மழை நாட்களின் ஹீரோக்கள்!



அலறும் ஆம்புலன்ஸுக்குக்கூட வழிவிடாமல் வாகனங்களில் விரையும் இரக்கமற்ற அரக்கர்கள் நிறைந்த நகரமாக சென்னையை இத்தனைக் காலம் நினைத்துக்கொண்டிருந்தவர்கள், இந்த மழையில் தங்கள் மதிப்பீடுகளை மாற்றிக்கொண்டிருப்பார்கள். வெள்ளத்தில் சிக்கியவர்களை கையறு நிலையில் இந்த அரசு தவிக்க விட, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை மக்களின் மனங்களில் அத்தனை ஈரம்!
 
பற்றாக்குறையை வைத்து கொள்ளை லாபம் பார்க்க, ஒரு பால் பாக்கெட்டை நூறு ரூபாய்க்கு விற்றவர்கள் மத்தியில்தான், ‘குழந்தைகளுக்கு பாலும் முட்டையும் இலவசம்’ என கொடுத்தவர்கள் இருந்தார்கள். தண்ணீரில் சிக்கிய காரைத் தள்ளி மீட்பதற்கு ஆயிரங்களில் பணம் கேட்டவர்கள் மத்தியில்தான், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ‘‘இங்க பள்ளம் சார், அந்தப் பக்கம் போங்க’’ என எல்லா ரோடுகளிலும் போக்குவரத்தை பல மணி நேரம் ஒழுங்குபடுத்திய இளைஞர்கள் இருந்தார்கள். மீட்பதும் உணவு தருவதும் ஒரு பக்கம். ‘பத்து பேர் தங்க இடம் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வாருங்கள்’ என தங்கள் வீடுகளையும் கடைகளையும் விரியத் திறந்து வைத்தவர்கள் நிறைய. ‘வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் என்னைக் கூப்பிடுங்கள்’ என தன் போன் நம்பரைக் கொடுத்திருந்தார், வனவிலங்கு நிபுணர் நிஷாந்த்.

‘மளிகை, காய்கறி வேண்டுமானால் கூப்பிடுங்கள்’ என இன்னொருவர் சொன்னார். ஏரியாவாரியாக டாக்டர்கள் பலரும் மருத்துவ ஆலோசனை தர தங்கள் எண்களைக் கொடுத்திருந்தார்கள். மழையில் சிக்கி பசியில் தவித்தவர்கள் ஒரு பக்கம்... இதற்காக சாப்பாடு ரெடி செய்து, அதை யாருக்குத் தருவது என தெரியாமல் விழித்தவர்கள் ஒரு பக்கம். இந்த இருவரையும் இணைக்கும் வேலையைச் செய்தார் நடிகர் சித்தார்த். வாகனங்களை ஏற்பாடு செய்வது, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்பது என சித்தார்த் தலைமையில் ஒரு இளைஞர் பட்டாளமே இரவும் பகலும் தூங்காமல் உழைத்தது. தங்கள் நட்சத்திர அந்தஸ்தை மறந்து இவர்களோடு பல இளம் கலைஞர்கள் வீதியில் இறங்கினார்கள்.



நூற்றுக்கணக்கான தனிநபர்களின் சேவைகள் நம்மை நெகிழ வைக்கும். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மிர் முகமது மேதி. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் 24 வயது இளைஞர். மழை நீரில் வாகனங்கள் பழுதடைந்து ராயப்பேட்டை பக்கம் யாரேனும் நின்றிருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளும்படி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் முகமது. அண்ணா சாலை தொடங்கி திருவல்லிக்கேணி வரை இவர் செய்தது இலவச பைக் சர்வீஸ்!

‘‘என் கூட நாசர், சோஹைல், ஃபாருக்னு மூணு நண்பர்கள். மெக்கானிக்கல் படிச்ச நாங்க இந்த வெள்ளத்துல எப்படி உதவ முடியும்னு யோசிச்சோம். என்னைத் தவிர மத்த எல்லாரும் மெக்கானிக்கா வேலை பார்க்குறாங்க. காசு, பணம் தரத் தேவையில்ல... இந்த நாட்களில் நம்ம சர்வீஸை இலவசமாக்கிடலாம்னு முடிவெடுத்தோம். இடுப்பளவு தண்ணியில வண்டி நின்னு போகும்போது மக்கள் ரொம்ப பயந்துபோய் கூப்பிடுவாங்க. உடனடியா நேர்ல போய், தண்ணியில இருந்து வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து அதுக்கு முதலுதவி செய்து வெற்றிகரமா ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தோம். முதல் நாள் மட்டுமே இப்படி 50, 60 பைக்குகளை சர்வீஸ் பண்ணினோம்!’’ என்கிறார் முகமது.

சொந்த ரத்தம் எங்கே இருந்தாலும் துடிக்கும் என நிரூபித்திருப்பவர் சிவகணேஷ். ஐதராபாத் ஐ.ஐ.டி மாணவரான இவர், சென்னை மக்கள் தொடர்பறுந்து தவித்த நேரத்தில் ரீசார்ஜ் நீரூற்றியவர். ‘‘உணவு, துணி, தங்குமிடம் எல்லாம் சென்னையிலயே நிறைய நண்பர்கள் செய்யிறாங்க. நாம இங்கிருந்து என்ன செய்ய முடியும்? அவசர காலத்துக்கு போன்ல பேலன்ஸ் இல்லாம தவிக்கிற கஷ்டத்தைப் போக்கலாமேனு இறங்கிட்டேன்!’’ என்கிற சிவா, மழை வெள்ளம் பாதித்த டிசம்பர் 1ம் தேதியே இந்த உதவியைச் செய்தார். மொபைல் ஆபரேட்டர்கள் சலுகைகள் அறிவித்ததெல்லாம் அடுத்தநாள்தான். ‘‘முதல் நாளே நான் முப்பது பேருக்கு ரீசார்ஜ் பண்ணினேங்க. எல்லாம் 20 ரூபாய் 30 ரூபாய்னுதான். ஆனா, அதுக்கே பலபேரும் குரல் தழுதழுத்து தேங்க்ஸ் சொன்னாங்க. ஆனா, ‘இந்த தகவல் உண்மையா? நிஜமாவே நீங்க ரீசார்ஜ் பண்றீங்களா?’னு விசாரிக்கிற கால்தான் நிறைய வந்துச்சு. இதை மிஸ்யூஸ் பண்றவங்களும் இன்னொரு பக்கம் இருந்தாங்க. அதை நினைச்சா சங்கடமாதான் இருக்கு. பட், இதெல்லாம் தவிர்க்க முடியாததுங்க!’’ என்கிறார் சிவா பக்குவத்தோடு.



போனில் பேல்ன்ஸ் இருந்தாலும் பேட்டரி சார்ஜ் இல்லாமல் தகவலற்றுப் போனார்கள் பலரும். இதற்கும் ஒரு உபாயம் தேடி வந்தது பெங்களூருவைச் சேர்ந்த ‘ப்ரேவ் நியூ வேர்ல்டு’ எனும் கம்யூனிகேஷன் நிறுவனம். செல்போன்களை சார்ஜ் செய்யும் பவர் பேங்க்குகளை பெங்களூரு முழுக்க மக்களிடம் சேகரித்து சென்னையில் விநியோகித்தார்கள் இவர்கள்.

‘‘சென்னையில 80 சதவீத இடங்கள்ல 3 நாளா கரன்ட் இல்ல. இதனால மின்சார தாக்குதல் குறைஞ்சது நல்ல விஷயம். ஆனா, ஆபத்தில் இருக்குறவங்க உதவி கேட்கக் கூட முடியாம போச்சு. யார் செல்லிலும் சார்ஜ் இல்ல. டோட்டலா தகவல்தொடர்பே கட். குடும்பத்தை எல்லாம் சென்னையில விட்டுட்டு எங்க ஆபீஸ்ல வொர்க் பண்ணினவங்க ஒவ்வொருத்தரும் பதறிட்டாங்க. எங்கேயோ பவர் பேங்க்கை தேடிப் பிடிச்சி சார்ஜ் போட்டு பேசின பிறகுதான் உயிரே வந்தது. இப்படித்தானே எல்லாருக்கும்? அதான் பவர் பேங்க் சேகரிக்கத் தொடங்கினோம். இருக்குறதைக் கொடுத்தவங்க நூறு பேர்தான் இருப்பாங்க. ஃபேஸ்புக்ல நாங்க போட்ட அறிவிப்பைப் பார்த்துட்டு வெளிநாட்டுல இருந்த பலரும் எங்க அட்ரஸுக்கு புது பவர் பேங்க்கை ஆன்லைன்ல புக் பண்ணிட்டாங்க. அதையெல்லாம் கலெக்ட் பண்ணி ஃபுல் சார்ஜ் ஏத்தி, உண்மையிலயே தேவைப்படுற மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்தோம்!’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் ஜூனோ சைமன்.

படகு கார்கள் வலம் வந்த சென்னை வீதிகளில் எல்லாம் நிஜப் படகே வலம் வந்த கால கட்டம். புறநகர் அபார்ட்மென்ட்களில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கானவர்களை மீட்க படகுகள் போதவில்லை. ஊரே தவித்துக் கொண்டிருந்தபோது ஒகேனக்கல்லில் இருந்து பரிசல்களைக் கொண்டுவந்து பயிற்சி பெற்ற டைவர்களையும் கூடவே அனுப்பி வைத்தது சென்னையைச் சேர்ந்த ஈஸ்ட் வெஸ்ட் ஃபார்மா நிறுவனம். ‘எங்களிடம் சகல மருத்துவ வசதிகளுடன் பத்து பரிசல்கள் மிச்சம் உள்ளன. தேவைப்படுகிறவர்கள் அழைக்கவும்’ என இவர்கள் போட்ட போஸ்ட் அந்தத் துயர கணத்தின் தேவாமிர்தம்.

‘‘எங்களுக்கு சொந்தமான சென்னை நேஷனல் மருத்துவமனையில உணவு, மருந்துப் பொருட்கள்னு எல்லாம் இலவசமா விநியோகிச்சோம். இந்த மாதிரி இயற்கைப் பேரிடர் நேரும்போது எல்லாரும் ஒரே விஷயத்தைச் செய்தா பலனில்லாம போயிடும். ‘நீ இதைச் செய்... நான் இதைச் செய்யிறேன்’னு பிரிச்சிக்கணும். அப்படி நாங்க பிரிச்சிக்கிட்ட விஷயம்தான் பரிசல். பெரிய ஃபைபர் போட்டுகளை விட பரிசல் வசதியானது. ஆழம் குறைவான இடங்கள்லயும் மிதக்கக் கூடியது. நிறைய பொருட்களை ஏத்திக்கிட்டுப் போகலாம். அதனாலதான் இதைத் தேர்ந்தெடுத்தோம். சென்னை முழுக்க 20 பரிசல்கள் மூலமா பல நூறு குடும்பங்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சேர்த்திருக்கோம்!’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.பி.மோகன்குமார்.

வேலூர் சி.எம்.சியைச் சேர்ந்த ராகுல், சென்னையில் வளர்ந்த பீகார் இளைஞர். யாருக்கு எந்நேரம் உதவி தேவைப்பட்டாலும் மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என ட்விட்டரில் தெரிவித்தார். ஒன்றரை நாளில் இவருக்கு வந்த போன்கால்கள் ஆயிரத்துக்கும் மேல்! ‘‘எங்க அப்பா அம்மா சென்னையிலதான் இருக்காங்க. அவங்களுக்கு வேலூரில் இருந்தே நான் போன்ல மருத்துவ ஆலோசனைகள் சொன்னேன். ‘இதைச் சொல்லக் கூட மத்தவங்களுக்கு ஆளில்லையே’னு சொன்னாங்க. அதனாலதான் போஸ்ட் போட்டேன். மழைத்தண்ணியால வயித்துப் போக்கு, சேத்துப்புண், குளிர் ஜுரம் இதெல்லாம்தான் அதிகம் பேருக்கு. அதுக்கு மருந்து கேட்டுதான் எக்கச்சக்க போன்!’’ என்கிறார் ராகுல் தட்டுத் தடுமாறிய தமிழில்! இயற்கைப் பேரிடர்களின்போது மக்களுக்கு எப்படி உதவ வேண்டும் என அரசாங்கத்துக்கு பாடம் எடுத்திருக்கிறார்கள் இவர்கள்.

- நவநீதன்