எண்ணங்கள்



‘‘என்னங்க
சொல்றீங்க?
உங்க அண்ணன் -
அண்ணி அமெரிக்கா
விலிருந்து வந்து
இனிமேல் இங்கயே
இருக்கப் போறாங்களா?

அப்போ, நாம அனுபவிச்சுட்டு இருக்குற நாலு ஏக்கர் பூர்வீக சொத்தை ரெண்டா பிரிக்கச் சொல்லுவாங்க. ரெண்டு ஏக்கராவுல என்ன விவசாயம் பண்ணி, நம்ம குழந்தைகளைப் படிக்க வைக்கிறது?’’ - கணவன் நாகராஜிடம் புலம்பினாள் லட்சுமி. அடுத்த வாரத்திலேயே நாகராஜின் அண்ணன் சக்திவேலும் அண்ணி சரஸ்வதியும் ஊருக்கு வந்துவிட்டனர். இரண்டாண்டுக்கு ஒருமுறை அவர்கள் வரும்போதெல்லாம் ராஜ உபசாரம் செய்யும் லட்சுமியால் இப்போது ஏனோ அப்படி கவனிக்க முடியவில்லை. கடமைக்கு ஏதோ செய்தாள்.

அன்று குலதெய்வம் கோயிலுக்கு போய்விட்டு வந்த அண்ணன் சக்திவேல், வீட்டுக்குள் நுழைந்ததும் நாகராஜ், லட்சுமி, சரஸ்வதி மூவரையும் அருகில் அழைத்தார்.
‘‘நம்ம பக்கத்துத் தோட்டத்து பெரியசாமி அவனோட பத்து ஏக்கர் தென்னந்தோப்ப விற்கப் போறானாம். உடனே ‘நானே வாங்கிக்கறேன்’னு சொல்லி விலையும் பேசிட்டேன்.

அஞ்சு ஏக்கர் பூமிய லட்சுமி பேர்லயும், அஞ்சு ஏக்கர் பூமிய சரஸ்வதி பேர்லயும் எழுதிடலாம். சம்மதம்தானே?’’ - சக்திவேல் கேட்டார்.நாகராஜும், லட்சுமியும் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சக்திவேலின் காலில் விழுந்து வணங்கினர்!   

ஜெய தமிழண்ணா