கதகளி விஷாலுக்கு வில்லனே கிடையாது!



இயக்குநர் பாண்டிராஜ்

‘‘கொஞ்ச நேரம் மழையைப் பார்த்துட்டு இருந்திட்டு பேசுவோமா? மழை, தெருவை மட்டுமில்ல... மனசையும் கழுவிடுது. மழையைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது யாரும் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாதுனு தோணுது.

மழை ஒரு அதிசயம் இல்லையாண்ணா!’’ - வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். அப்படியே போஸ்ட் கிராஜுவேட் படிக்கிற பையன் வடிவம்தான். இந்தத் தடவை விஷாலோடு ‘கதகளி’. நெற்றியைச் சுரண்டும் பிசினஸே இல்லை... கேள்வியை முடிக்கும் முன்பே பதில் வந்து விழுகிறது.

‘‘ ‘கதகளி’... விஷாலோடு... நீங்கள் ஆக்‌ஷன் த்ரில்லர் செய்ததே இல்லை. எப்படி திடீரென்று..?’’‘‘விஷாலோடு ‘பாண்டிய நாடு’ சமயத்தில் பழக்கம் வந்தது. சுசீந்திரன் என் நண்பனாக அமைந்ததால் வந்த நட்பு இது. அப்போதுதான், ‘பாண்டி, நாம் படம் பண்ணலாமா’னு கேட்டார். ‘எனக்கு ‘இது நம்ம ஆளு’, ‘பசங்க 2’ ரெண்டுமே இறுதி நிலையில் இருக்கிறதே’ என்றேன். ‘உங்களுக்கு அதை முடிப்பதில் ஒரு பிரச்னையும் இருக்காது. உங்களால் செய்ய முடியும்’ என்றார். அவருக்கு ரெண்டு கதைகள் சொன்னேன். ஒன்று மாஸ் ஹீரோவுக்கான ஆக்‌ஷன் கதை. அவருக்கு அந்தக் கதை பிடிச்சிருந்ததை முகம் காட்டிச்சு.

அடுத்து ஒரு சிம்பிளான கதை சொன்னேன். அதை பெரிசா கவனம் எடுத்துக்கூட  நான் சொன்ன மாதிரி ஞாபகமில்லை. ஆனால், ‘இந்த சிம்பிள் கதையையே பண்ணுவோம்’னு சொன்னார் விஷால்! எனக்கும், சுசீந்திரனுக்கும் ஆச்சரியம் தாங்கலை. ‘என்னங்க, இந்தக் கதையை ஓகே பண்ணியிருக்காரு’னு வாய்விட்டே கேட்டுட்டார் சுசீ. ஏன்னா, அந்தக் கதை ஒரு ஆரம்ப நிலை ஹீரோ பண்ற கேரக்டர்.

சுசீந்திரன்கிட்டே அந்தக் கதை செமையா இருக்குனு சொல்லியிருக்கார். ‘இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் உண்மைக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கு. ஒரு குட்டி நாவலைப் படிக்கிற மாதிரி உணர்வு. அதான் இந்தக் கதையை ஓகே பண்ணினேன்’னு காரணத்தையும் சொன்னார். இப்படி ஒரு பெரிய ஹீரோ சேரும்போது நானும் நிறைய விஷயங்களைச் சேர்த்தேன். ஜெயிக்கிறது, தோக்குறது எல்லாம் வாழ்க்கையில கிடையாது...

சினிமாவிலும் கிடையாது... நாம் என்ன நினைக்கிறோமோ அதை மக்களுக்குக் கடத்திட்டாலே போதும்னு நினைக்கிறேன். எழுத்துக்கும், அது காட்சி வடிவமாவதற்கும் நடுவில் பெரிய கெமிஸ்ட்ரி இருக்கு. அதற்கு கூடுதலான உழைப்பும், கவனமும் தேவைப்படுகிறது. ‘கதகளி’யில் அப்படி ஒரு கலவை வந்திருக்கு!’’‘‘அதென்ன ‘கதகளி?’ ’’

‘‘ ‘கதகளி’க்கு நான் முன்னாடி மனசில் வச்சிருந்த தலைப்பு ‘இடி, மின்னல், மழை’. ஏன்னா, படத்தின் பின்னணியில் மழை இருந்துக்கிட்டே இருக்கும். இந்தப் படத்தில் எங்களுக்கு இயற்கை மழையே உதவிக்கு வந்தது. தண்ணீர் லாரி வச்சுக்கிட்டு தயாராய் இருந்தால், வானமே வந்து சாரல் மழை தூவிட்டுப் போகும். ‘இதப் பாருடா’ன்னு விஷால் முதற்கொண்டு ஆச்சரியப்பட்டு நிப்போம்.

நிஜ மழையில் தூரத்து இடம் கூட ஈரம் சுமந்து கிடக்கும். நல்ல ‘மூடு’ வந்து சேரும். படத்தில் ஆக்‌ஷன் இருக்கு... படம் சென்னையில் ஆரம்பிச்சு கடலூர்ல முடியும். சில சமயம் குடும்பத்தில் பிரச்னைகள் ‘கதகளி’ ஆடுமில்லையா... அப்படி ஒரு இடத்தில் படம் ஆரம்பிக்கும். சந்தோஷமும், சலசலப்புமாக திரிகிற ஒருத்தன் வாழ்க்கையில் சூழ்நிலை விளையாடினால் எப்படியிருக்கும். அதைச் சொல்லும் ‘கதகளி’. நிச்சயம் 30 டான்சரோடு கலர் கலரா விஷால் ஆடுற டான்ஸ் இதில் இல்லவே இல்லை!’’‘‘நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ஆச்சே... விஷால் எப்படியிருந்தார்?’’

‘‘ஒரு புகாரும் கிடையாது. இவ்வளவு குறைந்த நாளில் நான் எந்தப் படமும் எடுத்ததில்லை. அதற்காக தரத்தில் ஒரு குறையும் வைக்கவே இல்லை. ரிகர்சல், ரீடேக் கிடையாது. விஷால் உழைப்பின் உச்சம். ஒரு பக்கம் சங்க எலெக்‌ஷன், மறுபக்கம் பட ரிலீஸ் வேலைக்கு கட்டளைகளைப் பிறப்பிச்சுக்கிட்டே இருக்கார். ‘சட்’னு எந்தக் களைப்பும் தெரியாமல் ஷூட்டிங் வர்றார். நானே 24 மணி நேரமும் உழைக்க அஞ்ச மாட்டேன். என்னை முந்திக்கிட்டு விஷால் ஓடுறார். நல்ல பரபரப்பு. உழைக்க சளைக்காத ஆளுங்ககிட்ட வேலை பார்க்குறது ரொம்ப சௌகரியமாக இருக்கும். சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு விடியற்காலை 6 மணிக்கு ஷூட்டிங் முடியும். எல்லாரும் விழிக்கும்போது,  நாங்க தூங்க தயாராகிடுவோம்.

மற்ற விஷால் படங்களின் அமைப்பில் ‘கதகளி’ வரவே வராது. இது முற்றிலும் புதுசு. சும்மா இருந்தவனைத் தூண்டி விட்டால் எப்படியிருக்கும்? இதில் வில்லனே கிடையாது. சூழ்நிலையே அதைச் செய்யும். இந்த ஆக்‌ஷனில் என்னோட ஸ்டைல் இருக்கு. எடுத்தவுடனே யாரும் பறக்கக் கூடாது, கயிறு கட்டி இழுக்கக் கூடாது, ஒரே டயத்தில் பத்துப் பேரை அடிக்கக் கூடாதுனு ஸ்டன்ட் மாஸ்டர்கிட்டே சொல்லிட்டேன். தனி மனிதனுக்கு அர்த்தத்தோடு கோபம் வந்தால் எப்படியிருக்குமோ, அதுதான் ‘கதகளி’. ‘உண்மைக்கு பயப்படுறவன்... ஒருத்தனுக்கும் பயப்பட மாட்டான்’னு ஒரு வரி படத்தில் வரும். இதுதான் படத்தோட மெயின் லைன்!’’
‘‘விஷால்கிட்ட ஏதாவது மாறுதல் தெரியுதா?’’

‘‘வெற்றி தருகிற மமதை, அலட்சியம், திமிரு எல்லாத்தையும் பக்குவமா பாக்கெட்ல மடிச்சு வச்சு தூக்கிப் போட்டுட்டார் போல. அவ்வளவு எளிமையா திரிகிறார். அவர் எந்தப் பதவி கொடுத்தாலும் இப்படித்தான் இருப்பார். இப்படியே இருக்கணும். அதுதான் என் ஆசை. ஃப்ரண்ட்ஷிப், பிசினஸ்... இது இரண்டையும் குழப்பிக்காம அழகழகா பிரிச்சு வச்சுக்கிறார்.

ஒரு சகோதரத்துவம் பேச்சுல இருக்கு. கடுமையான வார்த்தை ஒண்ணு கூட வாயில இருந்து வராது. நடிகரா லட்சணமா இருக்காமல், எனக்கு செலவுகளைக் குறைக்க வழி சொல்லிக் கொடுக்கிறார். எதுக்கு இத்தனை செலவுனு அப்பப்போ கடிவாளம் போடுறார். நான் படத்தில் லாபம் பார்க்கணும்ங்கிற அக்கறை அவர்கிட்ட இருக்கு. எல்லா ஹீரோக்களுக்கும் இந்த மனோபாவம் இருக்காது. நல்லா செலவு பண்ணட்டும்னுதான் நினைப்பாங்க. அப்படி இல்லாம ஒரு வித்தியாசமான மனசு விஷாலுக்கு!’’‘‘கேத்ரீன் தெரஸாவுக்கு எப்படி ரோல்?’’

‘‘குட்டி குட்டியா அருமையான லவ் போர்ஷன்கள் நிறைய இருக்கு. நம்ம பிராண்ட் செல்போன் கலாட்டாக்களும் உண்டு. கேத்ரீன்தான் படத்தில மீனுக்குட்டி. கல்யாணம் வேண்டாம்னு பிரிஞ்சு நிற்கும்போது, அவங்க சேர்ந்து இருக்குற சூழல் வருது. அப்படி ஒரு ரூட் பிடிச்சிப் போகுது கதை. கருணாஸ் முதல் தடவையா விஷால் கூட நடிக்கிறார்.

நம்ம படத்திற்கு மூணாவது தடவை பாலசுப்பிரமணியெம் கேமராவைப் பிடிச்சிருக்கிறார். ஒரு காதல், குழந்தைகள் படம், ஆக்‌ஷன் - ஹாரர் - த்ரில்லர்னு வெவ்வேற வகையில் அவர் வரிசையா என்கிட்டயே மூணு படம் பண்ணிட்டார். ஹிப் ஹாப் தமிழாதான் மியூசிக். ஜாலியான பசங்க. தமிழ்ப் பற்று... பொழச்சிக்குவாங்க. மியூசிக் டைரக்டர்களுக்கான தோரணையே இல்லை. ஆனா, ‘சடசட’னு வேலையில கெட்டி. எனக்கு ஆதியை ஹீரோவா பார்க்கத் தோணுது. பார்க்கலாம்!’’

- நா.கதிர்வேலன்