நினைவோ ஒரு பறவை 7



நா.முத்துக்குமார்

கல்யாணம் மாமா

‘கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை!’
- கவியரசு கண்ணதாசன்

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நல்ல வெயில் நாளில் கல்யாணம் மாமா செத்துப் போனதாக செய்தி வந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ஒலி உண்டு. அந்த ஒலிதான் அந்த சொல்லிற்குரிய வண்ணங்களையும், எண்ணங்களையும் மனதில் உண்டாக்குகிறது. சாதல் என்பதை ‘இறந்து போனார்’ என்றால் நெஞ்சுக்குள் ஒரு திடுக்கிடல். ‘மரணமடைந்தார்’ என்றால் முரட்டுத்தனமான ஒரு பயம். ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் பின்னணியில் ஊதுபத்தி வாசம். ‘இயற்கை எய்தினார்’ என்பதில், பறித்த பூவை அது பூத்த இடத்திலேயே திரும்ப வைப்பது போன்ற பிம்பம். ‘செத்துப் போனார்’ என்பதில் ஒரு சாமான்யத்தனம் கலந்து, செத்துப் போனவர் எளிமையும் யதார்த்தமுமாக மனதிற்கு நெருக்கமாகிறார்.
ஆக, கல்யாணம் மாமா செத்துப் போனார். அந்தத் தகவல் என்னை வந்தடைந்தபோது நான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஸ்டூடியோவில் அமர்ந்து பாடல் எழுதிக் கொண்டிருந்தேன்.

‘‘தன்னன்ன தன்னன்ன தானா இல்ல, சந்தம் இதுதான்- தனான தன்ன தனானா’’ - தம்பி ஜி.வி.பிரகாஷ் சொல்ல, ‘‘கனாவில் வந்த கனாவே’’ என்றேன். பாடல் முடிந்து கிளம்புகையில் தொலைபேசியில் கல்யாணம் மாமாவின் முகவரியை விசாரித்தேன். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்கிற வழியில் பெருநகருக்குப் பக்கத்தில் ஒரு கிராமம். வண்டியில் சென்று கொண்டிருக்கையில் நினைவுகள் புள்ளி புள்ளியாகத் திரண்டு, அந்தப் புள்ளிகள் கோடுகளாகி, அந்தக் கோடுகள் கல்யாணம் மாமாவின் ஞாபகத்தை வரைந்து கொண்டிருந்தன. மனிதர்கள் ஏன் செத்துப் போகிறார்கள்? பேருந்தின் ஜன்னலோரக் காற்றின் லயத்தில் கொஞ்சம் கண் அசந்து, சட்டென்று விழித்துப் பார்த்தால் பக்கத்தில் இருந்தவர் சென்ற நிறுத்தத்திலேயே இறங்கி விட்டதைப் போல, காலத்தின் காற்றில் தெரிந்தவர்களில் ஒவ்வொருவராகத் தொலைந்து போகிறார்கள்.

எங்கள் அப்பாவைப் பெற்ற ஆயா பிறந்து வளர்ந்தது, வந்தவாசிக்கு அருகில் உள்ள பெருநகர் கிராமம். கல்யாணம் மாமா ஆயாவிற்கு தூரத்து சொந்தக்காரர். ‘‘பங்காளிகள் வழியில் சித்தப்பா பையனோ? பெரியப்பா பையனோ? தம்பி முறை...’’ என்று ஆயா சொல்லும். அப்பாவை விட ஐந்தாறு வயதுதான் மூத்தவர் என்றாலும், அப்பா அவரை ‘மாமா’ என்றுதான் அழைப்பார். சிறுவர்கள் எங்களுக்கு அவர் என்றும் ‘கல்யாணம் மாமா’.

கல்யாணம் மாமாவின் தோற்றத்தை ஒரு வகைக்குள் அடக்கி விட முடியாது. சில சமயம் பனை மரங்களைப் போல ஒட்ட கிராப் வெட்டியிருப்பார். சில சமயம் நீண்ட முடி வளர்ந்து, தலையில் சடை சடையாகத் தொங்கும். பார்ப்பதற்கு நடிகர் ஜனகராஜைப் போலிருப்பார். எப்போதும் லுங்கி, சட்டை, தோளில் துண்டு, கையில் ஒரு துணிப்பை.

‘‘ஏன் மாமா? வேஷ்டி எல்லாம் கட்ட மாட்டீங்களா? எப்ப பார்த்தாலும் லுங்கியிலேயே வர்றீங்க?’’ என்றால், ‘‘ஊர் ஊரா அலையுறவன் நானு. லுங்கிதான் வசதி. மடிச்சிக் கட்டிக்கிட்டு மரத்தடியில படுத்துக்கலாம். அழுக்கும் தெரியாது!’’ என்பார் சிரித்தபடி
.
உண்மையில் கல்யாணம் மாமா ஒரு யாத்ரிகனைப் போல் ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்தார். ‘‘அவன் வாங்கி வந்த வரம் அப்படி, ஒரு எடத்துல நிக்க மாட்டான்!’’ என்று ஆயா அடிக்கடி அலுத்துக் கொள்ளும்.

கல்யாணம் மாமாவின் நிஜப் பெயர் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ‘கல்யாணம் மாமா’ என்பது அவருக்கு வந்து சேர்ந்த காரணப் பெயர். ‘‘இதுவரை அறுநூத்தி பத்து கல்யாணம் செஞ்சி வெச்சிருக்கேன்.

இப்பக்கூட நம்ம சம்பத்து பையன் முருகேசனுக்கு பொண்ணு பாக்கத்தான் போயிட்டிருக்கேன்!’’ என்று பெருமையாகச் சொல்வார்.



கல்யாணம் மாமா திருமணத் தரகர் கிடையாது. தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்கையில் அவர்களது பையன் அல்லது பெண் ஜாதகத்தை வாங்கிக் கொள்வார். அலைந்து திரிந்து ஐந்தாறு மாதங்களில் சரியான வரன் கொண்டு வந்து கண்முன் நிறுத்துவார். கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று சாதி மத பேதமின்றி அனைவருக்கும் வரன் பார்த்து, இடையில் எழும் மனஸ்தாபங்களை பேசித் தீர்த்து, திருமணம் முடியும் வரை உடனிருந்து, மணமக்களை வாழ்த்தி விட்டுத்தான் கிளம்புவார். கல்யாண வீட்டுக்காரர்கள் அவருக்கு ஏதாவது பணம் கொடுத்தால் வாங்க மாட்டார். ‘‘எனக்கு தெரிஞ்ச எடத்துல கை காட்டி வுட்டேன். இதுல எனக்கு ஒரு மனத்திருப்தி கெடைக்குது. காசு, பணம்லாம் வேணாம். எப்பவாவது உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடுங்க, போதும்!’’ என்பார்.

கல்யாணம் மாமா எப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்கு வருவார். ஒரு நான்கைந்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் யாரிடமும் சொல்லாமல் காணாமல் போய் விடுவார். அவர் வீட்டிற்கு வரும் நான்கு நாட்களும் எனக்கு திருவிழாவிற்குப் போனதைப் போல் சந்தோஷமாக இருக்கும்.

‘‘செய்யாறுல ஒரு பொண்ணு இருக்கு. உங்க சித்தப்பனுக்கு கால் கட்டு போட்டாதான் அடங்குவான். வா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்’’ என்று அழைத்துக் கொண்டு போவார். பேருந்து நிலையத்தில் விற்கும் இஞ்சி மரப்பாவிற்கு ஆசைப்பட்டு நானும் உடன் செல்வேன். ‘அது ஏன் எந்த பேருந்து நிலையத்தில் கேட்டாலும் இஞ்சி மரப்பா விற்பவர்களின் குரல் கரகரப்பாகவே இருக்கிறது?’ என்று ஆச்சர்யப்பட்டுப் போவேன்.பேருந்தில் ஏறியதும் அருகில் இருப்பவரிடம் கல்யாணம் மாமா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கல்யாணத்திற்கு தயாராக இருக்கும் அவர்கள் வீட்டுப் பெண்கள், பிள்ளைகள் பற்றி விசாரிக்கத் தொடங்கி விடுவார். அவருடன் செல்லும் ‘பெண் பார்க்கும் படலம்’ இன்னும் அதகளமாக இருக்கும்.

‘‘பையன் பேங்க்குல மேனேஜரா இருக்கான்!’’ என்பார்.  

‘‘மாமா, தப்பா சொல்றீங்க! சித்தப்பா கிளார்க் வேலைதான் செய்யுது. அதுவும் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை’’ என்று நான் அவர் காதில் ரகசியமாகச் சொல்வேன்.

‘‘வுட்றா. பொண்ணுகூட எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கு. உங்க சித்தப்பாகிட்ட ‘காலேஜ் முடிச்சிடுச்சு’ன்னு சொல்லலையா? கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். எல்லாம் கல்யாணம் ஆனா அட்ஜெஸ்ட் பண்ணிப்பாங்க!’’ என்பார். மாமாவின் உளவியல் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நானறிந்து மாமா நடத்தி வைத்த கல்யாணங்கள் என்றும் சண்டையில் முடிந்ததில்லை.

பால்யத்தில் மாமாவை நாங்கள் அப்படிக் கொண்டாடினோம். ‘மருதமலை மாமணியே முருகய்யா’ என்று ஸ்பீக்கர் கட்டி அழைத்து, மணல் கொட்டி வைத்த தரையில் அமர வைத்து, கருப்பு வெள்ளை படம் காட்டும் சீதாலட்சுமி டாக்கீஸுக்கு மாமாவுடன் போவது அலாதியான அனுபவம். வீட்டில் தேடி எடுத்து ஒரு கோணியை தன் பையில் போட்டு எடுத்து வருவார். கோணியை மண் தரையில் விரித்து அதன் மேல் அமரச் சொல்வார். ‘‘நிறைய பேரு வெத்தலப் பாக்கு எச்சிலை துப்பி வெச்சிருப்பாங்க. அதனாலதான் இந்தக் கோணி’’ என்பார்.

இடைவேளையில் நிறைய பேர் வேட்டிக்கு பின்புறம் சிவப்புக் கறையுடன் எழுகையில் மாமாவின் அறிவை வியப்போம். மழைக்காலங்களில் வேகவதி ஆற்றில் மீன்பிடிக்கக் கூட்டிச் செல்வார். முட்டியளவு தண்ணீரில் நின்று சேலையை விரித்து மீன் பிடிப்போம். சின்னச் சின்ன மீன்களுக்கும், தலைப்பிரட்டை எனப்படும் தவளைக் குஞ்சுகளுக்கும் வித்தியாசம் காட்டுவார். பின்பு, பிடித்த மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றிலேயே விட்டுவிடுவார். ‘‘ஓடுற மீனை நிறுத்தக்கூடாது. அதும் போக்கிலேயே விட்டுடணும்’’ என்பார். ஏனோ அப்போது அவர் கண்கள் கலங்கி இருக்கும்.

கல்யாணம் மாமாவின் கிராமம் வருகிற வரை என் நினைவுகள் அவரைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தன. மாமாவை கடைசியாகப் பார்த்தது என் திருமணத்திற்கு முன்பு. எனக்காக நாலைந்து இடங்களில் பெண் பார்த்தார். பின்பு அவரே அந்த இடங்களை வேண்டாம் என்று நிராகரித்தார். அம்மாவைப் பெற்ற ஆயா பார்த்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன். கல்யாணம் மாமா என் திருமணத்திற்கு வரவில்லை. அன்று ஊரில் இல்லையா... அல்லது, என் மீது வருத்தமா தெரியவில்லை.

எல்லா சாவு வீடுகளையும் போலவே மாமாவை ஒரு பெஞ்ச்சில் படுக்க வைத்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். ஷாமியானா பந்தல் போட்டு, பிளாஸ்டிக் நாற்காலிகளில் உறவினர்கள் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள். மாமாவின் காலடியில் ரோஜா மாலையை வைத்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். ஹார்ட் அட்டாக்காம். உறக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்க வேண்டும். மாமாவின் முகம் புன்னகைத்த மாதிரி இருந்தது.

அருகில் இருந்த வயதான உறவினரிடம் கேட்டேன், ‘‘துக்கம் விசாரிக்கணும். மாமாவோட பசங்க எங்க இருக்காங்க?’’
அவர் சொன்னார்... ‘‘ஊர் ஊரா திரியுற நாடோடிக்கு எவன் பொண்ணு கொடுப்பான்? கடைசி வரை அவனுக்குக் கல்யாணமே ஆகலை!’’

"கல்யாண வீட்டுக்காரர்கள் அவருக்கு ஏதாவது பணம் கொடுத்தால் வாங்க மாட்டார். ‘‘காசு, பணம்லாம் வேணாம். எப்பவாவது உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடுங்க, போதும்!’’ என்பார்."

"பிடித்த மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து  ஆற்றிலேயே விட்டு விடுவார். ‘‘ஓடுற மீனை நிறுத்தக்கூடாது. அதும் போக்கிலேயே  விட்டுடணும்’’ என்பார். ஏனோ அப்போது அவர் கண்கள் கலங்கி இருக்கும்."

(பறக்கலாம்...)