டாலடிக்கும் டாய்லெட் பேப்பர்!



விநோத ரஸ மஞ்சரி...

மணமேடை... எல்லோரும் மணப்பெண்ணுக்காக வெயிட்டிங்... அப்போது மணப்பெண் உடல் முழுவதும் டாய்லெட் பேப்பரைச் சுற்றிக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும்? ‘‘சீச்சீ...’’ என்கிறீர்களா? சுற்றியிருக்கும் படங்களில் ஒரிஜினல் மணப்பெண் உடையை விட சூப்பராக இருக்கும் இதெல்லாம் டாய்லெட் பேப்பரேதான்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து முடிந்திருக்கிறது இந்த ‘டாய்லெட் பேப்பர் மணப்பெண் அலங்காரப் போட்டி’. அங்கே கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து நடக்கும் விநோதப் போட்டி இது. அமெரிக்கா முழுவதிலும் இருந்து யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். எத்தனை கிராண்டான உடை வேண்டுமானாலும் போட்டு வரலாம்.

டாய்லெட் பேப்பர், பசை, டேப், ஊசி, நூல்... இவை மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுதான் விதிமுறை. நமக்குத்தான் இது கஷ்டம். ஆனால், அமெரிக்காவில் உள்ள வளரும் டிசைனர்கள் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனக் களத்தில் இறங்கி, வருடா வருடம் டாய்லெட் பேப்பர்களை இப்படி டாலடிக்கச் செய்துவிடுகிறார்கள்.

cheap-chic-weddings.com என்கிற ஆன்லைன் நிறுவனத்தை நடத்திவரும் லாரா கவுனி,  சூசன் பெயின் எனும் சகோதரிகள் இருவர்தான் இந்தப் போட்டிக்கு காரணகர்த்தாக்கள். தங்களுடையது மணப்பெண் உடை தயாரிக்கும் நிறுவனம் என்பதால், பளிச்சென்று இவர்களுக்கு உதித்த பப்ளிசிட்டி ஐடியாதான்  இந்தப் போட்டி. டாய்லெட் பேப்பர்களை உருவாக்கும் `சார்மின்’  நிறுவனத்தோடு இணைந்து இதை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் இவர்கள்.

இந்தாண்டு நடந்த இந்தப் போட்டியில் டோனா போப் வின்ச்லேர் என்பவர் உருவாக்கிய மணப்ெபண் உடை முதல் பரிசைப் பெற்றது. ‘‘இந்த உடையை உருவாக்க மூன்று மாதங்கள் உழைத்தேன். 22 ரோல் பேப்பர்களும், நிறைய பசையும், நாடாக்களும் இதற்குத் தேவைப்பட்டன. தொப்பியும் கூட டாய்லெட் பேப்பரால் செய்யப்பட்டதுதான்!’’ என்கிறார் டோனா உற்சாகமாக! என்ன... இதை நிஜத்தில் பயன்படுத்துவதானால் சர்ச்களில் ஃபேன் போடக் கூடாது!

- ரெமோ