கவிதைக்காரர்கள் வீதி



மையல்

சக்திஜோதி


தழல் மேனியுடைய ஒருத்தி 
குனிந்து  சலங்கை அணிந்து
நடனத்திற்குத் தயாராகும் நிலையை
அதிகாலையிலேயே நினைத்துக்கொண்ட
சித்திரம் வரையும் ஒருவன் 
இசையையும்  தாளத்தையும் 
அதன் வல்லின மெல்லினங்களையும்  வாங்கி
உயிர்த்தெழும் அவளின் பாதங்களை
வரையத் தொடங்கினான்
ஆடலில் மெய்மறந்த
விழிகளுடன் இருக்குமவளின்

உயிர்த்த பாதங்களிலிருந்து
ஒலிக்கும் சொற்களில்
யாவருமே கிறங்கியிருப்பதாக
இறுமாந்திருந்தாள் அவள்
தாளக்கூறுகளின் விசித்திரக்கூர்மையில்
அசையும் அவள் உடலையும்
அதன் நெளிவுகளின் குழைவையும்
மனதில் ஏந்தியபடி
செஞ்சாந்துக் குழம்பிட்ட
அவளின் பாதங்களை வரைந்து முடிக்கையில்
பாதி மூடிய விழிகளுடையவள்
அவனிடத்தில் வசியப்பட்டிருப்பதாக
நினைத்துக்கொண்டான் அவன்.