சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 24

சூரிய நமஸ்காரத் தொடரின் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டோம் என்பது சற்று வியப்பாக உள்ளது. இப்பொழுதுதான் தொடங்கியது போல் உள்ளது. அதற்குள் 23 வாரங்கள் பறந்தோடிவிட்டன! காலம் எப்போதும் அப்படித்தான்... தன் பணியில் குறையின்றி, துல்லியமாய்த் தொடர்கிறது. அதைப் புரிந்துகொண்டு, நேரத்தை பெரும் சக்தியாய் பார்த்துப் பயன்படுத்துபவர்களுக்கு, வாழ்க்கையே பேரானந்தம்தான்!

தமிழில் சூரிய நமஸ்காரம் பற்றிய முதல் தொடர் இது. எந்தக் கட்டுரையையும் நூலையும் விடவும் ஆகச்சிறப்பாக, தனித்துவம் நிறைந்ததாக இருக்க வேண்டும்; படிக்கிற ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வையும் தெளிவையும் தரவேண்டும்; பலரையும் - குறிப்பாக இளைஞர்களை பயிற்சியில் இறக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு இது வளர்க்கப்பட்டது. பயிற்சி செய்பவர்களுக்கும், புதிதாகத் தொடங்க உள்ளவர்களுக்கும் ஓர் அரிய கையேடாக இருக்கவேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது. சூரிய நமஸ்காரம் பற்றிய பல்வேறு குழப்பங்கள் நீங்கவும் இது உதவியது. சூரிய நமஸ்காரத்தை எளிமையாக ஒருவர் அணுக உதவும் முயற்சியாகவும் இது இருந்தது.

இதுவரை வெளியான ஒவ்வொரு பகுதியும் சூரிய நமஸ்காரத்தின் மிக வலுவான ஓர் அம்சத்தைப் பேசுவதாக இருக்கும். சில பகுதிகள் புரிதலைத் தரும்; சில பகுதிகள் முன் தயாரிப்பாக இருக்கும்; சில பகுதிகள் நேரடியாய் பயிற்சியைப் பற்றிப் பேசும். முடிந்தவரை பயிற்சிக்கு உதவக்கூடிய - உற்சாகமாய் அமையக்கூடிய பலரது கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. பயிற்சிக்கு அப்பால் வாழ்க்கையின் பல இயல்புகள் பேசப்பட்டுள்ளன.

சூரிய நமஸ்காரத்தை வைத்துக்கொண்டு யோகாவின் பல அம்சங்கள் - அனுபவங்கள் பேசப்பட்டுள்ளன. இவை வாழ்வைப் புரிந்துகொள்ள துணைசெய்யக்கூடும். அதன் மூலமும் உங்களின் பயிற்சி வளம் பெறும். இதைப் படித்து யோகாவிற்குள் வரும் சிலர், அதை முறையாக அறிய முற்படலாம். தங்களின் அனுபவங்களை பிறரோடு பகிர்வதன் மூலம் மேலும் சிலர் ஆரோக்கிய உலகில் பிரவேசிக்கலாம். ‘காலம் நமக்கு அளித்திருக்கும் பெரும் கொடை யோகா’ என்று உணரலாம். ஒரு சிரத்தையான முயற்சி எப்படிப்பட்ட நல்விளைவுகளைத் தரும் என்பதற்கு சூரிய நமஸ்காரம் சிறந்த உதாரணம்.

இன்று உலக அளவில் யோகா எவ்வளவு பிரபலமோ, அவ்வளவு பிரபலமாக இந்த நமஸ்காரம் இருந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் - குறிப்பாக வெளிநாட்டினர் - இந்த சூரிய நமஸ்காரத்தை ஒரு வரப்பிரசாதமாக நினைத்து பயிற்சி செய்துவருவதை கவனிக்கிறேன். பலருக்கு பயிற்சியும் அளித்திருக்கிறேன். அதை ஈடுபாட்டோடு அனுபவித்துச் செய்து பலன் பெற்று வருகிறார்கள் அவர்கள். சிறுவயது முதலே சுதந்திரமாய், சுயமாய் வாழும் வாழ்க்கையாலோ என்னவோ, பல நாட்டினர் தங்களின் எல்லா தேவைகளிலும் தங்களின் ஈடுபாடு இருப்பதை விரும்புகிறார்கள்.

அந்த வகையில் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க எடுக்கும் முயற்சிக்கு, இது பெரும் அடித்தளமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். தங்களின் மிக பிஸியான வாழ்க்கையிலும் உடலுக்காகச் செலவழிக்கும் நேரத்தை அர்த்தமிக்கதாக ஆக்கிக் கொள்கிறார்கள். முழுமையான ஈடுபாட்டோடு செய்யும் எதுவும் பலன் தராமல் போகாது. அதிலும் யோகாவை முழு ஈடுபாடு-நம்பிக்கையோடு அணுகும் ஒவ்வொருவரும் பெரும் அனுபவத்தையும்-பலன்களையும் பெறாமல் இருந்ததில்லை.
பல நாடுகளில் சூரிய நமஸ்காரம் திருவிழா போல கொண்டாட்டமாய் செய்யப்படுகிறது.

சமூகக் காரணங்களுக்காக குழுவாய் பயிற்சி நடக்கிறது. உலகிற்கு புதிய விஷயம் ஒன்றைச் சொல்ல, ஆயிரக்கணக்கானோர் கூடி சூரிய நமஸ்காரம் செய்து கவனத்தை ஈர்க்கின்றனர். யோகா ஆசிரியர்களில் பலர் புதியதாக சிலவற்றைச் சேர்த்து, நமஸ்காரத்திற்குப் புதுப்புது முகங்கள் கொடுத்துள்ளனர். வெளிநாட்டினர் இதில் காட்டும் அக்கறையைப் பார்த்து இப்போது இந்தியர்களுக்கும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அவசர வாழ்க்கையில் எந்த ஒன்றிலும் உடனடியாகப் பலன் பெறத் துடிக்கிறார்கள் பலரும். இந்த இயல்புக்கும் கூட சூரிய நமஸ்காரம் கை கொடுக்கிறது.
இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு, ‘சூரிய நமஸ்காரம் மிகவும் எளிது’ என்றோ... அல்லது ‘இத்தனை ஆயிரம் ஆண்டு கால பழமையான ஒன்று எப்படி எளிதாக இருக்கும்’ என்றோ நீங்கள் நினைத்தால், அது உங்கள் சொந்த அபிப்ராயம் மட்டுமே. அதே நேரம், ‘இது மிகவும் கடினமானது. இதற்கு அப்படி இப்படி தயாராக வேண்டும்’ என்று உங்களின் திறமையையும் வலிமையையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.

ஈடுபாடும் ஆர்வமும் அக்கறையும் சேர்ந்து கொண்டால், சூரிய நமஸ்காரத்தைச் செய்ய முடிவது மட்டுமல்ல... அதன் மூலம் பெறப்போகும் பலன்களும் அனுபவங்களும் கூடும். சிலநேரம் இவற்றின் பலன்களைத் தாண்டி உங்கள் பயிற்சி ஒருபடி மேலே சென்று அதனால் கூடுதல் பலன்கள் பெறவும் வாய்ப்புள்ளது.
அவ்வாறு நுழைந்து, அனுபவப்படும்போது, ஆனந்தப்படும்போது, நீங்களே உங்களின் தேவைக்கு ஏற்ப பயிற்சியை மாற்றிக்கொள்ள முடியும். ஆழமாய்ச் செல்ல முயல்வீர்கள். அனுபவத்தை விஸ்தரிக்க முயல்வீர்கள். தவம் போல் முழு ஈடுபாட்டில் செய்ய உழைப்பீர்கள். அதனால் பயிற்சியும் அனுபவமும் உங்களுக்கு புதியன பலவற்றைத் தரும் என்றே சொல்லலாம். 

அதுதான் ஒரு பயிற்சியில் நடக்கவேண்டும். வளர்ச்சியில்லாமல் இருந்தால் எங்கோ குறை இருக்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து எந்த முன்னேற்றமும் இல்லையேல் பயிற்சியை திரும்பிப் பாருங்கள்; செய்யப்படும் விதம் எப்படி என்று அலசிப் பாருங்கள். அவசரங்களில், வாழ்க்கை ஓட்டங்களில் செய்யப்படும் பல அரைகுறைகளில் இதுவும் ஒன்றாகிவிட்டதா என்று நிதானமாய் பாருங்கள்.

சூரிய நமஸ்காரப் பயிற்சி எப்படியெல்லாம் மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை கொண்டது என்று பகிர்கிறார், யோகாவிலும் நடன உலகிலும் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆழமாய் பயணித்து வரும் ஜோஸ்னா நாராயணன் அவர்கள்.‘‘இந்தப்பயிற்சியில் சூரியன் ஒரு குறியீடுதான், துவக்கத்தில் அதன் உதவியோடு பயிற்சியைத் தொடங்கலாம். பிறகு அதைத் தாண்டிப்போக வேண்டும். அதாவது பயிற்சியின் ஆரம்பத்தில் சூரியன் எந்தப் பக்கம் இருந்து வருகிறதோ, அந்தப் பக்கத்தை சரியாகப் பார்த்து, சூரிய நமஸ்காரம் செய்தால் நமது சக்தியை பூரணப்படுத்திக்கொள்ள முடியும். நமது உள் உலகைப் புரிந்துகொள்ள, நமக்கு வெளியுலகின் உதவி தேவைப்
படுகிறது.

இப்படி வெளியுலகின் தொடர்போடு பயிற்சி செய்யத் தொடங்கும் நாம், அதனோடு மட்டும் நின்று விடக்கூடாது. நமது பயிற்சியால் - முயற்சியால் உள்ளுக்குள் இருக்கும் சூரியனை எழுப்ப வேண்டும். அப்படி நமது உள் சூரியன் எழுந்து வரும்போது, நமக்குத் தெளிவு பிறக்கும்; தெளிவு வந்தால், துணிவு வரும். தர்மம் எது, அதர்மம் எது எனத் தெரியும். இதை வெளிச் சூரியனால் நமக்குத் தர முடியாது. 

ஆரம்பத்தில் சூரியன் உதயமாகும் திசையைப் பார்த்துப் பார்த்து பயிற்சி செய்து உள் சூரியனை எழுப்பிய பின், திசை என்பது முக்கியமில்லாமல் போய் விடும். பிறகு எந்தத் திசையைப் பார்த்தும் பயிற்சி செய்ய முடியும், அந்த அளவுக்கு உள் சூரியன் சக்திவாய்ந்தது’’ என்கிறார் அவர். வைராக்கியமுள்ள ஒருவர், ‘நான் இந்த சூரிய நமஸ்காரப் பயிற்சியை முறைப்படி செய்யப்போகிறேன், முழுதாய் வெற்றி பெறப் போகிறேன்’ என்று துணிந்தால் - அதற்காக தொடர்முயற்சி எடுத்தால் - நிச்சயம் அவரது வாழ்வும் வளமும் உயரும். எதிலும் அவரால் சிறக்க முடியும்.

செயல்களில் தெளிவும் ஈடுபாடும் இருக்கும். தொடரும் தீவிரப் பயிற்சியால் எத்தனையோ கோடிக்கணக்கானவர்களை விட அவரது வாழ்க்கை பக்குவமாகவும் உயர்வாகவும் அமையும். விலைமதிப்பற்ற அந்த பொக்கிஷ நிலைதான் அவருக்கு சூரிய நமஸ்காரப் பயிற்சி தரும் மாபெரும் பரிசாக இருக்கும். எல்லோரும் பொக்கிஷம் ஆகுங்கள் என்பதே என் வேண்டுகோள்.நன்றி!

நமது பயிற்சியால் -
முயற்சியால்
உள்ளுக்குள் இருக்கும்
சூரியனை எழுப்ப
வேண்டும்.
அப்படி நமது
உள் சூரியன் எழுந்து வரும்போது, நமக்குத் தெளிவு  பிறக்கும்!

ஏயெம்