நியூஸ் வே



சென்னை மழை விஜய் - அட்லி படத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அடாத மழையில் விஜய்யின் விறுவிறுப்பான ஃபைட் சீன்களை ஷூட் செய்திருக்கிறார்கள். பேருந்திலும் ஒரு சண்டைக் காட்சி எடுக்கிறார்கள். இங்கே அது சாத்தியமில்லை என்பதால் கோவா ரோடுகளில் படமாக்கப் போகிறார்கள்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஹிட்டைத் தொடர்ந்து மனீஷா யாதவிற்கு கிளாமர் கேரக்டர்களே தேடி வர, திகைத்து நிக்குது பொண்ணு. நடிப்பிற்கு இடையே பெங்களூருவில் பொட்டிக் ஷாப் ஒன்றையும் துவங்கியிருக்கிறார் மனீஷா.

பக்திப் பாடல்களுக்கென்றே வாழ்வை ஒப்புக்கொடுத்த பித்துக்குளி முருகதாஸ், தனது 95வது வயதில் மறைந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ‘கூலிங்கிளாஸ் வித் காவி உடை’ என்ற காம்பினேஷனுக்கு தனி அடையாளம் தந்த இவர், திருப்புகழைப் பாடுவதில் ஸ்பெஷலிஸ்ட். நமக்கெல்லாம் வெறும் பாடகராக மட்டுமே தெரியும் பித்துக்குளி, அக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக ஆங்கிலேயரால் தாக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தவர். அதனாலேயே கூலிங் கிளாஸ் அணிந்தார்!

கடை திறப்பு விழா, கம்பெனி திறப்பு விழாவென செம பிஸியில் இருக்கிறார் ‘குத்து’ ரம்யா. சமீபத்தில் மாண்டியாவில் ஒரு குக்கீஸ் நிறுவன திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரம்யா, கோதுமை, அரிசி இல்லாமல் செய்யப்படும் அந்த குக்கீஸ் பிஸ்கெட் நிறுவனத்தில் 50 விவசாயிகளின் பங்களிப்பு இருக்கிறது எனக் கேள்விப்பட்டு, மனம் குளிர பாராட்டினார்.

நம்ம ஊரில் மழை சற்று அதிகமாகப் பெய்தாலே ஆட்டோ கட்டணம் இரண்டு, மூன்று மடங்காகி விடும். தண்ணீர் சூழ்ந்த தெருக்கள் பக்கமாகவே கால் டாக்ஸிக்கள் வருவதில்லை. ஆனால் பாரிஸ் நகரில் நிகழ்ந்த சம்பவங்கள் நெகிழச் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தொடர் குண்டுவெடிப்புகளில் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். வார இறுதியை பலரும் கொண்டாடும் சூழலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, நகரையே ஸ்தம்பிக்கச் செய்தது. போக்குவரத்து சேவைகள் முடங்கின. ஹோட்டல்கள், மால்கள், கேளிக்கை அரங்குகள், விளையாட்டு மைதானங்களில் சிக்கிக்கொண்ட பலரும் எப்படியாவது வீடு திரும்பினால் போதும் என பீதியில் தவித்தனர்.

இந்த சூழலில் பாரிஸ் டாக்ஸி டிரைவர்கள் தங்கள் டாக்ஸி மீட்டரை ஆஃப் செய்துவிட்டு, பலரையும் இலவசமாக தங்கள் காரில் ஏற்றி, பத்திரமாக வீட்டுக்குக் கூட்டிப் போய்ச் சேர்த்தனர். வீட்டுக்குத் திரும்ப முடியாத பலரை, பாரிஸ் மக்கள் நிறைய பேர் தங்கள் வீடுகளுக்கு அழைத்துத் தங்க வைத்து, உணவும் அளித்தனர். இதற்காக ட்விட்டரில் ‘கதவு திறந்திருக்கிறது’ (#PorteOuverte) என ஒரு ஹேஷ்டாக்கை உருவாக்கி, ‘‘எங்கள் ஏரியாவில் யாராவது தவித்தால் எங்கள் வீட்டுக்கு வரலாம்’’ என அழைப்பு விடுத்தனர். யாரும் கூப்பிடாமலே மருத்துவமனைகளுக்குச் சென்று க்யூவில் நின்று பலரும் ரத்த தானம் செய்தனர். ‘மனிதம் என்றால் என்ன’ என கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னை மழையை தீவிரமாக ரசித்தவர்களில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஒருவர். தன் வீட்டை தண்ணீர் சூழ்ந்திருக்க, சைக்கிளில் மனைவியுடன் சென்று காய்கறி ஷாப்பிங் செய்து அசத்தியிருக்கிறார் மனிதர்.இந்த வருடத்தின் ஸ்பெஷல் வார்த்தை என ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக் குழு அறிவித்திருப்பது, ‘பிக்டோகிராப்’. அதாவது, ஆனந்தக் கண்ணீர் விடும் எமோஜி. மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து புள்ளிவிவரங்களை சேகரித்த ஆக்ஸ்ஃபோர்டு குழு, ‘2015ல் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான்’ எனக் கண்டறிந்து இந்தப் பெருமையைத் தந்திருக்கிறது.