சீஸன் சாரல்



பாபனாசம் அசோக்ரமணி

நவம்பர் கடைசியில் தொடங்கி பொங்கல் திருநாள் வரை தொடரும் சென்னை இசைத் திருவிழா பாரம்பரியமானது. இந்த ஆண்டு சீஸன் துவங்குவதற்கு முன்பே மழை கோர தாண்டவம் ஆடித் தீர்த்திருக்கிறது. பல இசைக்கலைஞர்களின் வீடுகளையும் வெள்ளம் பாதித்திருக்கிறது. சில சபாக்கள் கச்சேரிகளை நடத்தும் அரங்குகளிலும் வெள்ளம். இப்படிப்பட்ட சூழலில் இசைத் திருவிழா அவசியமா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. பல சபாக்கள் கச்சேரிகளைத் தள்ளி வைத்திருக்கின்றன. பாம்பே ஜெய ‘இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆண்டு பாடப் போவதில்லை’ என அறிவித்திருக்கிறார். ‘டிசம்பர் வரை என்னால் பாட முடியாது’ என்று சொல்லியிருக்கிறார் விஜய்சிவா. இப்படி இன்னும் சிலர் முடிவெடுத்துள்ளனர்.

எனினும் இந்த சீஸனை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த பலர் முன்வந்திருக்கிறார்கள். மழையின் கோர தாண்டவத்திலிருந்து மீண்ட சென்னை ரசிகர்களின் மனதிற்கு ஆறுதல் தர சங்கீதத்தால்தான் முடியும். இசை அஞ்சலி மூலமாக பல காயப்பட்ட நெஞ்சங்களை ஆற்ற முடியும் என்பது  நிச்சயம். பல கலைஞர்கள் இந்த இசை நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் சன்மானத்தை,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்க முன்வந்திருக்கிறார்கள். அடியேனும் அந்த முடிவில்தான் பாட  இருக்கிறேன்.

மியூசிக் அகாடமி உள்ளிட்ட ஒன்பது பெரிய சபாக்கள், தாங்கள் திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சிகளை நடத்த முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். டிசம்பர் சீஸன் என்பது வளரும் கலைஞர்கள் பலருக்குத் தங்கள் திறமையை நிரூபிக்கவும், எளிய பக்கவாத்தியக் கலைஞர்கள் பலருக்கு வாழ்வாதாரம் பெறவுமாக இருக்கும் களம். அவர்களுக்காக வருண பகவான் கருணை காட்டுவான் என நம்புவோம்.   
இந்த ஆண்டு ‘சங்கீத கலாநிதி’ விருது பெறப் போகும் சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி. அந்த மழையிலும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபையின் ஆதரவில் நாரத கான சபையில் நடந்த கச்சேரிக்கு ரசிக வெள்ளம். அவருடைய சங்கீதம் ரசிகர்களைக் கட்டிப் போட்டு, இந்த இசை நிச்சயமாக வரப்போகும் பல கச்சேரிகளில் ரசிகர்கள் மனதை நிம்மதி பெறச் செய்யப் போகிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.



ரீதிகெளளை வர்ணத்துடன் சஞ்சய் கச்சேரி ஆரம்பம். நாகை முரளிதரன் வயலின், கூடவே பாடியது போல ஒரு பிரமை. கீர்த்தனைகளைத் தேடித் தேடிப் பாடுவது சஞ்சயின் வழக்கம். செங்கல்வராய சாஸ்திரியின் நாட ராக கீர்த்தனை அருமை. ‘தர்பார்’ ராகத்தை விஸ்தாரப்
படுத்தியபோது, ‘சபை’யே நாதத்தில் மூழ்கியிருந்தது. ‘ வேணுகோபால’ என்ற கோடீஸ்வர ஐயர் கீர்த்தனை ஒசத்தி.

மன்னார்குடி ஈச்வரன் மிருதங்கமும், கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சிராவும், ‘ராஜ’பாட்டையாக வலம் வந்தது கச்சேரி முழுக்க. ‘ தக்ஷணாமூர்த்தி’ கீர்த்தனையைப் பாடி, கீரவாணி ராகத்தில் தன்வயப்பட்டார் சஞ்சய். ராகத்தை முழுவதுமாக, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, மறுபடியும் கோர்த்து மாலையாக வழங்குவதில் சஞ்சய்க்கு நிகர் அவரே. ‘கலிகியுண்டே’ கீர்த்தனை, ஸ்வரம்,  தனி ஆவர்த்தனம் எல்லாம் மெய்மறக்கச் செய்தது. சஞ்சய் கச்சேரியில்  RTP இல்லாமலா? ‘நாக’ஸ்வராளி ராகம், தானம், பல்லவி எல்லாம் சஞ்சய் பாட, ரசிகர்கள் ‘மகுடி’க்குக் கட்டுப்பட்டவர்கள் போல  இரண்டரை மணி நேரம் இருந்தார்கள்.

அதே கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில், நாரத கான சபையில் நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி. நாகை முரளிதரன் வயலின், முஷ்ணம் ராஜாராவ் மிருதங்கம், கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சிரா. ஸாவேரி ராக வர்ணம், மற்றும் நாட ராகத்தில் ‘கமல மலரிதழ்’ என்ற சொந்த சாகித்யம் அருமையோ அருமை.

‘ நாரத’ என்ற கானடா ராக கீர்த்தனை, ‘பரம பாவன’ என்ற பூர்வி கல்யாணி ராக கீர்த்தனை, ‘பஜன ஸேய’ என்ற கல்யாணி ராக கீர்த்தனைகள் எல்லாம் சந்தானம் ஸ்டைல். ராஜாராவ் மிருதங்கம் நாதத்தில் மிளிர்ந்தது. அருமையான கச்சேரி. வரப் போகும் இசை விழாக்களின் இன்னிசை நிகழ்ச்சியால், இசை அஞ்சலி செலுத்த இருக்கும் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்க ரசிகர்கள் வந்து அனைவரும் சேர்ந்து சூரிய பகவானை பிரார்த்திப்போமாக!

படங்கள்: புதூர் சரவணன்