எனத் தரகர் தன் குற்றவுணர்ச்சியை விட்டொழித்தார்!

கா.கவிப்பிரியா